ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை!”பேராசிரியர் இராமானுஜம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்!

“நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை!”பேராசிரியர் இராமானுஜம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்!
நவீன நாடகத்தின் தென்னகத் தந்தையாக விளங்கும் பேராசிரியர் செ. இராமானுசம் அவர்கள் திடீர் மாரடைப்பால் கடந்த 07.12.2015 அன்று தஞ்சாவூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையின் தலைவராக இருந்து நாடகத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த இராமானுசம் அய்யா அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று (20.12.2015) – ஞாயிறு மாலை 6 மணிக்கு, தஞ்சை பெசண்ட் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையின் மேனாள் தலைவர் முனைவர் மு. இராமசாமி அவர்கள் தலைமை தாங்கினார். இராமானுசம் அய்யா அவர்களின் படத்தை புகழ்பெற்ற நாட்டிய கலை வல்லுநரும் அரங்கம் அறக்கட்டளை தலைவருமான முனைவர் அனிதா ரத்தினம் திறந்து வைத்தார்.
காந்திகிராம பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் மு. குருவம்மாள், புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவர் முனைவர் இரா. இராசு, புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியர் முனைவர் வ. ஆறுமுகம், புதுவை குழந்தைகள் நாடக ஆசிரியர் - நடிகை முனைவர் காவலியே காந்திமேரி, நாடகச் செயற்பாட்டாளர் சென்னை பிரளயன், திருவனந்தபுரம் அரங்க பிரசாத்ஈ குழந்தைகள் நாடக அகாதமியைச் சேர்ந்த திருவாட்டி கீதா அரிகிருஷ்ணன், திரைப்பட நடிகையும் நவீன நாடகக் கலைஞருமான திருவாட்டி கலைராணி, பெண்ணிய நாடகச் செயற்பாட்டாளர் முனைவர் அ. மங்கை, கேரள நாடக ஆசிரியர் மற்றும் இயக்குநர் பி.வி. கோபிநாதன், மாற்று நாடக இயக்கம் திருப்பத்தூர் முனைவர் பார்த்திப ராஜா, நாடகச் செயற்பாட்டாளர் கே.எஸ். கருணா பிரசாத், மொழியியல் அறிஞர் முனைவர் கி. அரங்கன், பேராசிரியர் இராமானுசம் அவர்களின் இளைய மகள் வனிதா உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர். பேராசிரியரின் துணைவியார் மற்றும் பேரக் குழந்தைகள் உள்ளிட்ட உறவினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் இராமானுசம் அய்யா அவர்கள் அரங்கேற்றம் செய்த “வெறியாட்டம்”, “நாற்காலிக்காக“, “கைசிக நாடகம்”, “இராமானுஜர்” உள்ளிட்ட நாடகங்களில் அவரது ஆளுமை பற்றி பேச்சாளர்கள் குறிப்பிட்டுக் காட்டினர். வெளியிலிருந்து புதிய கருத்துகளை – புதிய போக்குகளை ஏற்றுக் கொள்ளும்போது, நமது மண்ணின் மரபுக்கேற்ப மாற்றித்தான் அதை மக்களுக்குத் தர வேண்டும் என்ற இராமானுசம் அவர்களின் படைப்புத் திறனை அனைவரும் பாராட்டினர். அவருடைய பன்முக ஆற்றலைப் பேச்சாளர்கள் வெளிப்படுத்தினர்.
நவீன நாடகத்தின் தந்தையாக விளங்கும் இராமானுசம் அவர்களுக்கு, ஆண்டுதோறும் அவர் நினைவாக நாடக விழா நடத்த வேண்டும் என்ற கருத்தையும், பல்கலைக்கழகங்களில் அவர் பெயரால் அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்ற கருத்தையும் பலர் பகிர்ந்து கொண்டனர்.
ஏராளமான நாடக இயக்குநர்களயும் நடிகர்களையும் நடிகைகளையும் உருவாக்கி, மாபெரும் சாதனை படைத்துள்ள அய்யா இராமனுசம் அவர்களுக்கு, நடுவண் அரசு பத்ம விருது ஏதுவும் தராதது வருத்தத்திற்குரியது என்று பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.
மேனாள் நடுவண் அமைச்சர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மேனாள் தமிழ்நாடு அமைச்சர் திரு. வி.ந.மீ. உபயதுல்லா, தஞ்சை அ. இராமமூர்த்தி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களும் வந்திருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் நாடகத்துறைப் பேராசிரியர் கு. முருகேசன், மேனாள் மொழியியல் துறை தலைவர் முனைவர் கி. அரங்கன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் தோழர் நா வைகறை, பேராசிரியர் கார்த்திகேயன், பேராசிரியர் இராமானுசம் அவர்களின் நாடக மாணவர் விஜயகுமார், தஞ்சை நகரத்தின் நாடக முன்னோடி இராசமாணிக்கம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நிகழ்வில், அரங்கு நிறைந்து வெளியிலும் நின்று கேட்கும் அளவிற்கு மக்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து நாடகக் கலைஞர்களும், தஞ்சை பகுதியிலிருந்து கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாக வந்திருந்தனர்.

செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.
 
பேச: 9841604017, 7667077075
முகநூல்: fb.com/tha.ka.e.pe
இணையம்:http://tamizhkalai.blogspot.in

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.