ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் சென்னை இந்திய அரசு வருமானவரி அலுவலகம் முற்றுகை! நூற்றுக்கணக்கானோர் கைது!

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் சென்னை இந்திய அரசு வருமானவரி அலுவலகம் முற்றுகை! நூற்றுக்கணக்கானோர் கைது!
 உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரைத் திறந்து விட மறுத்து, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி - தமிழர்களின் உடைமைகளை சூறையாடிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்தும், சென்னையிலுள்ள இந்திய அரசு வருமானவரி அலுவலகம் இன்று (16.09.2016) முற்றுகையிடப்பட்டது.

காவிரி உரிமைக்காக தமிழ்நாடு முழுவதும் வணிகர்களும் உழவர்களும் நடத்தும் முழு அடைப்பு நடந்து வரும் நிலையில், காவிரி போராட்டக் குழு சார்பில், தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி வசூல் அலுவலகம், திருவாரூர் ஓ.என்.ஜி.சி. அலுவலகம், நாகை இந்திய அரசு பெட்ரோலிய நிறுவனம் உள்ளிட்ட தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, காவிரி போராட்டக் குழு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இந்திய அரசின் வருமான வரி வசூல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் தோழர் ஆவல் கணேசன், தமிழர் முன்னணி வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே! தமிழ்நாட்டில் வரி வசூலிக்காதே!”, “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களுடன் ஆவேசமாக எழுப்பிக் கொண்டு பேரணியாகச் சென்ற தோழர்களை, வருமானவரி அலுவலகத்தின் வாயிலில் தடுத்து நிறுத்திக் காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து முடங்கியது.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தோழர்கள் சத்தியா, செழியன், செ. ஏந்தல், மணி, வடிவேலன், முத்துக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கைதாகியுள்ளனர்.






தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.