"மாறு வேடத்தில் வந்த மீத்தேன் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர்!" பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
"மாறு வேடத்தில் வந்த மீத்தேன் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர்!" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
“காவிரியின் பால் சுரக்கும் அமுதக் கிண்ணம்” என்று பாவலர் தணிகைச்செல்வன் தஞ்சை மாவட்டத்தை ஒரு கவிதையில் பாராட்டியுள்ளார். “நெடுவாசல்” என்ற ஊரைப் பார்த்த போது இந்த வரிதான் நினைவுக்கு வந்தது.
“நெடுவாசல்” - தமிழர் தற்காப்பு எழுச்சியின் மற்று மொரு முகவரி! மற்றுமொரு மையம்! இந்தியாவுக்கே தெரிந்த பெயராயிற்று ‘நெடுவாசல்’!
நான் 23.02.2017 பிற்பகல், தோழர்களோடு நெடுவாசல் சென்றேன். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினர் நா. வைகறை, தஞ்சை இலெ. இராமசாமி, பட்டுக்கோட்டை இராசேந்திரன், நாடக வினோத் ஆகியோர் சென்றோம்.
அங்கு ஏற்கெ னவே களப்பணியில் செயல்பட்டுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மிசா. மாரிமுத்து, செறுவாவிடுதி சரவணன், நெடுவாசல் பசுமை இராமநாதன் ஆகியோருடன் நாங்கள் இணைந்து கொண்டோம்.
காவிரியின் கிளை ஆறான புதாறு பாய்ந்து வளம் பெருக்கிய ஊர் நெடுவாசல்! அவ்வூர் மட்டுமல்ல, அவ்வூரைச் சுற்றியுள்ள பல ஊர்களும் பசுந்தோப்பு களுக்குள்தான் குடி கொண்டுள்ளன. ஆற்றுநீரை வன்னெஞ்சக் கன்னடர்கள் தடுத்தாலும் ஊற்றுநீர், நெடுவாசல் வட்டாரத்தை ஊட்டி வளர்க்கிறது!
அந்த ஊற்று நீரையும் நஞ்சாக்கிட இந்திய அரசு, எரிவளிக் (எரிவாயு) குழாய்களை மண்ணுக்குள் இறக்குகிறது. ஏற்கெனவே திருவாரூர் நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் எடுப்பதற்கும் எரிவளி எடுப்பதற்கும் இந்திய அரசு இறக்கிய குழாய்கள் மண்ணைப் புண்ணாக்கி, நிலத்தடி நீரை நஞ்சாக்கி, விளை நிலங்களை வேதிப்பொருட்களின் களமாக்கி, வேளாண்மை, குடிநீர் அனைத்தையும் பாழாக்கி வாழ்வுரிமையை பறித்தன. அடுத்து மீத்தேன் எரிவளி எடுக்க அம்மாவட்டங்களில் கீழைப் பேராற்றல் கழகம் (Great Eastern Energy Corporation Limited - GEECL) என்ற தனியார் நிறுவனத்தை இந்திய அரசு களமிறக்கியது.
வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் அவர்கள் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட ஊர்களுக்குச் சென்று மக்களுக்கு விளக்கம் கூறி, மீத்தேன் ஆழக்குழாய்களைப் பிடுங்கி எறியும் போராட்டத்தைத் தொடக்கி வைத்தார். அவரின் மறைவுக்குப் பிறகு மீத்தேன் எதிர்ப்புப் போராட்ட அமைப்புகள் பல உருவாகி மக்களை எழுச்சி பெறச் செய்து மீத்தேன் தடுப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. மாபெரும் மக்கள் எழுச்சியின் முன் மீத்தேன் நச்சுக்குழாய் பதிப்பை தொடர முடியவில்லை.
கீழைப் பேராற்றல் கழகம் அலுவலகத்தைக் காலிசெய்துவிட்டு காவிரி மண்டலத்தை விட்டு வெளியேறியது. மீத்தேன் எடுப்புத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய அரசு அறிவித்தது.
ஆனால் இப்போது “ஹைட்ரோ கார்பன்” எடுக்கும் திட்டம் என்று சொல்லிக் கொண்டு நெடுவாசல் பகுதியில் இந்திய அரசின் எண்ணெய் இயற்கை எரி வளிக் கழகம் (ஓ.என்.ஜி.சி) குழாய்கள் பதிக்க வந்தது.
பக்கத்து மாவட்டங்களில் மண்ணைப் புண்ணாக்கி வாழ்வுரிமை பறித்த திட்டம்தான் இங்கு வேறு பெயரில் வருகிறது என்பதைப் புரிந்து கொண்ட நெடுவாசல் பகுதி மக்கள் அத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட மாணவர்கள் இளைஞர்கள், பொது மக்கள் அனைவரும் “எண்ணை எரிவளிக் கழகமே வெளியேறு, எங்கள் மண்ணில் நச்சுக் குழாய்களை இறக்காதே” என்று முழங்கி வருகின்றனர். நெடுவாசல் வந்த இந்திய அரசின் எண்ணெய் எரி வளிக் கழக அதிகாரிகளை மக்கள் சூழ்ந்து முற்றுகை இட்டனர். பின்னர் அவர்களை வெளியேற்றினர்.
நெடுவாசல், அதை ஒட்டிய கருக்காகுறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்ட ஊர்களில் பல இடங்களில் பல்லாயிரக்க ணக்கான அடி ஆழத்திற்குக் குழாய்கள் இறக்கி நச்சு எரிவளி எடுப்பது இந்திய அரசின் திட்டம்! இதை 15.02.2017 அன்று இந்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தருமேந்திர பிரதான் அறிவித்தார்.
“மீத்தேன் எடுக்கவில்லை; ஹைட்ரோ கார்பன் எரிவளி எடுக்கிறோம்” என்றார் அமைச்சர்.
நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த கல்வி கற்ற இளைஞர்கள் சென்னை உட்பட பல நகரங்களில் தொழில்நுட்பத்துறை உட்பட பல துறைகளில் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஊரில் வேறு பெயரில் மீத்தேன் நச்சுக் குழாய்த் துளைகள் போடப் போகிறார்கள் என்பதை உணர்ந்து தங்கள் ஊர் மக்களை எச்சரித்தார்கள். சூழலியல் அமைப்பு களும் மீத்தேன் எதிர்ப்பு அமைப்புகளும் எச்சரித்தன.
நெடுவாசல் மக்கள் கொந்தளித்தனர். தமிழ்நாடெங் குமிருந்து தமிழர் மரபு காப்போர், சூழலியலார், தமிழ்த்தேசியர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தோர், மாணவர்கள், இளைஞர்கள் _- நச்சு எரிவளித் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் குவிந்த வண்ணமுள்ளனர்.
சங்ககாலத் தமிழர் சூழலியல் பார்வை, அறநெறி, தற்காப்பு வீர உணர்ச்சி ஆகியவை இக்காலத் தமிழர் வழியாக வெளிப்படுகின்றன. நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் எதிர்ப்பு, இயற்கை வேளாண்மைச் செயலாக்கம் எல்லாம் சங்ககாலத் தமிழர் வாழ்வியல் தொடர்ச்சிதான்!
சல்லிக்கட்டு உரிமை கோரிப் போராடிய மாண வர்கள், இளைஞர்கள் - ஆண்களும் பெண்களும் எழுப் பிய “தமிழன்டா” முழக்கமும் சங்ககாலத் தொடர்ச்சி தான்!
தமிழ்த்தேசியம் என்பது வெறும் இனவாதம் அன்று; சரியான மாற்று வாழ்வியல்!
மாறுவேடத்தில் மாட்டிக் கொண்டார்
மீத்தேனின் உடன்பிறப்புகளில் ஒன்றைத்தான் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். “மீத்தேன்” என்ற பெயர் ஏற்கெனவே அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு, விரட்டப்பட்ட ஒரு திட்டம் என்பதால், மாறுவேடம் புனைந்து Hydro Carbon - ஐட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்று இத்திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது.
ஐட்ரோ கார்பன் Hydro Carbon - என்பது மண் ணின் ஆழத்திற்குள் நீர்மமும் கரிமமும் கலந்து உருவாகக்கூடிய வேதிக்கலவைகளின் பொதுப் பெயர்!
பெட்ரோலியம் எடுப்பதற்காகவோ அல்லது இயற்கை எரிவளி (Natural Gas) எடுப்பதற்காகவோ பல்லாயிரம் அடிக்குக் கீழே குழாய் இறக்கும் போது, காற்று (வளி) வெளி வருகிறது. இவ்விரண்டின் கலவை விகிதத்தைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒரு தனிப் பெயர் பெறுகிறது.
மீத்தேன் என்பது CH4 அதாவது 1 பங்கு கரிமமும் நான்கு பங்கு நீர்மமும் கொண்டது. C2H4 அதாவது இருபங்கு கரிமமும் ஆறுபங்கு நீர்மமும் சேர்ந்தால் அது ஈத்தேன் (Ethane). மீத்தேனின் உடன்பிறப்புகள்தான் ஈத்தேன், பென்டேன், புரோபேன், ஷேல் மீத்தேன், இயற்கை எரிவளி முதலியவை. இவற்றை எடுக்கும் முறை ஒன்றுதான்!
சிலவற்றை 500 அடி முதல் 5,000 அடிவரை குழாய் இறக்கி எடுப்பர். வேறு சிலவற்றை 5,000 முதல் 10,000 அடி வரை குழாய் இறக்கி எடுப்பர். நிலக்கரிப் படிவப் பாறைகளுக்கிடையே தங்கியுள்ள மீத்தேனை எடுக்கவும், வண்டல் பாறைகளுக்கிடையே தங்கியுள்ள ஷேல் மீத்தேனை எடுக்கவும், அல்லது வேறு வகை எரிவளியை எடுக்கவும் பயன்படும் தொழில்நுட்பம் ஒன்றே!
ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் நிலத்திற்குள் படுக்கை வசத்தில் குழாய்களை நீட்டி, 600க்கும் மேற் பட்ட வேதிப்பொருள்கள் கலந்த நீரை நீரியல் விரிசல் முறையில் செலுத்துவது என்பதுதான் அந்தத் தொழில்நுட்பம்!
அறுநூறு வகை வேதிப்பொருள்கள் கலந்த அந்த நஞ்சு நீர் நிலத்தடி நீரை நஞ்சாக்கும்; மேல்தளத்தில் நிலத்தை நஞ்சாக்கும்; அந்நிலத்தின் மீது ஓடிவரும் அல்லது பெய்யும் மழை நீரை நஞ்சாக்கும்.
இந்த பாதிப்பைத்தான் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நரிமணம், அடியக்க மங்கலம், களப்பால், கடமங்குடி, புலிவலம், கருப்பூர் முதலிய பல ஊர்களில் இன்று பார்க்கிறோம்.
நமக்குப் பெட்ரோலியம் எரிவளி எப்படிக் கிடைக்கும்?
பெட்ரோலியம், எரிவளி (மீத்தேன்) முதலியவற்றை கடலிலும் பாலை நிலப் பகுதியிலும்தான் எடுக்க வேண்டும், வேளாண் நிலங்களில், காலம் காலமாக மக்கள் குடியிருக்கும் ஊர்களில் இவை கிடைத்தாலும் எடுக்கக் கூடாது.
பெட்ரோலியம், எரிவளி (மீத்தேன்) முதலியவற்றை கடலிலும் பாலை நிலப் பகுதியிலும்தான் எடுக்க வேண்டும், வேளாண் நிலங்களில், காலம் காலமாக மக்கள் குடியிருக்கும் ஊர்களில் இவை கிடைத்தாலும் எடுக்கக் கூடாது.
கனிமங்களும், உலோகங்களும் மக்கள் வாழ்க்கை யைச் செழுமைப்படுத்த மட்டும்தான் பயன்பட வேண்டும். மக்கள் வாழ்க்கையைப் பலியிட்டு, கனிமங் களை, உலோகங்களை எடுக்கக் கூடாது.
“சென்னை நகருக்குக் கீழே கோடிக்கணக்கான டன் அளவிற்குத் தங்கம் இருக்கிறது; பிளாட்டினம் இருக் கிறது’’ என்று கண்டுபிடிக்கப்பட்டால், உடனே சென்னை நகரைக் காலி செய்து விட்டு, தங்கம், பிளாட்டினம் எடுக்கச் சுரங்கங்கள் தோண்டுவார்களா? மாட்டார்கள்!
ஏன்? சென்னையில் உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய முதலாளிகள், பெரிய பெரிய அதிகாரிகள், பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், ஆட்சித் தலைவர்கள், பெரிய பெரிய நடிகர்கள் என முக்கியப் பெரும்புள்ளிகள் இருக் கிறார்கள். அவர்களுக்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. எனவே சென்னையைக் காலிச் செய்ய மாட்டார்கள்!
ஆனால் நெடுவாசல் போன்ற எத்தனை சிற்றூர்கள் அழிந்தாலும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பெருநிறுவனங்களின் முதலாளிகள் கவலைப்படுவ தில்லை. ஆரியச் சாணக்கியன் தொடங்கி இன்றைய ஐரோப்பிய - அமெரிக்க ஏகபோக முதலாளியப் பொருளியல் வல்லுநர்கள் வரை “ஒரு நாட்டைக் காப்பாற்ற ஓர் ஆட்சியைக் காப்பாற்ற பல ஊர்களை, பல நகரங்களை அழிக்கலாம்” என்ற கொள்கை உடையவர்கள்தாம்! அதை வெளிப்படையாகவே ஊடகங்களில் சொன்னார், பா.ச.க. தலைவர் இல. கணேசன்!
நமது தமிழ்த்தேசியமோ, சென்னை நகரத்தையும் அழிக்கக்கூடாது சிற்றூரையும் அழிக்கக்கூடாது; அதற்கேற்ற வாழ்வியல் முறைகளை, தொழில் உற்பத்தி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது!
நுகர்வு வெறியை இலாப வெறியை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். நுகர்வும், இலாபமும் ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும்.
வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கலாமா?
விளைநிலங்களில் பெட்ரோலியம் எடுப்பது, எரிவளி எடுப்பது எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் அல்லவா? அவற்றைத் தடுக்கலாமா? என்று ஆட்சியாளர்கள் வினா எழுப்புகிறார்கள்.
விளைநிலங்களில் பெட்ரோலியம் எடுப்பது, எரிவளி எடுப்பது எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் அல்லவா? அவற்றைத் தடுக்கலாமா? என்று ஆட்சியாளர்கள் வினா எழுப்புகிறார்கள்.
நெடுவாசல் அதை ஒட்டியுள்ள கருக்காக்குறிச்சி ஆகிய இரு ஊர்களுக்குள்ளும் சென்று சுற்றிப் பார்த்தோம். மக்களிடம் பேசினோம்.
இந்தப் பகுதி மிக மிக வளமான பகுதி; இயற்கை தன் செல்வத்தை வாரி வழங்கும் பகுதி. இங்கிருந்து பலாப்பழம், மாம்பழம், தேங்காய், எலுமிச்சை, பூக்கள் என ஏராளமாக ஏற்றுமதி ஆகின்றன. அத்தனை மரங்களும், செடி கொடிகளும் தழைத்துக் கிடக்கின்றன.
இங்குள்ள பசுமை இராமநாதன் தோப்பைப் பார்த் தோம். அதில் இலட்சக்கணக்கான மரங்கள் இருக்கின்றன.
சந்தனமரம், செம்மரம், தேக்கு, பர்மாத் தேக்கு, சீனாத் தேக்கு, ஆப்பிரிக்கா தேக்கு, குமிழ்த் தேக்கு, ரோஸ் உட், வேங்கை இன்னும் இன்னும் பல்வேறு வகை அரிய மரங்கள், விலை மிதிப்பு மிக்க மரங்கள் இருக்கின்றன; ஒரு மரம் இலட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை போகக் கூடிய தரங்களும் இருக்கின்றன, அம்மரங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இவை மட்டுமல்ல நெல், நிலக்கடலை எனப் பல பயிர்கள் சாகுபடியாகின்றன. நிலத்தடி நீர் நிறைய இருக்கிறது. ஒரு வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தேன் அவ்வளவு தெளிவான, குளிரான, தூய நீர்!
இவையெல்லாம் இவ்வூர்களின் மக்களை வாழ வைக்கின்றன. வெளியூர்களில் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கும் பயன்படுகின்றன.
இவற்றை மேலும் வளர்த்து, விரிவுப்படுத்துவது வளர்ச்சித் திட்டமா? இவற்றை அழித்து, பெங்களூர்ப் பணமுதலை மல்லிகார்ச்சுனப்பா நிறுவனமான “ஜெம்” நிறுவனம் கொழுக்க, நச்சு நீர் உற்பத்தி செய்யும் ஐட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பது வளர்ச்சித் திட்டமா?
ஜே.எம். மல்லிகார்ச்சுனப்பா சித்தேசுவரா, பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருமுறை இருந்தவர். 2009 -_ 2010 ஆண்டுகளில் கர்நாடக மாநில பா.ச.க துணைத் தலைவராக இருந்தவர். 2004லிருந்து 2014ஆம் ஆண்டுவரை, இவர் தான் பா.ச.க. நாடாளுமன்றக் குழுவின் பொருளாளர்! பா.ச.க.வின் பணச்சுரங்கம்! 2016 - சூலையில் இவர் இறந்துவிட்டாலும், இவரது “ஜெம்” நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
தற்போது நெடுவாசலில் கொண்டுவரப்படவுள்ள ஐட்ரோ கார்பன் திட்டத்திற்காக நெடுவாசலில் 4,000 அடிக்குத் துளையிட்டு சோதனை நடத்த, கடந்த 2009ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது காங்கிரசு - தி.மு.க. கூட்டணி ஆட்சி! காங்கிரசு முன்வைத்த அத்திட்டத்தையே தற்போது பா.ச.க. செயல்படுத்தத் துடிக்கிறது.
இந்திய அரசில், காங்கிரசுக் கூட்டணி ஆண்ட போதும், இப்போது பா.ச.க. கூட்டணி ஆளுகின்ற போதும் அதன் ஒரே “வளர்ச்சிக் கொள்கை’’ ஏகபோக முதலாளிகளின் பெரு நிறுவனங்கள் கொழுக்க, வேளாண்மையைப் பலியிட்டு, உழவர்களை நிலத்தை விட்டு வெளியேற்றும் திட்டம்தான்!
சப்பான் நாட்டில் இரும்பு கிடைக்கவில்லை. வெளிநாட்டில் இரும்பு வாங்கித்தான் தொழில் வளர்ச்சி கண்டார்கள். நமக்குப் பெட்ரோலியம், எரிவளி எடுப்பது மக்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் என்றால் நம்நாட்டில் கிடைக்கும் வேறு வளங்களைப் பயன்படுத்தி தேவையானவற்றை வெளிநாடுகளில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
நெடுவாசல் மட்டுமல்ல, விளைநிலங்களில் எங்கு நச்சுக் குழாய் இறக்கினாலும் தடுப்போம், விரட்டியடிப்போம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment