ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கதிராமங்கலத்தைவிட்டு கூட்டாக மக்கள் வெளியேற முயற்சி : தமிழ்நாடு அரசு காவல் முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

கதிராமங்கலத்தைவிட்டு கூட்டாக மக்கள் வெளியேற முயற்சி : தமிழ்நாடு அரசு காவல் முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!
தஞ்சை மாவட்டம் – திருவிடைமருதூர் வட்டம் - கதிராமங்கலம் கிராமத்தைக் கடந்த 02.06.2017லிருந்து தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த ஆயிரம் பேர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு ஊருக்குள் தெருக்கள், சந்துகள், திடல்கள் அனைத்திலும் காவல்துறையினரை நிரப்பி, அக்கிராமத்தின் 2,000 மக்களைப் பணயக் கைதிகள் போல் வைத்திருக்கிறார்கள்.

ஆயிரம் காவல்துறையினரின் முற்றுகைக்குள் அக்கிராமத்தை வைத்துக் கொண்டு, இந்திய எண்ணெய் – எரிவளிக் கழகத்தினர் (ஓ.என்.ஜி.சி.), எண்ணெய் மற்றும் எரிவளிக் குழாய்கள் இறக்கும் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களில் 500 பேரை 02.06.2017 அன்று கைது செய்து, மண்டபங்களில் வைத்து இரவில் விடுவித்தனர். அதேவேளை அம்மக்களுக்கு ஆதரவாக அங்கு சென்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், இளைஞர்கள் விசயரங்கன், சீனிவாசன், வழக்கறிஞர் கரிகாலன் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த உழவர்கள் 6 பேர் உள்ளிட்ட பத்து பேரை பல்வேறு பிரிவுகளுடன் பிணை மறுப்புப் பிரிவையும் சேர்த்து, வழக்குப்போட்டு குடந்தைக் கிளைச் சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ளார்கள். 

கதிராமங்கலத்தில் 2,000 மக்களின் குடிமையியல் உரிமைகளை (Civil Rights) முற்றிலுமாகப் பறித்து, காதணி விழாக்கள் உள்ளிட்ட குடும்ப சடங்குகளைக்கூட சரியாக செய்யவிடாமல் முடக்கி வைத்துள்ளதைக் கண்டித்து, 03.06.2017 அன்று அம்மக்கள் தங்கள் கிராமத்திலுள்ள 93 கடைகளையும் அடைத்துத் துயரத்தை வெளிப்படுத்தினர். மறுநாள் (04.06.2017) அம்மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். அங்கு முற்றுகையிட்டுள்ள காவல்துறையினர் கருப்புக் கொடிகளைக் கிழித்து எறிந்து மக்களை மிரட்டியுள்ளனர். 

காவல்துறையினரின் இந்த அட்டூழியங்களுக்கிடையே மிகவும் பாதுகாப்பாக எசமானத் திமிருடன் இந்திய எண்ணெய் - எரிவளிக் கழக அதிகாரிகள், எண்ணெய் மற்றும் எரிவளிக்காக ஆழ்குழாய்களை இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 

இந்த உரிமைப் பறிப்புகளையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள முடியாத அக்கிராம மக்கள், இன்று (05.06.2017) அக்கிராமத்திலிருந்து வெளியேறி, முள்ளுக்குடி என்ற கிராமத்தில் கூட்டமாக அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

ஊரைவிட்டு காவல்துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும், இந்திய எண்ணெய் எரிவளிக் கழக அதிகாரிகள் நடத்தும் ஆக்கிரமிப்புப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து, அம்மக்கள் முள்ளுக்குடியில் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீக்குளிக்க முயன்ற போது அங்குள்ள காவல்துறையினர் அவர்களைத் தடுத்துள்ளார்கள் என்ற செய்தியும் வருகிறது. முள்ளுக்குடியைவிட்டு வெளியேறவும் மக்கள் முயற்சி செய்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. 

கதிராமங்கலத்தில் கையாளும் காவல் முற்றுகை எண்ணெய் எரிவளிக் குழாய் இறக்கும் செயல்திட்டத்தை, நெடுவாசல் - வடகாடு போன்ற பகுதிகளுக்கான வெள்ளோட்டமாகவே கருத வேண்டியுள்ளது. 

இந்திய அரசின் அடியாள் போல் தமிழ்நாடு அரசு செயல்படுவதைப் பார்த்தால், மேற்கு வங்கத்தில் அன்றிருந்த ஆட்சியாளர்கள் தங்களின் அதிகாரத் திமிரால் நந்திகிராமம், சிங்கூர் உழவர்களை காவல்துறையை வைத்து துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்செய்களை அரங்கேற்றி மக்களை பலியிட்ட அதே அடக்குமுறைகளை தமிழ்நாடு அரசும் செய்யுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

காவல்துறையின் முற்றுகைக்குள் அகப்பட்டு – குடிமையியல் உரிமைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று (04.06.2017) மாலை தஞ்சாவூரிலிருந்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நானும் மற்றும் நிர்வாகிகளும் இரு கார்களில் கதிராமங்கலம் நோக்கிச் சென்ற போது, குடந்தையை அடுத்த கருப்பூர் நாற்சாலை ரவுண்டானாவில் காவல்துறையினர் எங்களைப் பலவந்தமாக வழிமறித்துக் கைது செய்தனர். 

கதிராமங்கலம் முற்றுகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தஞ்சை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 19 - குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமை மற்றும் சனநாயக உரிமைகளை தடுப்பதிலும், பறிப்பதிலும் தன் அலுவல் கடமைக்கு அப்பாற்பட்டு தீவிரம் காட்டுகிறார். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, சொந்த முடிவெடுத்து கதிராமங்கலம் காவல் முற்றகையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். அம்மக்கள் தங்கள் குடிமை உரிமைகளை மீண்டும் பெற வாய்ப்பளிக்க வேண்டும். இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகம் காவிரி டெல்டா மாவட்டங்களின் விளை நிலங்களில் புதிதாகக் குழாய்கள் இறக்குவதைப் “பழுது பார்த்தல்” என்ற சாக்கில் தந்திரமாகப் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தடை விதித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு தன்னுடைய தமிழ் மக்களுடன் நிற்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் நலனுக்காக உள்ள நடுவண் அரசின் கங்காணியாகச் செயல்படக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
www.kannottam.com
www.Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.