ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியத்தின் பெயரால் தமிழ்நாட்டிலும் சம்பந்தர்களும், சுமந்திரன்களும் - எல்லாளன்



தமிழ்த்தேசியத்தின் பெயரால்
தமிழ்நாட்டிலும் சம்பந்தர்களும், சுமந்திரன்களும்
எல்லாளன்

தமிழ்நாடு அரசியல் சீரழிவின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதற்கு அடையாளமாக அ.இ.அ.தி.மு.க.வில் தன்னலக் கழுக்கள் அதிகாரத்தைப் பிடிக்க, தெருச் சண்டை நடத்திக் கொண்டுள்ளனர்.

ஒரு தன்னலக் குழு சசிகலா தலைமையிலும், இன்னொரு தன்னலக்குழு ஓ. பன்னீர்ச்செல்வம் தலைமையிலும் அருவருப்பு அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த இரு போட்டி குழுக்கள் மட்டுமின்றி, அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றைச் சர்வாதிகாரியாக விளங்கிய செயலலிதா – தமிழர்கள் உரிமைகளைக் காத்திட உருப்படியான கொள்கைகளோ செயல்பாடுகளோ கொண்டிருக்கவில்லை!

தி.மு.க.வும் தன்னலக் குழுக்களின் கட்சிதான்! உட்கட்சி சனநாயகத்தை மறுத்து – குடும்பச் சர்வாதிகாரப் பதவி முறையைக் கொண்டு வந்தவர்தான் கருணாநிதி!

அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டுத் தமிழர் – ஈழத்தமிழ நலன்களை பலியிட்டு, தில்லி அரசின் தமிழர் விரோத நிலைபாட்டை ஏற்றுக் கொண்டு – பதவியில் இருந்தவைதாம்!

இப்பொழுது செயலலிதா மறைவுக்குப் பின், தமிழ்த்தேசியம் பேசுவோரில் ஒரு சாரார் சசிகலாவை ஆதரித்து சண்டப்பிரசண்டம் செய்கின்றனர். இன்னொரு சாரார் ஓ. பன்னீர்ச்செல்வத்தை ஆதரித்து தோள் தட்டுகின்றனர்.

தமிழ்நாட்டு உரிமை காத்திடவும், தமிழ்நாட்டு உரிமையை ஆக்கிரமிக்கும் பா.ச.க. அரசை எதிர்த்திடவும் சசிகலாவை ஆதரிப்பதாக ஒரு குழுவினரும், ஓ. பன்னீர்ச்செல்வத்தை ஆதரிப்பதாக இன்னொரு குழுவினரும் கூறிக் கொள்கின்றனர்.

நடுவண் அரசை நடத்தி வரும் பா.ச.க.வினர் வெளியே தெரியும்படி ஓ. பன்னீர்ச்செல்வத்தை ஆதரித்துக் கொண்டே, திரை மறைவில் சசிகலா தரப்புடன் பேரம் பேசிக் கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான், சுப்பிரமணிய சாமி சசிகலாவுக்காக தில்லியிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை வரை நடத்திய “நீண்ட நெடும்பயணம்”!

இங்கு நான் கூறுவது, “சசிகலாவை ஆதரிப்பது அல்லது பன்னீர்ச்செல்வத்தை ஆதரிப்பது அவரவர் விருப்பம் – உரிமை! ஆனால், இந்த இனத்துரோகத்தை தமிழ்த்தேசியத்தின் பெயரால் செய்யாதீர்கள்” என்பதுதான்!

தி.மு.க. – அ.தி.மு.க. போன்ற போலிகளை நம்பி ஏமாந்து, ஒவ்வொரு உரிமையாக பலிகொடுத்து – பரி தவித்து நிற்கும் இனம், தமிழினம்!

அண்மைக்காலமாகத்தான், தி.மு.க. – அ.தி.மு.க. என்ற இருபெரும் இனத்துரோகக் கழகங்களுக்கு அப்பால் மக்கள் திரள் திரண்டு போராடி மீத்தேன் திட்டத்தைத் தடுத்துள்ளார்கள்; கெயில் குழாய் பதிப்பைத் தடுத்துள்ளார்கள். “தைப்புரட்சி” என்று சொல்லும் மாபெரும் தமிழர் எழுச்சி – உலகம் வியக்கும் வண்ணம் மாணவர்கள் – இளைஞர்கள் முன்னெப்பில் நடந்து, சல்லிக்கட்டு உரிமையை மீட்டுள்ளோம்.

கருவாகி – உருவாகி – களம் கண்டு – தலை நிமிர்ந்து – முன்னேறி வரும் இந்தத் தமிழின எழுச்சியை சீர்குலைக்கும் வகையில், தமிழ்த்தேசியத்தின் பெயரால் சசிகலாவை ஆதரிப்பதையும், பன்னீர்ச்செல்வத்தை ஆதரிப்பதையும் மன்னிக்க முடியாதக் குற்றச் செயல்களாகவே வரலாறு பதிவு செய்யும்!

இளைஞர்கள் முன்னெடுப்பில் எழுச்சி பெறும் தமிழர் உரிமைக் காப்பு – தமிழர் உரிமை மீட்பு முயற்சிகள், மேலும் வளர்ந்து – சரியான அமைப்பும் தலைமையும் உருவாகிட துணை நிற்பதே – சரியான தமிழ்த்தேசியமாகும்!

சசிகலா – பன்னீர்ச்செல்வம் தன்னலக் குழுக்களை தமிழ்த்தேசியத்தின் பெயரால் யாரும் ஆதரிக்க வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


அந்த இனத்துரோகப் பாதையில்தான் செல்வோம் என்று தொடர்ந்து சென்றால், இனத்துரோகிகளான சம்பந்தனும், சுமந்திரனும் – தமிழீழத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழ்த்தேசியத்திலும் இருக்கிறார்கள் என்பதை வரலாறு அடையாளம் காட்டும்!

1 comment:

  1. உண்மையான கருத்து... ஆனால் எத்தனை தமிழர்களுக்கு இது புரியும்?

    பாரத் காந்தி
    சென்னை

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.