சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்! பெ. மணியரசன் அறிக்கை!
சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று (14.05.2017), கர்நாடகத்தின் சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடாத “சாதனை”யை பெருமையுடன் கூறியுள்ளார்.
“காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும், நான் இதுவரை திறந்துவிடவில்லை. ஏனெனில், நம்மிடம் தண்ணீரில்லை. நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதைச் செயல்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.
அத்துடன், தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியைக் கன்னட இனவெறி அமைப்பான சலுவாளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பாராட்டியதையும் பெருமையுடன் கூறியுள்ளார்.
தமிழர்களுக்குரிய உரிமையை உச்ச நீதிமன்றம் ஆணையிட்டாலும் செயல்படுத்த மாட்டேன், கன்னட இனவெறியன் வாட்டாள் நாகராஜ் என் ஆட்சியைப் பாராட்டுகிறார் என்று ஒரே செவ்வியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுவதன் பொருள் என்ன?
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், தமிழினப் பகையைக் கக்கி கன்னட இனவெறியைத் தூண்டிவிட்டால், தனக்கு கூடுதலாக வாக்குகள் கிடைக்குமென்று காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா கணக்குப் போடுகிறார். கர்நாடகத்தில் கன்னடர்கள் தமிழின எதிர்ப்பு பகை உணர்ச்சியில் இருக்கிறார்கள் என்பதால் வாக்கு வேட்டையாட தமிழினப் பகையை மக்களிடம் வெளிப்படுத்துகிறார் முதலமைச்சர் சித்தராமையா!
கர்நாடகத்தில் அரசியல் கட்சிகள்தான் இனவெறியைத் தூண்டுகின்றன, மக்களிடம் கன்னட இனவெறியோ தமிழினப் பகை உணர்ச்சியோ இல்லை என்று பேசுவோர், இதிலிருந்தாவது பாடம் கற்க வேண்டும்.
கன்னட இனப்பற்றுடன் முதலமைச்சரோ மக்களோ இருந்தால் அது தவறில்லை! கன்னட இனவெறியுடன் செயல்படுவதுதான் குற்றச்செயல் என்கிறோம்.
காங்கிரசுக்காரரான கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுவதுபோல், தமிழ்நாட்டு அரசியலில் கன்னட எதிர்ப்பு பேச வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கவில்லை. காவிரிச்சிக்கலில் இந்திய அரசு தமிழினத்திற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டுகிறது என்றும், கர்நாடகத்திலுள்ள காங்கிரசு – பா.ச.க. – மதச்சார்பற்ற சனதா தளம் போன்ற கட்சிகள், கன்னட இனவெறிக் கட்சிகள், தமிழினத்திற்கு எதிராகப் பகை உணர்ச்சியைத் தூண்டிவிடுகின்ற கட்சிகள் என்றும் என்றைக்காவது தமிழ்நாட்டுக் கழகங்கள் பேசியதுண்டா?
நமக்கு ஆசான் போன்றவர்களிடம் பாடம் கற்க வேண்டும். அல்லது நம்முடைய பகைவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும். தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. போன்ற இரண்டுங்கெட்டான்களிடம் பாடம் கற்கக் கூடாது.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்களோ, ஆட்சிக்கு வரத் துடிக்கும் தி.மு.க. தலைமையோ தமிழினத் தற்காப்பு அரசியலை – தமிழின உரிமை மீட்பு அரசியலை முன்வைத்து இயங்குவார்கள் என்று இனியும் எதிர்பார்க்காமல், இளந்தலைமுறையினரும் பட்டறிவு மிக்க மூத்த தலைமுறையினரும் இணைந்து தகுதியான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வர வேண்டும் என்ற பாடத்தைத்தான் சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment