ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“இளம் தலைமையே எழுந்து வா!” அமெரிக்காவில் உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா மாநாட்டில் - பெ. மணியரசன் பேச்சு!

“இளம் தலைமையே எழுந்து வா!” அமெரிக்காவில் உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா மாநாட்டில் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு!
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உலகத் தமிழர்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும், வட அமெரிக்காவில் பாடுபட்டு வரும் “உலகத் தமிழ் அமைப்பின்” (World Thamil Organization, Inc), வெள்ளி விழா மாநாடு 08.10.2016 அன்று நடைபெற்றது.
வட அமெரிக்கத் தலைநகரமான வாசிங்டன் அருகிலுள்ள, வர்ஜினியா மாநிலத்தின் - ஆல்டியில் உள்ள மெர்செர் இடைநிலைப் பள்ளி கூட்ட அரங்கில் காலை முதல் மாலை வரை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடந்தன.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. பூஜா செல்வம் – சான்றோர் ஜெயக்குமார் இருவரும் புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். தமிழர் உரிமைகளுக்கு இன்னுயிர் ஈந்த ஈகியர் – மாவீரர் மற்றும் அண்மையில் அமெரிக்காவில் காலமான வின்ஸ்டன் தர்மராஜான் வில்லியம்ஸ் (புஷ்பராணி வில்லியம்ஸ் கணவர்) ஆகியோர்க்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் முனைவர் வை.க. தேவ் வரவேற்புரையாற்றி, மாநாட்டைத் தொடக்கி வைத்தார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ் அமைப்பின் துணைத் தலைவருமான திரு. இரவி சுப்பிரமணியம் மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, உலகத் தமிழ் அமைப்பின் வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அதன் நிறுவனர்களில் ஒருவரான முனைவர் தணிகுமார் சேரன் பேசினார். பல்வேறு தலைப்புகளில் விவாத அரங்குகள், சிறப்புரை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன.



“பறிபோன – பறிபோகும் தமிழர் உரிமைகள் – மீட்டெடுப்பு” என்ற தலைப்பில் நடந்த விவாத அரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தார்.
மாநாட்டின் நிறைவரங்கில், நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் திரு. உருத்திரகுமாரன், மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு :

“தண்ணீருக்குள் கிடந்தாலும் பாஸ்பரஸ் நெருப்பாகவே கனன்று கொண்டிருப்பது போல், தமிழ்நாட்டிலிருந்து பத்தாயிரம் – பன்னிரெண்டாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால், அயல் இனங்களின் மண்ணில் அயல் மொழியினரின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தாலும், “தமிழர்கள்” – என்ற எண்ணத்தை நெருப்பாக நெஞ்சில் ஏந்தி, அமெரிக்க மண்ணில் வாழ்ந்து வரும் உங்கள் எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
தாய் மொழி தமிழை நெஞ்சில் நெருப்புச்சுடராக ஏந்தி செயல்பட்டு வருவது பாராட்டிற்குரியது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இதே உணர்வோடு, இந்த “உலகத் தமிழ் அமைப்பை” வெற்றிகரமாக நடத்தி வரும் பெருமக்களுக்கு எனது பாராட்டுகள்! இவ்வமைப்பின் வெள்ளி விழா மாநாட்டில் பங்கேற்க என்னை அழைத்தோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழீழம் பற்றியும் மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் சிந்திப்பவர்கள் இங்கே இருக்கிறீர்கள்! உங்களின் செயல்பாடுகள், தமிழ்நாட்டிலிருக்கும் எங்களைப் போன்ற களப்பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியவையாக உள்ளன. அவற்றையெல்லாம் நாங்கள் தமிழ்நாட்டில் பேசுவோம். நாங்கள் நடத்தி வரும் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் – மாதமிருமுறை இதழ் மூலமும் எடுத்துச் சொல்வோம். சமூக வலைத்தளங்களில் பகிர்வோம்.

நாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நம் கருத்துகளை இங்கே வராத நம் மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிர கவனம் செலுத்தி உழைத்தால் போதும். ஒரு குடம் தண்ணீரை, ஒரு சொம்பு கொதிநீர் வெந்நீராக மாற்றிவிடும். அந்த ஒரு சொம்பு கொதி நீராக, இங்கே கூடியிருக்கும் நீங்கள் இருக்கிறீர்கள். இங்கு வர இயலாத தமிழர்களைச் சந்தித்து, இந்த மாநாட்டுத் தீர்மானங்களை – இந்த மாநாடு வெளிப்படுத்திய உணர்வுகளை அவர்களிடம் கொண்டு சேர்த்தால், அதுவே இம்மாநாட்டின் வெற்றி!

அசல் வெள்ளி விண் மீனும் போலி வெள்ளி விண் மீனும்
“வெள்ளி” என்பதொரு உலோகம். தமிழ்நாட்டின் கிராமங்களில், “வெள்ளி” யை உலோகமாக மட்டுமல்லாமல், ஒரு விண்மீனாகவும் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். விடிவதற்கு முன்பு மிகுந்த ஒளியோடு தோன்றும் ஒரு நட்சத்திரமாக “வெள்ளி”யைக் கூறுவார்கள். அதுபோல், தமிழர்களுக்கு வரப்போகும் விடியலை அறிவிக்கும் வெள்ளி மீனாக ஒளிகாட்டுவது போல் இந்த “வெள்ளி விழா” மாநாடு அமைய வேண்டுமென்பது எங்கள் விருப்பம்! அந்த வெற்றிக்கு – விடியலுக்கு நாம் தீவிரமாகச் செயல்பட்டாக வேண்டும்.

அந்தக் காலத்தில் கிராமங்களில் சூரியன், நிலவு, நிழல், விண்மீன் போன்றவற்றை வைத்து நேரத்தைக் கணக்கிடுவார்கள். விடியலை முன்னறிவிக்கும் வெள்ளி மீன் வானத்தில் தோன்றினால், வேளாண் வேலைகளுக்கும் மற்ற வேலைகளுக்கும் மக்கள் புறப்படுவார்கள். அதை வைத்து ஒரு கதைகூட உண்டு.

ஒருமுறை, பக்கத்து ஊர் சந்தைக்கு ஒரு வணிகர் பொருட்கள் வாங்க புறப்படுவதற்கு வெள்ளி முளைத்து விட்டதா என்று பார்த்தார். வெள்ளி போல் தோன்றிய ஒரு மீன் வானத்தில் பளிச்சிட்டது. விடியப்போகிறது என்று கருதி வணிகர் புறப்பட்டுவிட்டார். ஆனால், போகப்போக வெள்ளி போல் தோன்றிய மீன் மறைந்தது. கிழக்கு வெளுக்கவில்லை. இருள் கவ்வியது. காத்திருந்த கள்வர்கள் அந்த வணிகரை அடித்துப் போட்டு பணப் பையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

தமிழ்நாட்டுக் கிராமங்களில் விடியற்காலையில் வெள்ளி முளைத்ததை வைத்து விவசாய வேலைக்குப் புறப்படும்போது சிலர், வெள்ளி தானா செட்டியார் குடியைக் கெடுத்த மீனா என்று பார் என்பார்கள்.

தமிழ்ச் சமூகத்தில் சில போலி “வெள்ளி“ விண்மீன்கள் தோன்றி நம்மை ஏமாற்றிவிட்டன. இப்போது, உண்மையான “வெள்ளி” விண்மீனுக்கு – உண்மையான விடியலுக்கு நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்! இந்த வெள்ளி விழா மாநாடு விடியலுக்கு முன் தோன்றும் உண்மையான வெள்ளியாக அமையட்டும்!

நாம் இனவெறியரா?

இன்றைக்கு நம்மவர்களே - சிலர் நம்மை இனவெறியர்கள் என்றும், மொழிவெறியர்கள் என்றும் பேசுகின்ற நிலை உள்ளது. தமிழினம், தமிழ்மொழி என்று பேசினாலே, இனவெறி – மொழிவெறி என அடையாளப்படுத்துகிறார்கள்.

நமக்கென்ன இனவெறி இருக்கிறது? நாம் இன்னொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைக்கிறோமா? இல்லை! நம்மீதுதான் பிற இன ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட இனத்தின் உரிமைக்குக் குரல் கொடுக்கும் நம்மை “இனவாதிகள்” என்கிறார்கள்.

நாம் எந்த இனத்தைத் தாக்கினோம்? தொடர்ந்து பிற இனத்தால் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழீழத்தில் சிங்களர்கள் நம்மத் தாக்கினார்கள். இனப்படுகொலை செய்தார்கள். இந்தியாவில் மலையாளிகள் அடித்தார்கள். கன்னடர்கள் அடிக்கிறார்கள். ஆரியர்கள் எல்லா வகையிலும் அடிக்கிறார்கள். ஆனால், அடிக்காதே என்று சொல்லும் நம்மைப் பார்த்து, “இனவெறியர்கள்” என்கிறார்கள். “அடிபடுபவன்” அடிக்காதே என்பதை அதட்டித்தான் சொல்வான்.

நாம் நம் தமிழ் மொழியைப் பிற இனத்தவர் மீது திணிக்கிறோமா? பிற மொழி மீது ஆதிக்கம் செலுத்தச் சொல்கிறோமா? இல்லை. எங்கள் மீது இந்தியைத் திணிக்காதே! சமற்கிருதத்தைத் திணிக்காதே, ஆங்கில ஆதிக்கம் ஒழிக என்கிறோம். இது மொழிவெறியா? எங்கள் தாய்மொழியைத் தற்காக்கும் முயற்சி இது!

பல நாடுகளை பிடித்தப் போதும்கூட, அந்த நாடுகளையெல்லாம் அடிமைப்படுத்தி ஆள வேண்டுமென மாமன்னன் இராசராசன் நினைத்ததில்லை. தமிழ்ப்பேரரசன் இராசேந்திர சோழன் அப்படி ஆளவில்லை. அப்படிப்பட்ட இனத்திற்குச் சொந்தக்காரர்களாக நாம் இருக்கிறோம்!

இந்தியையும் சமற்கிருதத்தையும் திணித்து, நம் மொழியை அழிக்க இந்தியா துடிக்கிறது. ஆனால், அதற்கு எதிராகப் போராடும் நம்மை “மொழிவெறியர்” என்று இந்தியாவும் சொல்கிறது. நம்மவர் சிலரும் சொல்கிறார்கள்.

எனவே, பாதிக்கப்பட்டவனைப் பார்த்து “இனவெறியர்” – “மொழிவெறியர்” என்றெல்லாம் சொன்னால் என்ன பொருள்?

தமிழர் அறம்
தமிழீழத்தில் போர் நடைபெற்ற போது, தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தி சிங்களவன் வல்லுறவு கொண்டு அழித்த போதும்கூட, ஒரு சிங்களப் பெண்மீது கூட தாக்குதல் நடத்தக்கூடாது என ஆணையிட்ட தலைவன் பிரபாகரன் பிறந்த இனம் - இந்த இனம்!

விடுதலைப்புலிகளிடம் விமானப்படை இருந்தது. சிங்களர்கள் வான்குண்டு வீசித் தமிழர்களைக் கொன்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் நினைத்திருந்தால், கொழும்பில் குண்டு வீசி, சிங்களப் பொது மக்களைக் கொன்றிருக்க முடியாதா? ஆனால் செய்யவில்லை.

போரின் இறுதிக்கட்டத்தில், ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களை சிங்களப் படையாட்கள் கொன்று குவித்தபோதுகூட, சிங்களக் குடிமக்களைத் தாக்கக் கூடாது என ஆணையிட்ட தலைவன் பிரபாகரன்! இதுதான் தமிழர் அறம்! சங்க காலம் முதல் பிரபாகரன் காலம் வரை கடைபிடிக்கப்படும் தமிழர் அறம் இதுதான்!

அயலார்தான் நம்மை “இனவெறியர்” – “மொழிவெறியர்” என்றெல்லாம்கூறி, நம்மை வீழ்த்த நினைக்கிறார்கள். ஆனால், நம்மவர்கள் அதற்குப் பலியாகி “இனவெறி” – “மொழிவெறி” என்றெல்லாம் நம்மையே வீழ்த்தும் வகையில் பேசிக் கொண்டிருக்கக்கூடாது.

சொல் ஆயுதம்
ஆரியர்கள் தமிழ்நாட்டை அடிமைப்படுத்த வந்த போது, வில்லேந்தி மட்டும் வரவில்லை – சொல்லேந்தியும் வந்தார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

“தீயாடியப்பர்” என்றிருந்த இறைவன் பெயரை, “அக்னீசுவரர்” என்று மாற்றினார்கள். “அறம் வளர்த்த நாயகி” என்ற இறைவி பெயரை, “தர்ம சம்வர்த்தினி” என்று மாற்றினார்கள். “மயிலாடுதுறை” என்ற ஊர்ப்பெயரை, “மயூரம்” என்று மாற்றினார்கள். “முருகனை” சுப்பிரமணி என்றார்கள். அதாவது பிராமணர்களுக்கு நன்மை செய்வோன் என்றனர். அவருக்கு வள்ளியுடன் ஏற்கெனவே திருமணமான நிலையில், புதிதாக “தெய்வயானை” என்ற வடநாட்டுப் பெண்ணை கட்டி வைத்தார்கள்.

ஏன் இவ்வாறு செய்தார்கள்? தமிழர்களின் ஊர்களை – பெயர்களை ஆரியமயமாக்க வேண்டும்! அதற்காக செய்தார்கள்! நம் பண்பாடு - அடையாளம் எல்லாவற்றையும் ஆரியர்கள் மாற்றினார்கள். அது இன்றும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

அதனால்தான், தமிழன் – தமிழர் என்றாலே இனவாதம் என்று நாமே நினைக்கும்படி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறார்கள். தமிழன் என்றால் இனவாதம் என்றால், கன்னடர், மலையாளி, தெலுங்கர், ஆரியர், இந்தியன் என்றெல்லாம் பேசுவது என்ன வாதம்?

இந்தியத் துணைக் கண்டத்திலேயே அதிகளவில் பாதிக்கப்பட்ட இனம் – தமிழினம்தான்! நமக்கொரு உத்தரவாதமான வாழ்க்கை இன்றைக்கும் கிடையாது! இருக்கின்ற உரிமைகளும் பறிபோகின்றன.

செயற்கையான சிறுபான்மையினர்

ஏழரைக் கோடி தமிழர்கள் இருந்தாலும்கூட, இந்தியாவில் நாம் “சிறுபான்மையினர்” என்கிறார்கள். அதைவிட குறைவான மக்கள் தொகைக் கொண்டது பிரித்தானியா! அதுபோல், தமிழ்நாட்டைவிடக் குறைவான மக்கள் தொகை கொண்டது பிரான்ஸ்! இத்தாலி, இசுரேல், நார்வே என பல நாடுகள் தமிழ்நாட்டைவிட மிகக் குறைவான மக்கள் தொகை கொண்டவை! ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்தியாவில் “சிறுபான்மை” என்கிறார்கள். எப்படி நாம் சிறுபான்மையினர் ஆனோம்? நாம் இந்தியாவில் இணைக்கப்பட்டதால் செயற்கையாக சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளோம்!

இந்தியா தொடர்ந்து, பல சிக்கல்களில் தமிழர்களுக்கு நடுநிலை தவறி அநீதி இழைக்கிறது. நீதி வழங்க மறுக்கிறது. காவிரிச் சிக்கலில் இது அப்பட்டமாகத் தெரிந்தது.
எனவேதான், தமிழீழத் தமிழர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்தியாவை நம்பாதீர்கள். எப்படியாவது இந்தியாவுக்கு “தமிழீழம்” பற்றி புரிய வைத்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள்! காளை மாடு கன்று போட்டாலும் போடும், இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக - தமிழர் ஞாயத்திற்கு ஆதரவாக வராது! இதுவே நமக்கான படிப்பினை!

என்ன செய்ய வேண்டும்?

இவ்வளவு பெரும் இழப்புகளுக்குப் பிறகும் இந்தியாவை நாம் நம்பக் கூடாது. எனவே, தமிழீழத்தமிழர்கள் சிந்தித்து மாற்றுப் பாதைக்கு வாருங்கள்.

இந்தியாவுக்கு புரிய வைக்க முடியாது. இந்தியாவைப் பணிய வைக்கத்தான் முடியும். இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து, நெருக்குதல் கொடுத்து, நீதிக்குத் தலைவணங்கச் செய்ய வேண்டும். அந்த ஆற்றல், தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடி தமிழ் மக்களுக்குத்தான் இருக்கிறது.

தமிழர்களுக்கு ஒரு நாடல்ல, இரண்டு நாடுகள் இருக்கின்றன. ஒன்று தமிழ்நாடு, இன்னொன்று தமிழீழம். தமிழீழம் விடுதலையடையும் தருவாயில் இருக்கிறது, தமிழ்நாடு அப்படியில்லை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை!

எது முந்தும் எது பிந்தும் என வரலாற்றில் சொல்ல முடியாது. சோவியத் ஒன்றியம், 15 நாடுகளாகப் பிரிந்த போது, ஆயுதப் போராட்டங்கள் நடக்கவில்லை. மேசையில் பேச்சு நடத்தி செக்கோஸ்லோவேகியா இரண்டாகப் பிரிந்தது. எனவே, அரசியல் காய் நகர்த்தல்களால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

எனவே, இது முந்தி – இது பிந்தி என சோதிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனச் செயல்படுங்கள்!

2009ஆம் ஆண்டு, தமிழீழத்தில் போர் நிறுத்தம் கொண்டு வர தமிழ்நாட்டுத் தமிழர்களால் முடியவில்லை. போர் நிறுத்தப் போராட்டம், தமிழ்நாட்டில் வெகு மக்கள் எழுச்சியாக வளரவில்லை. உரிய ஆற்றலுடன் பெருந்திரளாக வெகு மக்கள் வீதிக்கு வந்து குரல் கொடுக்கவில்லை.

நாங்கள், தோழர் கொளத்தூர் மணி, தோழர் கோவை இராமகிருட்டிணன், தோழர் தியாகு ஆகியோர் தலைமையிலான அமைப்புகள் “தமிழர் ஒருங்கிணைப்பு” என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி, தஞ்சையிலே இந்திய அரசின் விமானப்படைத்தளத்தை முற்றுகையிட்டோம். தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுக்கு வரி செலுத்தும் வருமானவரி அலுவலகங்களை, சுங்கவரி அலுவலகங்களை முற்றுகையிட்டோம். விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டத்தில், அன்றைக்கு எங்களுக்கிருந்த ஆற்றலுக்கேற்ப, 350 தோழர்கள் கைது செய்யப்பட்டோம். 500 பேர் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆனால், ஒரு வார காலம், இந்திய அரசு அலுவலகங்களைப் பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் திரண்டு முற்றுகையிட்டு, அவை செயல்படாத வகையில் முடக்கியிருந்தால், இந்தியாவுக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். தமிழீழம் விடுதலையாவதற்கு முன், தமிழ்நாடு விடுதலையாகிவிடும் போலிருக்கிறது என அச்சப்பட்டுக் கொண்டாவது, போர் நிறுத்தத்தை இந்திய அரசு கொண்டு வந்திருக்கும்.
எனவே, நாம் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் ஆற்றலாக வளர வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆற்றலைப் பெருக்க வேண்டும். தமிழ்த்தேசிய எழுச்சியை உருவாக்க வேண்டும்!

இளம் தலைமையே எழுந்து வா!

இவர் தலைமை – அவர் தலைமை என்றில்லாமல், புதிய தலைமைகள் பிறக்க வேண்டும். புதிய தமிழ் இளைஞர்கள் வர வேண்டும். இளைஞர்கள் பின்பற்ற மட்டுமல்ல, வழிகாட்டவும் உரிமையுள்ளவர்கள் என்பதை மறக்கக்கூடாது!

இளைஞர்களே, இவர் சொன்னார் - அவர் சென்னார் என்று கேட்பது மட்டும் உங்கள் வேலையல்ல. நீங்கள் முடிவெடுங்கள்; நீங்கள் வழிகாட்டுங்கள்! துணிந்து வாருங்கள்! நுகர்வு வாதத்தை விட்டு வெளியே வாருங்கள்! மனக்குகையிலிருந்து வெளியே வாருங்கள்! உங்கள் நெஞ்சில் பற்றியெரியும் உரிமைத் தீதான் வெளியேயும் பற்றும் என உணர்ந்து, வெளியே வாருங்கள்!

ஒரு தனி மனிதரிடமிருந்துதான் புரட்சி பிறக்கிறது. ஒரு அகல் விளக்கிலிருந்து ஆயிரம் விளக்குகள் ஒளியேற்றிக் கொள்ள முடியும்!

களப்போராட்டங்களில் கலந்து கொள்வோர் வருக! கருத்துக்களைப் பரப்ப உதவுவோர் வருக! நிதி வழங்க முடிந்தோர், நிதி தாருங்கள்! யார் யார் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்யுங்கள்! செயல்பட்டுக் கொண்டே இருங்கள்! நாம் வெற்றி பெறுவோம்!

மனித மனம், எப்பொழுதும் அற்ப ஆசைகளையும், இலேசான விடயங்களையும்தான் நாடும். அது இயற்கையானது. உயர்ந்த எண்ணங்களுக்கு நாம் அதைத் திருப்பி விட வேண்டும்.

ஒரு குழந்தைக்கு நெய்யும் பருப்பும் கலந்து சோறு கொடுக்கத் தாய் போராடுவாள்! ஆனால், ஐஸ்கிரீம்மைப் பார்த்தால், அந்தக் குழந்தை அதை நோக்கித் தாவி ஓடும்! அதுதான் மனித மனம்! எனவே, இலட்சியத்தை நோக்கி மனத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்துவோர் தான் சிந்தனையாளர்களாக – போராளிகளாக வரலாற்று நாயகர்களாக உருவாகிறார்கள்.

புரட்சியில் எப்பொழுதும் 100 விழுக்காட்டு மக்கள் பங்கு கொள்வதில்லை. 50 விழுக்காட்டு மக்கள் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்று தங்கள் வேலையைப் பார்ப்பார்கள். வெறும் 25 விழுக்காட்டு மக்கள் உறுதியான ஆதரவோடு பங்கேற்றால் போதும், நாம் வெற்றி பெறலாம்! அதற்குரிய வழிகளில் அவர்களைத் திரட்ட வேண்டும்.

தமிழீழம் போல், தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இங்கு அது பலன் தராது. அச்சப்பட்டுக் கொண்டல்ல, தமிழ்நாட்டுச் சூழல் வேறு! தமிழீழச் சூழல் வேறு! தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சி – தேர்தல் ஆசையற்ற அறவழிப் போராட்ட எழுச்சி உருவாக வேண்டும். பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இளைஞர்களைத் திரட்ட வேண்டும்!

வாழ்ந்த தமிழினம், வீழ்ந்து கிடக்கிறது! உலகின் முதற்செம்மொழி சொந்த மக்களாலேயே புறக்கணிக்கப்படும் அவலம் நடக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு நாம் கொதித்தெழ வேண்டும்! ஆக்க வழிப்பட்ட மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இளம் தலைமையே எழுந்து வா!

தமிழேத் தமிழர் வாழ்வு

நாம் யாருக்கு எந்த இனத்திற்கு என்ன தீங்கு செய்தோம்? நமக்கு ஏன் இப்படி இழப்புக்கு மேல் இழப்புகள் வருகின்றன? இந்தியா, இன்று வாழ்கிற நம்மை பார்த்து அச்சப்படவில்லை. நம் வரலாறும் மொழியும் அவர்களுக்கு அச்சத்தைத் தருகிறது. இடைக்காலத்தில் எத்தனை சந்தர்ப்பவாதிகள் வந்தாலும், இந்த இனம் பிரபாகரன்களை உருவாக்கிவிடும் ஆற்றல் மிக்கது என எதிரிகள் அறிந்துள்ளார்கள். எனவே, அவர்கள் அச்சப்படுகிறார்கள்! எனவேதான் நாம் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுகிறோம்!

எத்தனை அயல்மொழி ஆதிக்கம் செய்ய வந்தாலும் தமிழை அழிக்க முடியாது. வரலாற்றில் அது மீண்டும் மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளது!

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் – மங்காத தமிழென்று சங்கே முழங்கு! இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!” என புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பாடினார். இவ்வரிகள் வெறும் மொழி வாழ்த்தல்ல! பாராட்டு வரிகள் அல்ல! ஆழந்த பொருள் கொண்டவை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழினம் வாழும், தமிழர் தாயகம் நிலைத்திருக்கும். தமிழ் அழிந்தால் தமிழினம் சிதறும்; தமிழர் தாயகம் பறிபோகும்; அயலாரிடம் அண்டிப்பிழைக்கும் உதிரிகளாகச் சொந்த மண்ணிலேயே தமிழர்கள் மாறி விடுவார்கள் என்ற பொருளில்தான் பாவேந்தர் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்” என்றார்!

அவரே தான், “இனத்தைச் செய்தது மொழிதான்! இனத்தின் மனத்தை செய்தது மொழிதான்!” என்றும் பாடினார். ஒரு தேசிய இனத்தின் உளவியல் உருவாக்கம் – அதாவது நாமெல்லாம் ஓரினம் என்ற உறவு உருவாக்கம் (We Feeling) மொழி வழியாக நடப்பதை பல ஆய்வாளர்கள் கூறினார்கள். பாவேந்தர் பாரதிதாசன் இதைத் தன் வழியில் சிந்தித்துப் பாடினார்.

எனவே, நம் மொழி நம்மை இணைக்கிறது. அமெரிக்க மண்ணிலே புலம் பெயர்ந்த வாழும் தமிழர்கள் இந்தக் கருத்துகளை நீங்கள் பேசுங்கள்.
அமெரிக்க நாடு கருணையினால் கதவு திறந்து உங்களை அழைத்துக் கொள்ளவில்லை. உங்களின் அறிவாற்றல், செயல்திறன், உழைப்பு அனைத்தும் தேவை என்று கருதி, உங்கள் தகுதியறிந்து, ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகு உங்களை அழைத்திருக்கிறது. உங்கள் அலுவலகக் கடமைகளைச் சிறப்பாகச் செய்யுங்கள்; அதேவேளை நீங்கள் பிறந்த இனத்தின் உரிமை மீட்பிற்கான விழிப்புணர்வுப் பணிகளையும் விழிப்புணர்வோடு செய்யுங்கள்! நன்றி! வணக்கம்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.