ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை ! தஞ்சையில் - காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம் !

காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை ! தஞ்சையில் - காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம் !
 

“காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது” என தஞ்சையில், இன்று (19.10.2016) நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், மீ.தி.எ.கூட. திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்தது போல், பலநாள் பட்டினி கிடந்தவன் ஒரு கவளம் உணவை வாயில் வைக்கும்போது கையைத் தட்டி உணவுத் தட்டையும் பறித்துக் கொண்டது போல், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட காலவரம்புடன் ஆணையிட்ட போது, அதைத் தடுத்து விட்டது இந்திய அரசு!
நேற்று (18.10.2016) உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கை விசாரித்த போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்று மிகக் கடுமையாக நரேந்திரமோடி அரசின் தலைமை வழக்கறிஞர் ரோத்தகி வாதிட்டார். அத்துடன் காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பு பற்றி விசாரிக்கவும், ஆணையிடவும் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை, காவிரி வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

இந்திய அரசின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, ஒதுங்கிக் கொள்ள, நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்யுமோ என்ற அச்சம் உள்ளது.

தமிழ்நாட்டைப் பகை நோக்கோடு எதிர்த்துச் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் கர்நாடக அரசைவிடவும் தீவிரமாக, தமிழ்நாட்டுக் காவிரி உரிமைக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுப்போம் என்கிறது மோடி அரசு. இது நடக்கின்ற செயலா? இனி எந்தக் காலத்திற்கும் காவிரி உரிமை தமிழ்நாட்டிற்கில்லை என்று மறைமுகமாக இந்திய அரசு சொல்வது போல் உள்ளது.

காவிரியை இழந்துவிட்டால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் 24,50,000 ஏக்கர் பாசன நிலம் காவிரியை நம்பி உள்ளது. காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கி வருகிறது காவிரி!

காவிரி டெல்டா மாவட்டங்களில் 16 இலட்சம் ஏக்கர் சாகுபடி என்னாவது? கடந்த ஐந்தாண்டுகளாகக் குறுவை சாகுபடி இல்லை. இவ்வாண்டு காலம் தாழ்ந்து மேட்டூர் அணை திறக்கப்பட்டு சம்பா சாகுபடி வேலைகளைத் தொடங்கியுள்ளனர். சம்பாப் பயிரைப் பாதுகாக்கத் தண்ணீர் ஏது?

கையறு நிலையில் கதியற்றுத் தவிக்கின்றனர் தமிழர்கள். கடந்த கால வரலாற்றை எண்ணிப் பார்க்கின்றனர்.

காலனிய வேட்டைக்காக இந்தியாவை உருவாக்கிய ஆங்கிலேயர் ஆட்சி பாதுகாத்த காவிரி உரிமையை விடுதலை பெற்ற இந்தியாவில் பாதுகாக்க முடியவில்லையே!

பத்தாண்டுகளுக்கு மேல் மைசூர் அரசுடன் கடும் உழைப்பெடுத்து பேச்சு நடத்தி 1924 ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தை உருவாக்கித் தமிழ்நாட்டைப் பாதுகாத்தது வெள்ளையர் ஆட்சி! 94 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையைக் கட்டித் தந்தது வெள்ளையர் அரசு! 2000 ஆண்டுகளுக்கு முன் சோழப் பேரரசன் உலகின் முதல் அணையாகக் கட்டிய அதே கல்லணையில் புத்தம் புதிய அணையை பெரிய அளவில் கட்டித் தந்தது வெள்ளையர் அரசு; புது ஆற்றை வெட்டித் தந்தது வெள்ளையர் அரசு!
 
இவை அனைத்தையும் பாழ்படுத்திவிட்டதே விடுதலை பெற்ற இந்திய அரசு! இதற்காகத்தான் கப்பலோட்டிண தமிழர் வ.உ.சி. சிறையில் செக்கிழுத்தாரா? திருப்பூர் குமரன் விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தாரா? எண்ணற்ற தமிழர்கள் குடும்பங்களை இழந்து, தன்னலம் மறந்து விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு இந்தியச் சிறைகளிலும் அந்தமான் சிறையிலும் இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார்களா?

காவிரி மட்டுமல்ல, வெள்ளையராட்சி பாதுகாத்துத் தந்த பல உரிமைகளையும் விடுதலை பெற்ற இந்திய ஆட்சி தமிழ்நாட்டிலிருந்து பறித்து விட்டது. கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்து கடல் உரிமையைத் தமிழர்களிடமிருந்து பறித்தது. இலங்கைப் படையாட்கள் 600 தமிழக மீனவர்களைக் கொன்றனர். இன்றும் தென்கடலில் மீன்பிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள். அன்றாடம் இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்கள் அடைக்கப்படுகிறார்கள். படகுகளைக் கடத்திக் கொண்டு போகிறது சிங்கள அரசு.

வெள்ளையராட்சியில் பாதுகாக்கப்பட்ட பாலாற்று உரிமை இந்திய ஆட்சியில் தமிழ்நாட்டிற்கில்லை.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி 999 ஆண்டுகளுக்கு அதன் உரிமை தமிழ்நாட்டிற்கு இருக்கும் வகையில் திருவிதாங்கூர் அரசுடன் ஒப்பந்தம் போட்டுத் தமிழர்களுக்கு அளித்தது வெள்ளையராட்சி. அதைத் தட்டிப் பறிக்க அந்த அணையை உடைக்கக் கேரளம் நேரம் பார்த்துக் காத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் ஒரு பகுதியான சிற்றணையை வலுப்படுத்திட செங்கல், சிமெண்ட் கொண்டு செல்ல – அனுமதிக்காமல் தடுக்கிறது கேரளம்! தட்டிக்கேட்டு – அந்த சட்டவிரோதச் செயலைத் தடுத்திட இந்திய அரசு மறுக்கிறது.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டில் கொஞ்ச நஞ்சமுள்ள தண்ணீரையும் தாரை வார்ப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்படுகிறது இந்திய அரசு! தாமிரபரணித் தண்ணீர் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தருகிறது.

காவிரி டெல்டாவைப் பாழ்படுத்திட – மீத்தேன் எடுக்க – பன்னாட்டு நிறுவனங்களை அழைக்கிறது இந்திய அரசு! பிடிவாதமாக – கொங்கு மண்டலத்தில் வேளாண் விளை நிலங்கள் வழியாக எரிவளி குழாய் பதித்து, நாசமாகக்கிடத் தீவிரம் காட்டுகிறது இந்திய அரசு!

பாலாற்றில் தண்ணீர் உறிஞ்சி, இந்தியா முழுமைக்கும் “ரயில் நீர்” கொடுக்க அதிகாரம் உள்ள இந்திய அரசுக்கு, ஆந்திர அரசு சட்டவிரோதமாகப் பாலாற்றில் கட்டும் புதிய நீர்த்தேக்கங்களைத் தடுக்க மட்டும் அதிகாரம் இல்லையா?
 
இதுபோல் ஒவ்வொரு உரிமையாக இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலால் தமிழ்நாடு இழந்து வருகிறது. கடைசியில் தமிழர் தாயகமாய் உள்ள தமிழ்நாட்டு உரிமையையும் இழக்க வேண்டி வரலாம்.

எனவே காந்தியடிகள் 1920-இல் வெள்ளை ஏகாதிபத்திய அரசுக்கெதிராகத் தொடங்கிய “ஒத்துழையாமை இயக்கம்” போல், தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் கடைபிடிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

ஒத்துழையாமை இயக்கத்தின் வேலைத் திட்டங்கள்

1. நடுவண் அமைச்சரவையிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் பதவி விலக வேண்டும்.

2. தமிழ்நாட்டிற்கு வரும் நடுவண் அமைச்சர்களுக்குத் தமிழ் மக்கள் கருப்புக் கொடி காட்ட வேண்டும். அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

3. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்.

4. இந்திய அரசு வழங்கும் சிறப்பு விருதுகளைத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள், வீரர்கள், சான்றோர்கள் ஏற்கக் கூடாது. நடுவண் அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுகளைத் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் ஏற்கக் கூடாது. ஏற்கெனவே இவ்விருதுகளைப் பெற்றோர் அவ்விருதுகளை இந்திய அரசிடம் திருப்பித் தர வேண்டும்.

5. நடுவண் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தமிழ்நாட்டு மக்கள் அங்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த வேண்டும்.

6. காவிரி உரிமையைப் பாதுகாத்துத் தராத – பாதுகாத்துத் தர மறுக்கும் இந்திய அரசு காவிரிப் படுகையைப் பாழ்படுத்தும் பெட்ரோலியம், எரிவளி, மீத்தேன் உள்ளிட்ட எதையும் எடுக்கக் கூடாது.

7. தமிழ்நாடு அரசு கர்நாடகத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

8. கர்நாடகத்தில் உற்பத்தியாகும் அரிசி, மஞ்சள், புதையிலை உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் தமிழ்நாட்டுச் சந்தையில் அனுமதிக்கக் கூடாது. அவற்றைத் தமிழ் மக்கள் வாங்கக் கூடாது.

9. நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை அங்கு பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் ஊழியர்களும், தமிழ் மக்களும் கர்நாடகம் செல்லாமல் தடுக்க வேண்டும்.

10. கர்நாடகத் திரைப்படத் துறையினருடன் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. கன்னடத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடாமல் தடை செய்ய வேண்டும்.

இன்னணம்,
பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.