ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழீழ ஏதிலியர் உரிமைக்காக பத்து இலக்கம் கையெழுத்துகள் பெறும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்குகிறது! சென்னை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பு!

தமிழீழ ஏதிலியர் உரிமைக்காக பத்து இலக்கம் கையெழுத்துகள் பெறும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்குகிறது! சென்னை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பு!


தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள் தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக்காக ஒன்றுபட்டு, “தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
 

அம்பேத்கர் சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், குமுக விடுதலைத் தொழிலாளர்கள், சிபி (எம்-எல்) மக்கள் விடுதலை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி, தமிழர் நலம் பேரியக்கம், தமிழர் விடுதலைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இக்கூட்டமைப்பில் ஒன்றிணைந்துள்ளன.
 

கூட்டமைப்பின் தலைவராக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி அவர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தந்தை பெரியார் தி.க. தலைவர் தோழர் கோவை. கு. இராமகிருட்டிணன் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழுவும், கூட்டமைப்பில் உறுப்பு வகிக்கும் ஒவ்வொரு அமைப்பைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் இதற்கென அமைக்கப்பட்டுள்ளன.
 

இக்கூட்டமைப்பின் செயல்திட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்பு, இன்று (22.08.2016) காலை சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்றது.
 

கூட்டமைப்புத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி (தி.வி.க.), தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பெ. மணியரசன் (த.தே.பே.), ஒருங்கிணைப்புக் குழுத் தோழர்கள் கரு. அண்ணாமலை (த.பெ.தி.க.), செந்தில் (இளந்தமிழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), தமிழ்நேயன் (தமிழ்த் தேச மக்கள் கட்சி), கண்ணன் (மா.லெ. மக்கள் விடுதலை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

கூட்டமைப்பு குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்தியாளர் குறிப்பு:
 

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள் தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக்காக ஒன்றுபட்டுள்ளோம். இலங்கை அரசுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய பல்வேறு பாதிப்புகளிலிருந்து தப்பி இலட்சக்கணக்கான ஈழ மக்கள் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளனர்.
 
தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் போராடுகிற நாம் நம் மண்ணில் திறந்த வெளி முகாம்களிலும் சிறப்பு முகாம்களிலும் வாழ்கிற அம்மக்களின் உரிமைகளுக்காகக் காத்திரமான மக்கள் இயக்கங்களை முன்னெடுக் கடமைப்பட்டுள்ளோம்.
 

தமிழீழத்திற்காக நாம் நடத்துவது விடுதலைக்குத் துணை செய்யும் ஆதரவுப் போராட்டங்களே! ஆனால் இங்குள்ள தமிழீழ ஏதிலியர்கள் தமக்கான கோரிக்கைளைத் தாமே முன்னெடுத்துச் செல்வதற்கான சனநாயக வெளி இல்லாது புழுக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
 

இறுக்கம் தளர்ந்து அவர்களுக்கான கோரிக்கைகளைப் பொதுச் சமூகத்திடம் முன்வைத்து பரந்த அளவில் மக்கள் கவனத்தைத் தம் பக்கம் திருப்பத் தமிழீழ ஏதிலியர்க்கு இந்நாட்டுக் குடியுரிமை வேண்டும். நாளை அவர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்புள்ளதாலும் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பில் பங்குபெறும் தேவையைக் கருத்தில் கொண்டும் இடைக்காலக் குடியுரிமை கோருகிறோம். இந்திய அரசு அண்மையில் குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வடிவை நாடாளுமன்ற பொறுப்புக் குழுவிற்கு அனுப்பியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு மேல் இந்நாட்டில் தங்கியுள்ள அண்டை நாடுகளான வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஏதிலியர்க்கு இந்தியக் குடியுரிமை வழங்க மொழிந்துள்ளது. இப்பட்டியலில் இலங்கையைச் சேர்க்க வேண்டும் எனக் கோரப் பொருத்துமான அமைப்பு வடிவம் எமது கூட்டமைப்பு எனக் கருதுகிறோம். இப்படிப் பலவகையில் இக்கூட்டமைப்பு காலத்தின் தேவை என்றே கருதுகிறோம்.
 

இந்தக் கோரிக்கையோடு அவர்களின் கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை, மனித உரிமை, சிறப்பு முகாம் மூடல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். அதற்குத் தொடர்ச்சியான மக்களியக்கம் நடத்துவதன் மூலம் கோரிக்கைகளை அரசுகளிடம் கொண்டு சேர்த்து வென்றெடுக்க தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் - ஆர்வலர்கள், திரைத்துறையினர், வழக்கறிஞர்கள், முன்னாள் இன்னாள் ஆட்சியர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் அமைப்புகள், திருநங்கை அமைப்புகள் , தமிழக மக்கள் அனைவரின் ஆதரவை வேண்டுகிறோம்.
 

தமிழ் மக்களிடம் பத்து இலக்கம் கையொப்பங்களைப் பெறும் மக்கள் இயக்கத்தை, வரும் ஆகத்து 27 (27.08.2016) காரிக்கிழமை மாலை 3 மணிக்கு மெரினா கடற்கரையில், கூட்டமைப்பின் தலைவர், தலைமைக் குழு, அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கும் நிகழ்வில் தொடங்கி வைக்கப்படும். இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் கையொப்ப இயக்கம் தொடங்கி நடத்தப்படும். பத்து இலக்கம் கையொப்பம் பெறும் வகையில் கூட்டமைப்பு சார்பில் தொடர்ச்சியான மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும்.
 

கையொப்ப இயக்கக் கோரிக்கைகள்:

*     இந்திய அரசே! தமிழக அரசே!.
*     தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இடைக்காலக் குடியுரிமை வழங்குக! 
*     ஏதிலியர் சிறப்பு முகாம்களைக் கலைத்திடுக! 
* தமிழீழ ஏதிலியர் வாழ்வில் காவல் துறை, வருவாய்த் துறை     அத்துமீறல்களைத்  தடுத்திடுக! 
*     தமிழீழ ஏதிலியரின் கல்வி, வேலைவாய்ப்புத் தடைகளை நீக்குக!
*     இலங்கை திரும்ப விரும்பும் ஏதிலியர்க்குத் தண்டம் விதிப்பதைக் கைவிடுக!

 
செய்தியாளர் சந்திப்பில், புலவர் இரத்தினவேலவர், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் அருளேந்தல் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.