"கதிராமங்கலத்தில் மாடு மேய்ப்பவர்களைக்கூட பின் தொடரும் போலீஸ்! ஏன்?"
"கதிராமங்கலத்தில் மாடு மேய்ப்பவர்களைக்கூட பின் தொடரும் போலீஸ்! ஏன்?"
தஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் காவல்துறையினர் செய்த அட்டூழியங்கள் குறித்து, “கதிராமங்கலத்தில் மாடு மேய்ப்பவர்களைக்கூட பின் தொடரும் போலீஸ்! ஏன்?" என்ற தலைப்பில், விகடன் இணைய இதழ் செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அது வருமாறு:
"கதிராமங்கலத்தில் மாடு மேய்ப்பவர்களைக்கூட பின் தொடரும் போலீஸ்! ஏன்?"
"எங்கள் மண்ணில் ஒருபோதும் நஞ்சுகளை விதைக்க விடமாட்டோம்; ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மீத்தேன் எடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என மே 15-ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வருகிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் கிராம மக்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வழக்குப்போட்டு சிறையில் தள்ளிய காவல்துறையின் அடக்குமுறை இன்னும் நீடித்து வருகிறது எனக் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் கதிராமங்கலத்தினர்.
இந்நிலையில், கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ. சுந்தர ராசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தினர், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் இணைந்து, கும்பகோணத்தில் ஜூன் 20-ஆம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தின் ஒருபகுதியாக, அந்தக் கிராம மக்களின் குமுறல்களையும், காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கி, அருணபாரதி இயக்கியுள்ள "கதிராமங்கலம் கதறல்" எனும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. போராட்டத்தை ஒருங்கிணைத்த காவிரி உரிமை மீட்புக்குழுவின் தலைவர் பெ. மணியரசனிடம் பேசினோம்.
"கதிராமங்கலம் கிராமத்தைக் காவல்துறையினர் சட்டவிரோதமாக முற்றுகையிட்டிருப்பதுடன், அப்பகுதி மக்களின் வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருக்கிறார்கள். இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை வேண்டும்" என்றார் தடாலடியாக.
மேலும் அவர் கூறுகையில், "கதிராமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில், நிலத்தடிநீர் கெட்டுப்போய்விட்டது, குடிநீர் மஞ்சளாகவும், கலங்கலாகவும் காணப்படுவதற்கு ஓஎன்ஜிசி நிறுவனமே காரணம். ஆங்காங்கே எண்ணெய் கிணறுகள் அமைத்துள்ளதால் விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மையுடையதாக மாறிவிட்டன. இப்பகுதி முழுவதுமே ரசாயன பூமியாக மாறிவிட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சிருகநேரி கிராம மக்கள் முப்போகம் விவசாயம் செய்து செழிப்பாக வாழ்ந்தார்கள். அங்கே எண்ணெய்க்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால், குடிநீர், நிலத்தடிநீர் கெட்டுப்போய் விவசாயம் பாழாய் போயுள்ளது. அந்தக்கிராமத்தில் வாழ்பவர்களுக்கு தோல்வியாதி உள்ளிட்ட பல வியாதிகள் ஏற்பட்டு, பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதேபோன்று நரிமணம், பனங்குடி கிராமங்களிலும் ஓ.என்.ஜி.சி-யின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீரில் நச்சுகள் கலந்து விவசாயம் செய்ய முடியாமல், அந்தக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊரைவிட்டு வெளியேறி அருகலுள்ள மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடி, மன்னார்குடி அருகேயுள்ள கோவில் களப்பால் ஆகிய கிராமங்களிலும் எண்ணெய் சேமிப்புக்கிடங்கு, சுத்திகரிப்பு நிலையம் உள்ளதால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தைப் பாழ்படுத்தி எண்ணெய்க் கிணறு அமைப்பதுதான் வளர்ச்சியா? உணவு உற்பத்தியை வீழ்ச்சியடையச் செய்வதுதான் வளர்ச்சியா?
காவிரியில் தண்ணீரை நிறுத்திவிட்டால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். இதன்மூலம் ரசாயன ஆலைகளுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் விவசாய நிலங்களைத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கான சூழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
காவிரி மண்டலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனமும், கதிராமங்கலத்தைவிட்டு காவல்துறையும் வெளியேற வேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது. மாற்று எரிசக்தியை உருவாக்க வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம்" என்றார்.
வழக்கறிஞரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான நல்லதுரையிடம் பேசினோம். "கதிராமங்கலம் மக்கள் என்ன தவறு செய்தார்கள்? ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், 10 டி.எஸ்.பி-க்கள், 25 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.பி., டி.ஐ.ஜி எனக் காவல்துறையினர் அந்தக்கிராமத்தில் முகாமிட்டிருப்பது எதற்காக? ஒரு சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார், வருவாய் அலுவலர், வி.ஏ.ஓ என அத்தனை பேரும் அங்கே முகாமிட்டிருக்கிறார்கள்.
அப்படி என்ன தவறு செய்தார்கள் கதிராமங்கலம் மக்கள்? கதிராமங்கலத்திற்கு யார் வந்தாலும் 'ஆதார் கார்டு இருக்கிறதா?' என்று கேட்பதுதான் ஜனநாயகமா? ஊரைவிட்டு வெளியே போனால், 'எங்கே போகிறீர்கள்? எதற்காக போகிறீர்கள்? யாரைப் பார்க்கப் போகிறீர்கள்?' என்று கேட்டு அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறார்கள் அதிகாரிகள்.
புல் அறுக்கப் போகிறவர்களையும், மாடு மேய்க்கப் போகிறவர்களையும் பின்தொடர்ந்து சென்று நோட்டம் விடுகிறது காவல்துறை. கடந்த 17 வருடங்களாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து முடித்துவிட்டது. இப்போது அதற்கு கீழே இருக்கும் கேஸ் எடுக்கத் துடிக்கிறார்கள். திடீர், திடீரென்று நெருப்புப் பற்றி எரிகிறது; தீப்பிழம்பாக கிளம்புகிறது. உண்மையைச் சொல்ல அரசு மறுக்கிறது. மத்திய அரசைத் தட்டிக்கேட்க தமிழக அரசு தயங்குகிறது.
கதிராமங்கலத்தில் தண்ணீர் கெட்டுப்போய்விட்டதால், ஓ.என்.ஜி.சி நிறுவனமே தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தது. போராட்டத்திற்குப் பிறகு தண்ணீர்க் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். காவலர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளின் உணவு, தங்குமிடத்திற்கான செலவுகளுக்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் இதுவரை 40 லட்சம் ரூபாய்க்கும்மேல் செலவு செய்திருப்பதாக சப்-கலெக்டர் சொல்வதிலிருந்தே நீங்கள் நிலைமையைப் புரிந்துகொள்ளலாம்" என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றுவந்த பேராசிரியர் ஜெயராமனிடம் பேசினோம். "ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஏற்கெனவே அமைத்துள்ள எரிவாயுக் குழாயை மராமத்துப்பணிகள் செய்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், அந்தத்தகவல் உண்மையல்ல. மீத்தேன் வாயு எடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். அதை எதிர்த்துதான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதற்காக என்னையும், வேறு 10 பேரையும் வழக்குப்போட்டு, சிறையில் தள்ளினார்கள். எது செய்தாலும், போராட்டத்தை நாங்கள் கைவிடுவதாக இல்லை. தொடர்ந்து போராடுவோம்" என்றார்.
அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்காகத்தான் , கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அல்ல....!
நன்றி: விகடன் இணையதளம்,
http://www.vikatan.com/…/93164-even-cowherds-are-under-susp…
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
Leave a Comment