கர்நாடகச் சிறையில் காவிரித்தாய் – விடுதலை செய்ய வீதிக்கு வா! – பெ. மணியரசன்
கர்நாடகச் சிறையில் காவிரித்தாய்
விடுதலை செய்ய வீதிக்கு வா!
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்,
2016 அக்டோபர் 1-15 இதழில் வெளியான கட்டுரை)
பெண் - பிறந்த இடத்தில் தாயாவதில்லை; மணந்த இடத்தில்தான் தாயாவாள்! அப்படித் தமிழர்களுக்குக் தாயானவள்தான் காவிரி!
தமிழர்களைப் பொறுத்தவரை காவிரி வெறும் தண்ணீர் இல்லை; நம் குருதி ஓட்டம்! ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் நாகரித்தின் தாய்; நம் இனத்தின் அடையாளம்; சோழ நாட்டைக் காவிரி நாடென்றே காவியப் புலவர்கள் அழைத்தனர்.
வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய்
வாழி காவேரி
என்றார்
இளங்கோவடிகள். காவிரி, தமிழர்களின் ஊழித்தாய்! யுகம் யுகமாய் சோழ நாட்டைத் தனது பிள்ளையாக வளர்த்து வருபவள் என்றார்.
நெல்லாய்,
கரும்பாய், வாழையாய், தென்னையாய், உளுந்து பயிராய், பற்பல பழங்களாய், தமிழர்களுக்கு அமுதூட்டியவள் காவிரித்தாய்! பருத்தியாய் ஆடை தந்தவள் காவிரி! மரங்களாய் வீடு தந்தவள் காவிரி!
வாழும்போது
மட்டுமல்ல, இறந்த பின்னும் காவிரி நீரில் குளிப்பாட்டுதல், காவிரிக் கரையில் இறுதிச் சடங்கு செய்தல் என சாவிற்குப் பின்னும் அரவணைப் பவள் காவிரித்தாய்! விழா நீராடலும் காவிரியில்தான்!
மக்களுக்கு
மட்டுமல்ல, மயில், மாடு, குரங்கு போன்ற எத்தனையோ உயிரினங்களுக்கும் தாயாகக் காவிரி விளங்குகிறாள் என்பதை உணர்த்திட, மயிலாடுதுறை, ஆடுதுறை, குரங்காடுதுறை என்று காவிரிக்கரை களுக்குப் பெயர் சூட்டினர் தமிழர்.
காவிரியைக்
குறுவை, தாளடி, சம்பா என்று குறுக்கி விடக்கூடாது. அவை அடிப்படையானவைதாம்! ஆனால், அவற்றுக்கும் மேலான ஆன்ம உறவுடன், தமிழர் உயிரில் காவிரி கலந்துள்ளாள்!
இன்று நுகர்வு உயிரியாய் மட்டும் மாறிப்போன தமிழர்கள் பலர்க்குக் காவிரியுடன் அவர்களின் முன்னோர்க்கு இருந்த உறவு புரியாது.
காவிரிக்கும் தமிழர்களுக்குமான உறவு மட்டுமல்ல, உலகெங்கும், காலம் உருவாக்கிய ஆறுகளுக்கும் அவற்றின் கரைகளில் வாழும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் அனைத்தும் மனித உயிரில் கலந்தவைதான்!
“வையை என்னும் பொய்யாக் குலக்கொடி” என்றார் இளங்கோவடிகள். வையை பாண்டிய நாட்டின் குலமகள்!
எகிப்திய
நாகரிகத்தின் அடையாளமாய் நைல் விளங்குகிறது; இங்கிலாந்தின் அடையாளமாய் தேம்சு ஓடுகிறது. செர்மனியின் முகவரியாய் ரைன், அமெரிக்கக் கண்டத்தின் பெருமிதமாய் அமேசான், இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான அடையாளமாய் சிந்துச் சமவெளி நாகரிகம், வட இந்திய அடையாளமாய்க் கங்கை ஆறு!
இன்று வணிக அரசியலும் வாக்கு அரசியலும் தமிழர்களை வெறும் நுகர்வோராய் - பயனாளிகளாய் மாற்றிவிட்டன. வெவ்வேறு சமூகவியல் கோட்பாடு களும் நுகர்வோர் - பயனாளி உளவியலைத் தமிழர்களிடம் வளர்த்துள்ளன. “இந்தியத்தேசியம்” என்று திணிக்கப்பட்ட உளவியல் பல்வேறு திரிபுகளைத் தமிழர் சிந்தனையில் உருவாக்கிவிட்டது.
மனித நீதிக்குப் புறம்பாகவும் இந்தியச்சட்டங்களுக்குப் புறம்பாகவும் பன்னாட்டு ஆற்று நீர்ச் சட்டங்களுக்குப் புறம்பாகவும் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தடுத்து, அந்நீரை சட்டவிரோதமாகக் கடத்திப் பயன்படுத்திக் கொள்கிறது. தமிழ்நாட்டில் காவிரி ஆறு காய்ந்து கிடக்கிறது.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 24,50,000 ஏக்கர் நிலங்களுக்குக் காவிரிப் பாசன நீராக உள்ளது. 20 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்!
“ஒருசொட்டுத் தண்ணீர்கூடத் தமிழ்நாட்டிற்குத் தரமுடியாது” என்பதுதான் கர்நாடகத்தில் உள்ள காங்கிரசு, பா.ச.க., சனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் “கொள்கை”முழக்கம்! தப்பித் தவறி உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டால், உடனே கர்நாடகத்தில் தமிழர்களுக்கெதிராகக் கலகங்கள் செய்கிறார்கள்.
கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் கன்னடர்களின் பிணைக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளார்கள். காவல் நிலையத்தில் அடித்து வாங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் போல், “கர்நாடகம் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறக்கக் கூடாது” என தமிழர்களை அறிக்கைவிடச் செய்கிறார்கள்.
காவிரித்
தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்த வேண்டும் என்று 1991-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இந்திய அரசு தனது அரசிதழில் இடைக்காலத் தீர்ப்பை வெளியிட்டது. உடனே 1991 டிசம்பரில் கர்நாடகக் காங்கிரசு ஆட்சி, தமிழர்களுக்கெதிரான கலவரத்தைத் தூண்டிவிட்டது.
பல்லாயிரக்கணக்கான தமிழர் வணிக நிறுவனங்களும் வீடுகளும் எரிக்கப்பட்டன. பன்னிரெண்டு தமிழர்கள் கன்னட இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள்.
இப்பொழுது
கடந்த 05.09.2016 அன்று உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டிற்குரிய நீரில் ஒரு சிறுபங்கைத் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிட்டது. உடனடியாகக் கர்நாடகத்தில் கன்னட அரசியல்வாதிகள், உழவர்கள் மற்றும் பொறுக்கிகள் எனப் பல தரப்பினரும் தமிழ்நாட்டிற்கு எதிராகக் கலவரங்களைத் தொடங்கினர்.
கர்நாடகக்
காங்கிரசு ஆட்சி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்ததுடன் அத்தீர்ப்பைக் கண்டித்து நடந்த கர்நாடக முழு அடைப்பை ஆதரித்தது. கல்விக் கூடங்கள், அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விட்டார் சித்தராமையா! கர்நாடகத்தைச் சேர்ந்த பாசக நடுவண் அமைச்சர்கள் அந்த முழு அடைப்பை ஆதரித்தனர். கர்நாடகத் திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் முழு அடைப்பிலும் ஆர்ப்பாட்டங்களிலும்
பங்கு கொண்டனர்.
கர்நாடகத்தில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஊர்திகள் தாக்கப்பட்டன; தமிழர் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.
கர்நாடகத்தில் பொறியியல் படிக்கும் தமிழ் மாணவரைக் கன்னட இளைஞர்கள் அடித்துத் துன்புறுத்தி மண்டியிடச் செய்து, மன்னிப்புக் கேட்க வைத்து, “காவிரி கர்நாடகத்திற்குரியது” என்று கூறச் செய்து, இழிவு செய்தனர். இதே போன்ற இழிவுகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரக்குந்து ஓட்டுநர்களுக்கும் செய்தனர்.
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட உலாப் பேருந்துகள், சரக்குந்துகள், மகிழுந்துகள் ஆகியவற்றைக் கன்னடர்கள் எரித்து எலும்புக் கூடாக்கினர். பல மணி நேரம் பெங்களூரில் இவை எரிக்கப்படட தீ கொழுந்துவிட்டு எரிந்தும் தீயணைப்புத்துறை வரவில்லை; காவல்துறை வரவில்லை.
தமிழர்களின் உயிருக்கோ, உடைமைகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகத் தலையிடாதவாறு காவல்துறையையும் தீயணைப்புத் துறையையும் கட்டுப்படுத்தி வைத்து விட்டார் காங்கிரசு முதல்வர் சித்தராமையா!
05.09.2016
அன்று உச்ச நீதிமன்றம் நொடிக்கு 15 ஆயிரம் கன அடி 10 நாட்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற மறுத்ததுடன் அதனைக் கண்டித்துக் கர்நாடகம்
09.09.2016 அன்று முழு அடைப்பு நடத்தியது.
12.09.2016 அன்று உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தின் நீதிமன்ற அவமதிப்பிற்குப் பரிசு தரும் வகையில் 15 ஆயிரம் கன அடியை 12 ஆயிரம் கன அடியாகக் குறைத்தது. அதையும் செயல்படுத்த மறுத்தது கர்நாடகம். அதற்கும் பரிசு தரும் வகையில் 20.09.2016 அன்று உச்ச நீதிமன்றம் 6 ஆயிரம் கன அடியாகக் குறைத்துத் தண்ணீர் திறக்குமாறு கர்நாடகத்திற்குத் தீர்ப்புரைத்தது. அத்துடன் நடுவண் அரசு இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி இணக்கம் காணச் செய்யுமாறு அறிவுரை வழங்கியது.
29.09.2016
அன்று நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் இரு மாநில முதல்வரையும் தில்லிக்கு அழைத்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகப் பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூடத் திறக்க முடியாது என்றார் சித்தராமையா. இருவரும் போய் வரலாம் என்று அனுப்பிவிட்டார் உமாபாரதி!
2013
- பிப்ரவரி 20-க்குள் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் கட்டளை இட்டும், இறுதித் தீர்ப்பை பிப்ரவரி 19 அன்று அரசிதழில் வெளியிட்டுவிடடு ஒதுங்கிக் கொண்டது காங்கிரசு நடுவண் அரசு. 2014 முதல் பாசக நடுவண் அரசும் மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து, கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்கும் கன்னடர்களின் தமிழர் பகை அட்டூழியங்களுக்கும்
இந்திய அரசு துணைபோகிறது.
சட்டப்படி
நடக்க வேண்டிய செயல்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் காவிரிச்சிக்கலில் தமிழர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
காரணங்கள்
1.
இந்திய அரசு மறைமுகமாகத் தமிழினப்பகைப் போக்கில் தமிழர்களைப் பாகுபாட்டுடன் நடத்தும் வழமை.
2.
உச்ச நீதிமன்றமும் நடுநிலை தவறி கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை போவது; தமிழர்களை மாற்றார் நிலையில் வைத்துப் பார்ப்பது.
3.
கர்நாடகத்தின் தமிழினப் பகைப்போக்கு.
4.
இனத் தற்காப்பற்ற தமிழ்நாட்டு அரசியல்!
நடுவண் அரசு
1.
கச்சத்தீவு, கடலில் தமிழர் மீன்பிடிக்கும் உரிமை ஆகியவற்றை இலங்கைக்குக் கொடுத்துத் தமிழினத்தை வஞ்சித்தது இந்திய அரசு. இலங்கைப் படையாட்கள் அவ்வபோது தமிழ்நாட்டு மீனவர் 600 பேரைச் சுட்டும் அடித்தும் கொன்ற போது ஏனென்று கேட்கவில்லை இந்தியஅரசு; தடுக்கவில்லை! கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் காங்கிரசு நடுவண் ஆட்சியும் மனுத்தாக்கல் செய்தது. இப்போ துள்ள பா.ச.க. ஆட்சியும் மனுத்தாக்கல் செய்துள்ளது.
2.
முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி ஆகிய ஆறுகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை மறுத்த மற்ற இனங்களுக்கே நடுவண் அரசு துணை நின்றது. கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் முறையே கன்னட, மலையாள இனவெறியர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, இந்திய அரசு தடுத்து நிறுத்த முன்வரவில்லை; அந்த இனவெறி வன்முறைகளைக் கண்டிக்கவுமில்லை.
அதே தமிழினப்பகை அரசியலைத்தான் காவிரிச் சிக்கலிலும் நடுவண் அரசு கடைபிடிக்கிறது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் காவிரிச் சிக்கலில் கொடுத்த தீர்ப்புகளை இந்திய அரசு செயல்படுத்தவில்லை. கர்நாடக அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒரு தடவைகூட இந்திய அரசு கண்டித்ததில்லை.
அடுத்து,
கர்நாடகம் ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறினால்கூட உடனடியாகக் கன்னடர்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். வன்முறை வெறியாட்டம் நடத்து கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்காகவும், தீர்ப்புகளைச் செயல்படுத்த வலியுறுத்தியும் பரவலாக மக்கள் போராடுவதில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் நமக்கு ஏன் வம்பு என்று காவிரிச் சிக்கலில் ஒதுங்கிக்கொள்கிறது.
கன்னடரின் தமிழர் பகை
பிற்காலச்
சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தபின் தமிழர்களைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக நடத்திடவே கன்னடர்கள் முயன் றார்கள்.
தமிழ்மொழியின் தொன்மை, வளமை, ஐயாயிரம் ஆண்டுகாலத் தமிழர் வரலாற்றின் பெருமிதங்கள் அனைத்தையும் அறிந்த கன்னடர்கள் தங்கள் நெஞ்சில் தமிழர்களுக்கெதிரான பொறாமை உணர்ச்சியையும் போட்டி மனப்பான்மையையும் தீயாய் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். வடவரா - தமிழரா என்றால் வடவர் மேல் அன்பு செலுத்துவார்கள் கன்னடர்கள்; தமிழர்களைப் பகைவராகப் பார்ப்பார்கள்.
தமிழா, சமற்கிருதமா என்றால், சமற்கிருதத்தை ஆதரிப்பார்கள் கன்னடர்கள்; தமிழை எதிர்ப்பார்கள். அதேபோல் இந்தியையும் ஆதரிப்பார்கள்!
தமிழர் எதிர்ப்பு அரசியல்தான் கர்நாடகத்தின் பொதுவான அரசியல். காங்கிரசு, பா.ச.க., சனதா தளம் போன்ற அனைத்திந்தியக் கட்சிகள் தங்கள் கட்சிகளில் தமிழர்களைத் தலைவர்களாக வளரவிடமாட்டார்கள்.
தமிழ்நாட்டு அரசியல்
இனத்தற்காப்பற்ற அரசியல் தமிழ்நாட்டில் உள்ளது.
கர்நாடகம்,
கேரளம் ஆகியவற்றில் அனைத்திந்தியக் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க., சனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையே முதன்மையானவை.
அவை, கன்னட, மலையாள, இன அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து, அதற்கு உள்ளடங்கிய வகையில் இந்தியத்தேசியத்தை வைக்கின்றன.
அதேபோல்
மராட்டியம், வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்திந்தியக் கட்சிகள் அந்தந்த மாநிலத் தேசிய இனங்களை முதன்மைப் படுத்துகின்றன. இந்தி மாநிலங்களில் இந்தித் தேசிய இனம் மேலாதிக்கத்தில் வைக்கப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில், காங்கிரசு, பா.ச.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் இந்தியத் தேசியத்தை மேலாதிக்கத்தில் வைத்து தமிழின உணர்ச்சியை பிராந்திய வெறி - இனவெறி என்று இழிவுபடுத்துகின்றன.
பெரியாரின்
திராவிடர் கழகம், தமிழினத்தை மறுத்து தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகிய நால்வருக்கும் பொதுவான இனம் திராவிட இனம் என்று திரிபு வேலை செய்து, தமிழின உணர்ச்சியை - பார்ப்பன உணர்ச்சி என்பதாகக் கொச்சைப்படுத்தி விட்டது.
தி.மு.க.வோ திராவிடன், தமிழன், இந்தியன் என்ற மூன்று இனங்களை ஏற்றுக் கொண்ட கட்சி. அதன் தலைவர் கலைஞர் கருணாநிதி இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், நாட்டால் இந்தியன் என்று அடிக்கடி பேசி வருகிறார். கடைசியில் இந்தியத் தேசியத்திற்குக் கீழ்ப்படிந்து தமிழினத்தைக் கைவிடும் கழகம் அது!
அ.இ.அ.தி.மு.க.வோ திராவிடப் பெயரில் உள்ள இந்தியத் தேசியக் கட்சி. அதன் பெயரில் அனைத் திந்தியம் இருக்கிறது. ஒப்புக்கு உதட்டளவில் தமிழர் என்று பேசக்கூடிய தலைமையைக் கொண்டது அ.இ.அ.தி.மு.க.!
“தாங்கள் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள்; தமிழினம் தொன்மையானது. தமிழினத்திற்குப் பெருமிதமிக்க பேரரசுகள் இருந்தன. உலகின் மிக தொன்மையான மொழி தமிழ் மொழி! அறிவுக் களஞ்சியங்களைக் கொண்டது தமிழ்; தமிழர் தாயகமாக இன்று எஞ்சியிருப்பது தமிழ்நாடு” என்று இயற்கையாகத் தமிழர்களிடம் இருக்க வேண்டிய தமிழின உளவியலை மேற்கண்ட கட்சிகள் சிதைத்துவிட்டன. இந்தியன், திராவிடன் என்ற செயற்கை உளவியலை இவை வளர்த்துவிட்டன. மேற்கண்ட கட்சிகள்தான் தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளன.
எனவே, அண்டை அயல் இனங்களால் - இன அடிப்படையில், தமிழக உரிமை பறிக்கப்படும் போது, தமிழர்கள் தாக்கப்படும் போது இயல்பாக எழ வேண்டிய தற்காப்புணர்ச்சி உரியவாறு எழுவதில்லை. கர்நாடகத்தில் தமிழர் உரிமைகளைப் பறிக்க எழும் கன்னடர் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் வகையில் தமிழர் தற்காப்புக் கொந்தளிப்பு எழுவதில்லை.
மற்ற கோட்பாட்டுவாதிகள்
தமிழர் உரிமை, தமிழ்நாட்டு உரிமை என்று பேசினாலே அது இனவாதம்; இனவெறி என்று விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் தனிநபர்கள் இருக்கின்றனர். அவ்வாறு பேசம் சிறுசிறு அமைப்பு களும் தமிழ்நாட்டில் பல இருக்கின்றன.
அவர்கள்
அந்த மனநிலையிலிருந்து, கற்பனை வாதங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். கர்நாடகத்தில் சில குற்றக் கும்பல்கள்தான் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக்கூடாது என்கின்றன. அவற்றிற்குப் பணிந்து போகின்றன பெரிய கட்சிகள் என்கின்றனர்.
வேறு சிலர் கர்நாடக மக்களிடம் கன்னட இனவெறி கிடையாது; தமிழினப்பகை உணர்ச்சி கிடையாது; அரசியலுக்காக கட்சிகள் தமிழர் எதிர்ப்பைக் கையாள்கின்றன என்கின்றனர்.
கன்னட மக்கள் தமிழர்களையோ. தமிழ்நாட்டு உரிமைகளையோ எதிர்க்கவில்லை என்கின்றனர்.
கன்னட மக்களில் கணிசமானவர்களிடம் காலம் காலமாகத் தமிழின எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது. அதைத்தான் அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திறந்து விடுவதற்குக் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று நிரந்தரமாகக் கன்னடர்கள் சொல்லும் பொய் ஒரு பக்கம் இருக்கட்டும். திருவள்ளுவர், கன்னடர்களுக்கு எதிராகத் திருக்குறளில் என்ன எழுதி வைத்தார்? எதற்காக அவர் சிலையைத் திறக்கவிடாமல் பெங்களூரில் 11 ஆண்டுகள் முக்காடு போட்டு மூடி வைத்தனர். பண்டமாற்றுபோல் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையைச் சென்னையில் திறக்க அன்றைய முதல்வர் கருணாநிதி ஒப்புக் கொண்ட பின்தான், பா.ச.க. முதல்வர் எடியூரப்பா திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறக்க ஒப்புதல் தந்தார்.
1991
டிசம்பரில் தமிழர்கள் கர்நாடகத்தில் படுகொலை செய்யப்பட்டதேன்? தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு, வீடுகள் எரிக்கப்பட்டதேன்? தமிழர்கள் கன்னடர்களுக்குச் செய்த ஆத்திரமூட்டும் செயல் என்ன? எதுவுமில்லை!
திருவள்ளுவர் செய்த “குற்றம்” தமிழினத்தில் பிறந்தது. கர்நாடகத் தமிழர்கள் செய்த “குற்றமும்” தமிழினத்தில் பிறந்ததே. இதைக் கன்னடரின் இனப்பகை என்று சொல்லாமல், ஒரு சிறு குற்றக்கும்பலின் கைவரிசை என்று சொல்ல முடியுமா? முடியாது.
தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு எதிரான தமிழின வெறியை எந்த இயக்கமும் பரப்புரை செய்யவில்லை; தூண்டவில்லை. கன்னடர்களைத் தாக்கும் நிகழ்வுகள் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததே இல்லை. அண்மையில் கர்நாடகத்தில் நடந்ததற்கு எதிர்வினையாக கன்னடர் ஒருவரை மிரட்டும் நிகழ்வும், கன்னட நிறுவனமொன்றில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீச்சும் நடந்தன. கர்நாடகத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட தமிழர் பேருந்துகளும் சரக்குந்து களும் மகிழுந்துகளும் எரிக்கப்பட்டன.
கடந்த
05.09.2016 முதல் இப்பொழுதுவரை கர்நாடக - தமிழ்நாட்டுப் போக்குவரத்தைக் கன்னடர்கள் முடக்கிவிட்டார்கள். பாக்கித்தான் - இந்தியா எல்லையில் உள்ள வாகா சோதனைச்சாவடி போல் - ஓசூர் சூசூவாடி, கர்நாடக அத்திப்பள்ளி எல்லை வளைவு உள்ளது. அங்கு தமிழர்கள் யாரும் போக்குவரத்தைத் தடுக்கிறார்களா? இல்லை. கன்னடர்களே தடுக்கிறார்கள். கர்நாடக அரசு இரு மாநிலப் போக்குவரத்தை இயல்புப் படுத்த விரும்பவில்லை.
இன்னும்
சிலர், தமிழ்நாட்டில் கிடைக்கும் மழை நீரைச் சேமித்தாலே போதும், ஆறுகளில் தூர்வாரி, தடுப்பணைகள் கட்டினாலே போதும், கர்நாடகத்திடம் காவிரி நீர் கேட்க வேண்டியதில்லை என்று கூறு கின்றனர்.
கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய காவிரி நீரை ஈடுகட்டும் அளவிற்குக் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைநீர் கடலில் கலப்பதே இல்லை. நடைமுறைப் புள்ளிவிவரம் இன்றி, குறுக்குச்சால் ஓட்டும் மாற்றுத் திட்டம் இது!
அப்பன் சொத்தில் ஏமாளி அண்ணனுக்குப் பங்கு தராமல் அதிரடித் தம்பி தில்லுமுல்லு செய்தால், அண்ணன்காரனைப் பார்த்து உன் உடம்பில் தெம்பிருக்கிறது, நீ உழைத்துச் சம்பாதித்துக் கொள் என்று யாராவது தீர்ப்புச் சொல்வார்களா? அப்படிச் சொன்னால் அவரின் அறிவு பற்றி என்ன சொல்வது?
இன்னும்
சில மேதாவிகள் கங்கை - காவிரி இணைப்பை உருவாக்கிவிட்டால், காவிரிக்காக கர்நாடகாவைக் கெஞ்ச வேண்டியதில்லை என்கிறார்கள். கங்கையைத் தென்னாட்டு ஆறுகளுடன் இணைக்கும் திட்டத்தை வடநாட்டுத் தலைவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
கங்கை -
காவிரி இணைப்புக்காகக் கால்வாய் வெட்டினால் அதில் தண்ணீர் ஓடாது, இரத்தம்தான் ஓடும் என்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே லல்லுபிரசாத் எச்சரித்தார்.
கூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டுகிறேன் என்று சொல்வதைப் போல் சிலர் கங்கை - காவிரி இணைப்பைப் பேசுகி றார்கள்.
கங்கை
_- காவிரி இணைப்பைச் சாதிக்க தொழில் நுட்பம் இருக்கிறது; அதை வடநாட்டார் அனுமதிக்க மாட்டார்கள் என்ற மதிநுட்பம்தான் நம்மவர் “சிலரிடம்” இல்லை!
தமிழ்நாட்டிற்குள்ளேயே அடுத்த மாவட்டத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறார்கள்; அடுத்த ஊருக்குத் தண்ணீர் தர மறுக்கிறார்கள்; அடுத்த ஏரிக்கு, அடுத்த வயலுக்குத் தண்ணீர்விட மறுக்கிறார்கள்; கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் மறுப்பது அதிசயமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.
அடுத்தவருக்கும் உரிய நீரை ஒருவர் தடுத்தால் அது குற்றச்செயல்தானே, அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதல்லவா? கடைமடைக்காரனுக்கு முதல் மடைக்காரன் தண்ணீர் விடவில்லையென்றால் வெட்டிக் கொள்கிறார்கள்; கொலையே நடக்கிறது. ஓர் ஊர்க்காரர்கள், உறவினர்கள் என்று சும்மா இருக்கிறார்களா? சட்ட விரோதமாகத் தண்ணீரைத் தடுப்பவர் களை அப்படியே அனுமதிக்கிறார்களா? இல்லையே!
தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தருவதைக் கன்னட மக்கள் எதிர்க்கவில்லை, பதவிக்காக அரசியல்வாதிகளே எதிர்க்கிறார்கள், கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கவில்லை, சில பொறுக்கிகளே தாக்கினார்கள் என்பவர்கள் . . .
கங்கை
_ காவிரி இணைப்பு வந்தால் காவிரிச் சிக்கல் தீர்ந்துவிடும் என்பவர்கள் . . .
தமிழ்நாட்டில் அடுத்த ஊர்க்காரர்களுக்கே தண்ணீர் தருவதில்லை, அடுத்த வயலுக்கே தண்ணீர் தருவதில்லை, கர்நாடகம் தண்ணீர் தருமா என்பவர்கள் . . .
ஆகியோரில்
இரு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் விவரம் தெரியாத வெள்ளந்திகள்! அவர்களுக்குப் பல நாடுகளிடையே ஓடும் ஆறுகள் பற்றியோ, அதற்கான சட்ட உரிமைகள் பற்றியோ தெரியாது.
கர்நாடகத்தில் பெய்யும் மழைக்கான மேகங்கள், கர்நாடகக் கடலில் இருந்து எழுந்து கர்நாடக வானில் மட்டும் உருவானவை அல்ல. வங்கக்கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் என உலகின் பல பகுதிகளில் உருவான மேகங்கள்அவை! நிலக்கோளத்தின் மேல் எங்கெங்கோ வீசும் காற்றழுத்தத்தால் கர்நாடகம், கேரளம், மராட்டியம், குசராத் மாநிலங்களின் வானத்திற்கு இழுத்து வரப்பட்ட மேகங்கள், கர்நாடக- கேரள எல்லைகளில் இயற்கை உருவாக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையால் அம்மேகங்கள் தடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு வராமல் கர்நாடகப் பகுதியில் மழையைக் கொட்டுகின்றன. தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் இயற்கை நில அமைப்பை தகவமைத்துள்ளது. கர்நாடகம் மேடு; தமிழ்நாடு பள்ளம்! அங்கு பெய்யும் மழைநீர் உருட்டிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஒடிவந்து காவிரியாய் வளர்ந்தது! யாரும் கால்வாய் வெட்டி காவிரியை உருவாக்கவில்லை. இயற்கை உருவாக்கியது காவிரி ஓட்டம்! உலகில் நாடு கடந்து ஓடும் ஆறுகள் இவ்வாறே உருவாயின. இதனால்தான் பன்னாட்டு ஆறுகள் சட்டம் உலகில் இருக்கிறது. இதை ஒட்டித்தான் பன்மாநில ஆறுகள் சட்டம் இந்தியாவில் இருக்கிறது.
விவரம் தெரியாதவர்களுக்கு இந்த விவரங்களைச் சொல்லலாம். விவரம் தெரிந்த சிலர் மேற்கண்ட காவிரி மறுப்பு வாதங்களை வேண்டுமென்றே வைக்கின்றனர். அவர்களின் நெஞ்சைப் பிளந்து பார்த்தால், அதற்குள் “இந்தியத் தேசியம்” என்ற நரிக்குட்டி பதுங்கி இருக்கும்! அவர்கள் தமிழினத் துரோகிகள்! அவர்களைத் தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழர் முழக்கம்
இந்திய அரசே, தமிழ்நாட்டிற்கு - தமிழ் இனத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு கிடையாதா?
காவிரியில்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத் தக் கூடாதென்று ஒரு மனதாக தீர்மானித்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பாசக. நடுவண் அமைச்சர்களான ஆனந்தகுமாரும், சதானந்த கௌடாவும் கலந்து கொண்டனர். தலைமை அமைச்சர் நரேந்திரமோடி அரசமைப்புச் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழர்களுக்கு எதிராக சட்ட விரோதச் செயல் களில் ஈடுபடுவோர்க் குப் பாதுகாப்பளிக்க சிறப்புச் சட்டம் எதுவும் இந்தியாவில் இருக்கிறதா?
தமிழர்களுக்குரிய சட்டப்படியான காவிரி உரிமையை மீட்டுத்தா! உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு! இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு இந்திய அரசே வெளியேறு!
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட கன்னட போசள மன்னன் முதலாம் நரசிம்மன் (1141 -
1173), காவிரியில் அணை கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தபோது, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் மகன் இரண்டாம் இராசராசன் படை கொண்டு சென்று, அணையை உடைத்துக் காவிரித் தாயை மீட்டான். தக்கயாகப்பரணியில் ஒட்டக்கூத்தர் இந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அந்த வரலாறு திரும்பும் என்பதை இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறோம்!
அலைகொன்று
வருகங்கை வாராமல்
அடைக்கின்ற
குன்றூடு அறுக்கின்ற பூதம்
மலைகொன்று
பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வரராச ராசன் கைவாள் என்ன வந்தே!
-
ஒட்டக்கூத்தர்.
தற்காத்துக் கொள்ளப் போராடும் ஆற்றல் பெறாத உயிரினம் அழியும் என்றார் டார்வின். (Struggle
for Existence; Survival of the Fittest)
கைவிலங்கொடிக்கக் காவிரித் தாய் அழைக்கிறாள்! களம்காண வாருங்கள் தமிழர்களே!
Leave a Comment