கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு சமூக வலைத்தளப் பதிவுக்காக... கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் குபேரன் பிணையில் விடுதலை..!
கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு சமூக வலைத்தளப் பதிவுக்காக... கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் குபேரன் பிணையில் விடுதலை..!
கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் ஆ. குபேரன், இன்று (26.07.2017) மாலை, கடலூர் நடுவண் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானார்.
கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும், அக்கிராமத்தின் மீது போடப்பட்ட காவல்துறை முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அக்கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் ஏற்பட்ட பேரழிவின்போது தளைப்படுத்தி - முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட பத்து பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 20.07.2017 காலை 10 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமாகோயில் அருகில் மாணவ மாணவிகள் திரள வேண்டும் என்று தோழர் குபேரன் தனது முகநூலில் வேண்டுகோள் வைத்திருந்தார்.
அவ்வேண்டுகோளை ஏற்று அங்கு திரண்ட மாணவ மாணவிகளை காவல்துறையினர் அச்சுறுத்திக் கலைத்து விட்டனர். அங்கு சென்ற தோழர் குபேரன் மாணவர்கள் கலைந்து சென்ற நிலையில், வீடு திரும்பி தன் கடையில் இருந்திருக்கிறார். அவரை சிதம்பரம் காவல்துறையினர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தளைப்படுத்தி, கடலூர் நடுவண் சிறையில் அடைத்தனர். தடுப்புக் காவல் பிரிவின் கீழ் சிதம்பரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் குபேரன் மீது, பிணை மறுப்புப் பிரிவான - குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்டம் - 7(1)(a) பிரிவின் கீழ் வழக்குப் போடப்பட்டது.
இந்நிலையில், நேற்று (25.07.2017) சிதம்பரம் நீதிமன்றம் தோழர் குபேரனுக்கு நிபந்தனைப் பிணை வழங்கியது. சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கோபாலகிருஷ்ணன் அவர்களும், வழக்கறிஞர்கள் முகுந்தன், இதயச்சந்திரன் உள்ளிட்டோரும் தோழர் குபேரனுக்காக நேர்நின்று வாதாடினர்.
இதனையடுத்து, இன்று (26.07.2017) மாலை, கடலூர் நடுவண் சிறையிலிருந்து தோழர் குபேரன் விடுதலையானார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அர. கனகசபை, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, சிதம்பரம் தோழர் பிரபாகரன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் சிறை வாயிலில் அவரை முழக்கமிட்டு வரவேற்றனர்.
தோழர் குபேரன் கைதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், சமூக வலைத்தள செயல்பாட்டாளர்களுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! தோழர் குபேரனை பிணையில் எடுக்க உதவிய சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றி!
சிறையிலிருந்து விடுதலையான பின், சிறைச்சாலை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய தோழர் குபேரன், கதிராமங்கலத்துக்காகவும், தமிழினத்தின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடுவோம், அதை இதுபோன்ற அடக்குமுறைகளால் தடுத்துவிட முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தொடருந்து போராட்டக்களத்தில் நிற்போம்! போராடுவோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment