ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!

மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! 
இந்திய அரசு மரபீனி மாற்றக் கடுகுப் பயிருக்கு இசைவு அளித்துள்ளது. இதுவரை இந்தியாவில் மரபீனி மாற்ற உணவுப் பயிருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மோடி அரசு முதல் முறையாக மரபீனி மாற்ற உணவுப் பயிரான கடுகுக்கு இசைவு அளித்துள்ளது. இது அடுத்தடுத்து மரபீனி மாற்ற உணவுப் பயிர்களை அனுமதிப்பதற்கான தொடக்க நடவடிக்கையாகும்!

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபீனி பொறியியல் இசைவுக் குழு (Genetic Engineering Approval Committee - GEAC) கடந்த 11.05.2017 நாளிட்ட அறிவிப்பின் மூலம், இந்த அனுமதியை வழங்கியிருக்கிறது.

“தாரா கலப்பினக் கடுகு” (Dhara Mustard Hybrid – DMH11) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மரபீனி மாற்றக்கடுகு, தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தீபக் பென்டால் குழுவினரின் தயாரிப்பு ஆகும்.

மரபீனி மாற்றக் கடுகு மற்றும் மரபீனி மாற்ற உணவுப் பயிர்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அமர்த்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு கடந்த 2013ஆம் ஆண்டு, மிக விரிவான ஆய்வறிக்கையை அளித்தது.

மரபீனி மாற்றப்பட்ட கடுகுக்கு எதிராக இந்தத் தொழில்நுட்ப வல்லுநர் குழு எழுப்பிய எந்த வினாவுக்கும் விடையளிக்காமலேயே மரபீனி பொறியியல் இசைவுக்குழு இந்த மரபீனி மாற்றக் கடுகுக்கு வணிக வகைப் பயன்பாட்டுக்கு இசைவு அளித்துள்ளது.

ஆய்வு வயல்களிலேயே அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட இந்த DMH11 மரபீனி மாற்றக் கடுகு விதைகள், இனி சந்தைக்கு வர இருக்கின்றன. இந்த மரபீனி மாற்றக் கடுகு, சுற்றியுள்ள பிற பயிர்களுக்கும் மண்ணுக்கும் நிலத்தடி நீருக்கும் கேடு விளைவிப்பதோடு மட்டுமின்றி, இதை உண்னும் மனிதர்களுக்குக் கொடிய நரம்பியல் நோய்களை உருவாக்கும் ஆபத்தும் உள்ளது.

இந்த மரபீனி மாற்றக் கடுகு வகையினம் களைக்கொல்லி தாங்கும் (Herbicide tolerant variety) வகையினமாகும். இந்தக் கடுகு விதைகள் முறையாக முளைப்பதற்கு குளுஃபோசினேட் (Glufosinate – C5H12NO4P) என்ற உயர் கலைக்கொல்லியைப் போட வேண்டும்.

இந்த குளுஃபோசினேட் களைக்கொல்லி, தாரா கலப்பினக் கடுகைத் தவிர சுற்றியுள்ள பிற தாவரங்களை களையாகக் கருதிக் கொன்றுவிடும். 

தாரா கலப்பினக் கடுகு இப்போது பயன்பாட்டிலுள்ள கடுகைவிட நோய் தாங்குத்திறன் குறைவானது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு குளுஃபோசினேட் களைக்கொல்லியின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதை புகழ்பெற்ற வேளாண் அறிஞர் பென் புரூக் (Ben Brook) அமெரிக்காவில் மேற்கொண்ட விரிவான தனது ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கிறார். 

“அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களுக்கு களைக் கொல்லியின் பயன்பாடு” என்ற தனது ஆய்வறிக்கையை 2012ஆம் ஆண்டு பென் புரூக் வெளியிட்டார். கடுகு மட்டுமின்றி, சோயா உள்ளிட்ட களைக் கொல்லி எதிர்ப்பு வகையின மரபீனி மாற்றப் பயிர்களை புதிதாக ஆய்வு செய்து, அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அதேபோல், இந்த மரபீனி மாற்றக் கடுகு போன்ற மரபீனி மாற்றப் பயிரினங்களில் குளுஃபோசினேட் பயன்பாடு அதிகரிப்பது “தரைக்கு வந்த சுனாமி” என்று ஹார்க்கர் மற்றும் ஆய்வுக் குழுவினர் 2012ஆம் ஆண்டு தங்களது ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளனர். (Weed Science – 2012 - 60(2), Page 143, 144).

இப்போது வேளாண்மைப் பணிகளுக்கு நிலவும் ஆள்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ஆட்களை வைத்துக் களையெடுப்பு செய்யாமல் இருக்க தாரா கலப்பினக் கடுகு பயன்படும் என இதற்கு ஞாயம் சொல்லப்படுகிறது.

ஆனால், களையெடுப்பு ஆள் கூலியைவிட இந்த மரபீனி மாற்றக் கடுகு விதை விலையும், அதற்கு இடப்படும் குளுஃபோசினேட் களைக்கொல்லியின் விலையும் மிகப்பெரும் சாகுபடிச் செலவை உருவாக்கும்.

குளுஃபோசினேட் பயன்பாடு மண்ணின் வளத்தைக் கெடுப்பதோடு, நிலத்தடி நீரையும் நஞ்சாக்குகிறது. 

குளுஃபோசினேட் பயன்பாட்டின் காரணமாக அந்தக் கடுகு வயல் இருக்கும் பகுதி முழுவதிலும் தேனீக்கள் மற்றும் பட்டாம் பூச்சுகளின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தேனீ, பட்டாம் பூச்சுகள் குறைவதால் இந்த வயலைச் சுற்றியுள்ள பிற வயல்களில் பிற பயிர்களின் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு, மற்ற உழவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

குளுஃபோசினேட்டை சுண்டெலியின் மீது செலுத்தி சோதித்த போது, அதன் நரம்பு மண்டலம் குறிப்பாக மூளை வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு, இனம் கண்டறிய முடியாத நரம்பியல் நோய்கள் ஏற்பட்டதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆய்வுகளை மேற்கோள் காட்டி, தொழில்நுட்ப வல்லுநர் குழு 2013இல் அளித்த அறிக்கை இந்த மரபீனி மாற்றக் கடுகுகளுக்கு கொடிய நரம்பியல் நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு என எச்சரித்தது. 

இவை எது பற்றியும் கவலைப்படாமல் மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு, தாரா கலப்பினக் கடுகுக்கு இசைவு அளித்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது!

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் கரே இந்த அனுமதி அறிக்கையில் கையெழுத்திட்டால்தான், அது ஆணையாக வெளிவரும்.

இதற்கு முன்னர், மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு பி.ட்டி. கத்தரிக்கு அனுமதி வழங்கிய பின்னாலும் அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் செயராம் இரமேஷ் நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பி.ட்டி. கத்தரிக்கு அனுமதி வழங்க மறுத்தார்.

இதை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு, தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் கவே தாரா மரபீனி மாற்றக் கடுகுக்கு அனுமதி அளிக்க மறுக்க வேண்டும்.

ஏனெனில் இந்த அனுமதியை வைத்துக் கொண்டு, அரிசி - கோதுமை உள்ளிட்ட மரபீனி மாற்ற உணவுப் பயிர்கள் சந்தைப் பயன்பாட்டுக்கு வரிசையில் வந்து நிற்கும் ஆபத்து உள்ளது.

எனவே, இந்திய அரசு மரபீனி மாற்றக் கடுகைக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.