ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென்று இந்திய அரசுக்கு இன்று (20.09.2016) உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத் தகுந்த தீர்ப்பு! மிகவும் காலம் தாழ்த்தப்பட்ட முடிவு என்றாலும் இன்றைக்காவது இம்முடிவு உச்ச நீதிமன்றத்தில் வந்ததே என்று நாம் மன நிறைவடையலாம்.

நேற்று (19.09.2016) காவிரி மேற்பார்வைக் குழு நடுநிலை தவறி, கர்நாடகச் சார்போடு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட அளித்த முடிவை இன்று உச்ச நீதிமன்றம் ஓரளவு மாற்றி 21.09.2016 முதல் 27.09.2016 வரை 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டிருப்பதும் ஓரு வகையில் ஆறுதல் தருகிறது.

இப்பொழுது, பா.ச.க. நடுவண் அரசு இந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே பக்ராநங்கல் அணையில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரிய முன்மாதிரியைப் பின்பற்றி, காவிரி மேலாண்மை வாரியம்  அமைத்திட வேண்டும் என்று துல்லியமான வழிகாட்டுதல்களுடன் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு வரையறைகள் வழங்கியுள்ளது. இந்திய அரசு அந்த வரையறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இத்தீர்ப்பையொட்டி, கர்நாடகத்தில் தமிழர்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு நேராமல் பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.

கர்நாடகத் தமிழர்களின் பாதுகாப்பிற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் வலுவாகச் செய்திட இந்திய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். விழிப்புணர்வோடு தமிழ்நாடு அரசு கர்நாடக நகர்வுகளைக் கண்காணிக்க வேண்டும்.

பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு
நாள்: 20.09.2016

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.