ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: பா.ச.க.வின் ஆணைப்படி அடக்குமுறை! கி. வெங்கட்ராமன் கண்டனம்!

தோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: பா.ச.க.வின் ஆணைப்படி அடக்குமுறை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
கடந்த 2017 மே 21 அன்று, சென்னை கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஒன்றுகூடிய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன், தோழர்கள் இளமாறன், அருண் உள்ளிட்ட 17 பேர் மீது, தமிழ்நாடு காவல்துறையினர் பொய் வழக்குப் புனைந்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இன்று (29.05.2017) அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகிய நால்வரை காவல்துறையினர் குண்டர் சட்ட வழக்கில் மீண்டும் தளைப்படுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் இச்செயல், தமிழின உணர்வாளர்களையும், தமிழ் மக்களையும் கடும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது.

திருமுருகன் உள்ளிட்ட தோழர்கள் இதுவரையில் எந்தவகை வன்முறைச் செயல்களிலும் ஈடுபட்டதாக வழக்கு இல்லை. எனினும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியிருப்பது, தமிழ்நாடு அரசின் அரசியல் உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.

கடந்த ஏழாண்டுகளாக சென்னை கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்று வந்த தமிழீழ மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை, வன்முறைச் செயல் போல் தமிழ்நாடு அரசு சித்தரிக்க முயல்வது, இந்திய அரசின் எடுபிடியாகத் தமிழ்நாடு அரசு மாறிவிட்டதையே காட்டுகிறது. பா.ச.க. தனது ஆரியத்துவ ஆதிக்கத்தை எதிர்ப்போரை தனது எடுபிடி எடப்பாடி அரசைப் பயன்படுத்தி ஒடுக்குவது கடும் கண்டனத்திற்குரியது!

தமிழ்நாடு அரசு, உடனடியாக தோழர் திருமுருகன் உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்ட வழக்கை இரத்து செய்து, அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்! அமைதியான முறையில் போராடுவோர் மீது அடக்குமுறைகளை ஏவும் எதேச்சாதிகாரப் போக்கை தமிழ்நாடு அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.