தீவிர மீத்தேன் திட்டமான ஷேல் திட்டத்தை முறியடிப்போம்! - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
தீவிர மீத்தேன் திட்டமான ஷேல் திட்டத்தை முறியடிப்போம்!
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
காவிரிப் படுகையில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) பாறை எண்ணெய் மற்றும் பாறை எரிவளி (ஷேல் எண்ணெய் மற்றும் ஷேல் வாயு) எடுக்க சுற்றுச்சூழல் இசைவுக் கேட்டு இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருக்கும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.
ஷேல் வாயு என்பது முதன்மையாக மீத்தேன் எரிவளிதான். மீத்தேன் எடுப்பதற்கு பயன்படுத்தப் படும் அதே நீரியல் விரிசல் தொழில்நுட்பம் தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. மீத்தேன் எடுப்பதற்கு 2000 அடிவரை நிலத்தைத் துளையிட்டு, அதில் மணலையும் 600க்கும் அதிகமான நச்சு வேதிப்பொருள்களையும் சேர்த்து பல்லாயிரம் லிட்டர் தண்ணீரில் கரைத்து அக்கரைச்சலை உள்ளே மிகை அழுத்ததில் அனுப்புவார்கள்.
சில நூறு அடிகளுக்குப் பிறகு பக்கவாட்டிலும் துளைத்துக் கொண்டு அதிலும் இக்கரைச்சலை செலுத்துவார்கள். இவ்வாறு மிகை அழுத்தத்தில் செலுத்தப்படும் கரைச்சலின் மூலமாக நிலத்திற்கு அடியில் உள்ள நிலக்கரி படிமங்களை நொறுக்கி, அப்படிமங்களுக்கு இடையில் சிக்கியுள்ள மீத்தேனை வெளியே எடுப்பார்கள். இந்த வேதிக் கரைச்சலை மீண்டும் வெளியே எடுத்து மேல் மட்ட தண்ணீரில் கழிவுகளாக விடுவார்கள்.
இவ்வாறு காவிரிப் படுகையின் கால்வாய் நீரும் பாழாகி, நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு, ஒட்டு மொத்த நீரும் நிலமும் காற்றும் நஞ்சாகி, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் இரண்டு கோடி மக்களும் அகதிகளாக வெளியேற நேரிடும். காவிரி நீரைக் குடிநீருக்கு நம்பியுள்ள 19 மாவட்ட மக்களும் குடிக்க நீரின்றி அல்லல் படுவார்கள்.
மீத்தேன் திட்டமே இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தும் என்றால், அதைவிட பல மடங்கு ஆழத்திற்கு அதாவது சுமார் இரண்டு கிலோமீட்டர் வரையிலும் ஆழத்திற்கு குழாய் பதித்து இதே நீரியல் விரிசல் முறையில் ஷேல் எண்ணேய் மற்றும் ஷேல் எரிவளி எடுப்பது மிக பேராபத்தாக முடியும்.
ஒரு புறம் காவிரி மறுக்கும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு துணையாய் நின்று முற்றிலும் வறண்ட பகுதியாக காவிரிப் படுகையை சீரழித்து வருகிறது இந்திய அரசு. இப்போது மீத்தேன் மற்றும் ஷேல் வாயு திட்டத்தின் மூலம் காவிரிப் படுகையை முற்றிலும் பாலைவனமாக்கி தமிழ்நாட்டை குடிநீருக்கு தவிக்கும் மாநிலமாக மாற்ற இந்திய அரசு சதி செய்கிறது.
கடந்த 2013, அக்டோபர் 14ஆம் நாள் இந்திய பெட்ரோலிய அமைச்சகம் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் காவிரிப் படுகையில் இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் ஷேல் எண்ணெய் மற்றும் ஷேல் வாயுவை நீரியல் விரிசல் முறையில் எடுத்துக் கொள்ள இசைவு வழங்கியது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 35 இடங்களில் ஷேல் எண்ணெய் மற்றும் ஷேல் எரிவளி எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடந்த 29.06.2015 அன்று ஓ.என்.ஜி.சி. கடிதம் அனுப்பியுள்ளது.
ஆயினும் இந்த உண்மையை அடியோடு மறைத்து இது குறித்த ஒரு வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டமே தங்களுக்கு இல்லை என அஞ்சாமல் பொய் கூறியது. ஷேல் வாயு என்பதே முதன்மையாக மீத்தேன் தான்.
தமிழர்களை தங்கள் வரலாற்று தாயகத்திலிருந்து ஏதிலிகளாக வெளியேற்றுவதற்கு இந்திய அரசு தீட்டியுள்ள திட்டத்தில் முக்கிய கூறு தான் ஷேல் திட்டம் ஆகும்.
ஒருபக்கம் காவிரியை மறுத்து, மறுபக்கம் காவிரிப் படுகையை பாலைவனமாக்கும் ஷேல் திட்டத்தை செயல்படுத்துவது இந்திய அரசின் சதியை வெளிப்படுத்துகிறது.
இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி.யின் ஷேல் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
காவிரிப் படுகையை பாலைவனமாக்கி தமிழினத்தின் வரலாற்றுப் பெருமிதச் சின்னங்களை அழித்து, தமிழர் தாயகம் பறிக்கும் இந்திய அரசின் ஷேல் திட்டத்தை எதிர்த்து ஒட்டு மொத்தத் தமிழர்களும் வீறு கொண்டு எழ வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ் இனத்தை அழைக்கிறது.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Comment