ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம்! தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம்! தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்!


தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!


மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் அவர்கள், இன்று (31.07.2015) கன்னியாகுமரி மாவட்டத்தில், தொலைப்பேசி கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்குக் கொண்டு வருமாறும், டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூடுமாறும், தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து முழக்கங்கள் எழுப்பிப் போராடியிருக்கிறார்.

சுற்றியுள்ள மக்கள், காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தெரிவித்தும், மிக மிக தாமதமாக காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அங்கு வந்து, 5 மணி நேரம் கழித்து, அவரை கீழே இறக்கியிருக்கிறார்கள். மயங்கிய நிலையிலிருந்த சசிபெருமாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, சசிபெருமாள் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

மக்கள் மீது அக்கறை கொண்டு மதுவிலக்குப் போராட்டம் நடத்தி வந்த ஈகி சசிபெருமாளின் இந்த மரணத்திற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மனித உயிர்கள் மீது அக்கறையற்ற ஒரு நிர்வாகம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியத்தை, மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறையின்றி இருந்த வன்நெஞ்சப் போக்கை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மதுவிலக்குப் போராளி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிபெருமாள் சாவுக்குக் காரணமான தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், இனிமேலாவது மதுவிலக்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று வலியுறுத்தியும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், தோழமை இயக்கங்களோடு கலந்து பேசி, அறவழியில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரும் கட்சித் தலைவர்கள், உடனடியாக கலந்து பேசி, சசிபெருமாள் மறைவுக்கு துயரம் வெளிப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசைக் கண்டிப்பதுடன், அது உடனடியாக மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய முழுஅடைப்பு செய்ய, கலந்தாய்வு நடத்தி உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.