ஆந்திரத்தில் புதிய தடுப்பணைகள் பாலைவனமாகும் வட தமிழ்நாடு! கட்டுரை : க. அருணபாரதி
ஆந்திரத்தில் புதிய தடுப்பணைகள் பாலைவனமாகும் வட தமிழ்நாடு! கட்டுரை : க. அருணபாரதி
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முகாமை யான குடிநீர் மற்றும் வேளாண் சாகுபடிக்கான நீராதரமாக விளங்கும் பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகள், ஏற்கெனவே நீர் வறண்டு பாலைவனம்போல் காட்சியளித்துக் கொண்டுள்ளன.
ஆந்திரத்தின் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் இவ்விரு ஆறுகளிலும், மழை வெள்ளக் காலங்களில் வழிந்து வரும் உபரி நீர்கூட தமிழ்நாட்டுக்குக் கிடைத்து விடக் கூடாது என்ற வன்மத்தோடு பாலாற்றிலும், கொசஸ்தலை ஆற்றிலும், ஏற்கெனவே உள்ள தடுப்பணைகள் போதாதென்று ஆந்திர அரசு மொத்தமாக 7 புதிய தடுப்பணைகளைக் கட்டி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலாற்றின் வழியாகவும், கொசஸ்தலை ஆற்றின் வழியாகவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4.5 இலட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்பட வட தமிழ்நாட்டின் முகாமையான குடிநீர் ஆதாரமும் இவையே!
அதிலும் கொசஸ்தலை ஆறு, சென்னைக்கு ஓரளவு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு நீர் கொண்டு வரும் முகாமையான ஆறாகும். இதில் தடுப்பணை கட்டுவதன் மூலம், சென்னையின் குடிநீர் சிக்கல் மேலும் பூதாகரமாகப் போகிறது! கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மட்டும் தற்போது 5 புதிய தடுப்பணைக் கட்டி வருகிறது ஆந்திர அரசு!
ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு, வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வழியாக தமிழ்நாட்டிற்கு வருகிறது. திருவள் ளூர் மாவட்டத்தின் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் சற்றொப்ப 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற் பட்ட நிலங்களில் கொசஸ்தலை ஆற்று நீரை நம்பியே வேளாண்மை செய்யப்படுகிறது.
மேலும், தாமரைப்பாக்கம் அணை, வள்ளூர் அணை, வெளியகரம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றை நிரப்பும் முகாமையான நீராதாரம் கொசஸ் தலை ஆறுதான்! அதன் பின்பே, சென்னை எண்ணூர் வழியே கடலில் கலக்கிறது, கொசஸ்தலை ஆறு!
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் -_ பள்ளிப் பட்டு அருகி லுள்ள ஆந்திர மாநிலத்தின் எல்லை யான வெளியகரம் பகுதியில் கொசஸ் தலை ஆற்றிலும், அதன் வரத்துக் கால்வாய்களிலும் என மொத்தம் 5 இடங்களில் ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளை கட்டி வரு கின்றது. பருவமழை தொடங்குவதற்குள் இப் பணிகளை நிறைவேற்றி முடிக்க ஆந்திர அரசு அதிகாரிகள் முனைப் புடன் செயல்பட்டு வருகின்றனர்.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மேலே உள்ள தாமரைப்பாக்கம் அணைக் கட்டு, மீஞ்சூர் அருகிலுள்ள வள்ளூர் அணைக்கட்டு ஆகியவற்றின் மூலம் கொசஸ் தலை ஆற்றின் வழியே பாசனம் பெறும் உழவர்கள், இதனைக் கண்டித்து தடுப்பணை கட்டப்படும் பகுதிக்கேச் சென்று போராட்டம் நடத்தி, ஆந்திர அரசின் இந்த புதிய தடுப்பணைகள் கட்டும் முயற்சியை வெளியுலகிற்குக் கொண்டு வந்தனர்.
இதற்கு முன்பே, இத்திட்டம் தமிழ்நாடு அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தும், அவர்கள் அதற்கு உரியவாறு எதிர்வினையாற்றவில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர், அப்பகுதி மக்கள்!
இன்னொரு பேரிடியாக, கொசஸ்தலை ஆற்றில் மட்டுமின்றி, ஏற்கெனவே வறண்டு கிடக்கும் பாலாற்றிலும் புதிய தடுப்பணைகளைக் கட்டி வருகிறது ஆந்திர அரசு!
கர்நாடகத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகி வரும் பாலாற்றின் குறுக்கே, ஏற்கெனவே கர்நாடக அரசு கோலார் மாவட்டத்தின் பேத்தமங்கலம், இராம்சாகர் ஆகிய பெரிய அணைகளைக் கட்டியது. இவற்றைக் கடந்து, ஆந்திர மாநிலப் பகுதியில் வெறும் 22 கிலோ மீட்டர் ஓடி வரும் பாலாற்றில், ஆந்திர அரசு இதுவரை 32 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது.
இந்நிலையில் பாலாற்றின் துணை ஆறுகளிலும், கால்வாய்களிலும் புதிய தடுப்பணைகள் கட்டும் பணியிலும், ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளிலும் ஆந்திர அரசு முழுவீச்சில் இறங்கி யுள்ளது.
கங்குந்தி என்ற இடத்தில் உள்ள தடுப்பணை உயரம் 21 அடியாகவும், கிடிமானிபெண்டா என்ற இடத்தில் உள்ள தடுப்பணை உயரம் 25 அடியாகவும் உயர்த்தப் படவுள்ளது. பாலாறு கிராமத்திலுள்ள தடுப் பணை உயரத்தை 15 அடியாகவும், போகல்ரே என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை 8 அடி யிலிருந்து 30 அடியாகவும் உயர்த்து வதற்கான பணிகள் நடைபெறு கின்றன.
குறிப்பாக, வாணியம்பாடி அருகி லுள்ள கங்குந்தி கிராமத்தில் “மேம் பாலம் அமைக்கும் பணி“ என்ற பெயரில் புதிய தடுப்பணையைக் கட்டி வருகிறது ஆந்திர அரசு! கங்குந்தி பகுதியில், 50 அடி உயரத்திற்கு புதிய மேம்பாலம் அமைவதால் கீழே சுமார் 36 அடி உயரத்துக்கு பாலத்தின்கீழ் தடுப்பணை போல் அமைத்து தண்ணீரை தேக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. தடுப்பணை அமைப்பதற்காக கட்டுமான பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.
ஏற்கெனவே கடந்த 2006ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தின் குப்பம் பகுதியிலுள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே “தடுப்பணை” என்ற பெயரில், 320 கோடி ரூபாய் செலவில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க முயன்றது ஆந்திர அரசு! தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்ததன் காரணமாக அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தற்போது புதிதாக பல்வேறு தடுப்பணைகள் கட்டப் பட்டு வரும் நிலையில், தடுக்கப்பட்ட கணேசபுரம் தடுப்பணை அருகில், 7 அடி உயரத்தில் உள்ள தடுப் பணையை 20 அடி வரையும் உயர்த்திக் கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளது ஆந்திர அரசு! ஆக, பாலாற்றின் துணை ஆறுகளில் தற்போது மொத்தமாக 7 புதிய தடுப்பணைகளை கட்டி வருகிறது.
மேலும், பாலாற்றின் துணை ஆறான திப்ரே ஆற்றின் 6 இடங்களிலும், காட்டாற்றின் குறுக்கே ஓரிடத்திலும் புதிய தடுப்பணைகளைக் கட்டி வருகிறது ஆந்திர அரசு! இருபது கிலோ மீட்டர் நீளம் கொண்ட திப்ரே ஆற்றின் குறுக்கே புதிதாக 5 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. நாயனூர் என்ற இடத்தில் திப்ரே ஆற்றில் 21 அடி உயரத்திற்கு ஆறாவது தடுப்பணை கட்டப்படவுள்ளது. இவை தவிர பெத்தவெங்கா என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே 5 கோடியில் தடுப்பணை என்ற பெயரில் நீர்த்தேக்கம் ஒன்று கட்டப்படவுள்ளது. இந்தத் தடுப்பணைகளுக்காக, சற்றொப்ப 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
ஏற்கெனவே கடந்த 2016ஆம் ஆண்டு சூலை மாதம், வேலூர் - வாணியம்பாடி அருகிலுள்ள புல்லூரில் நம் கண் முன்னேயே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியதும், அதில் மழை நீர் தேங்கி நின்றபோது தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட வராமல் தடுக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அப்பகுதி உழவர் சீனிவாசன் அதே தடுப்பணையில் தற்கொலை செய்து கொண்டதும் நாம் மறக்கக்கூடிய நிகழ்வுகளல்ல!
வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், 1892ஆம் ஆண்டு சென்னை மற்றும் மைசூர் மாகாணங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில், கடை மடைப் பாசனப் பகுதியின் அனுமதியைப் பெறாமல் நீர் தடுப்புக் கட்டுமானங்களை எழுப்பக் கூடாதெனத் தெரிவிக்கிறது. ஆனால், அதை ஆந்திரமும்சரி கர்நாடகமும்சரி தொடர்ந்து மீறி வருகின்றன. தமிழன் அழியட்டும் எனக் கருதுகின்ற இந்திய அரசும், இதைக் கண்டு கொள்வதே கிடையாது!
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் (மார்ச்சு 2017), பாலாற்றில் ஆந்திர அரசு கட்டி வரும் புதிய தடுப் பணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அவற்றை யெல்லாம் பொருட்படுத்தாத ஆந்திர அரசு இப்போது புதிதாக மேலும் தடுப்பணைகளைக் கட்ட முன் வந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிறிதளவும் பொருட்படுத்தாமல், எவ்வித தயக்கமும் இன்றி இந்த புதிய தடுப்பணைகளைக் கட்டி வருகிறது ஆந்திர அரசு! மேலும், பல இடங்களில் வனப்பகுதியில் புதிய அணைகளை கட்ட இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முறையான அனுமதியைப் பெறு வதற்குக் கூட ஆந்திர அரசு முயலவில்லை.
ஆந்திர அரசின் இந்தத் தடுப்பணைகள், ஒப்பந்தத் தையும் நீதிமன்றத் தடைகளையும் மீறிய சட்ட விரோதக் கட்டுமானங்களாகும்! இந்திய அரசு இவற்றைக் கண்டுகொள்ளாத நிலையில், தமிழ்நாட்டு உழவர்கள் ஒருங்கிணைந்து போராடி, இதனை முறியடிக்க வேண்டும். மக்கள் போராட்டங்களின் வழியே இந்த சட்ட விரோதக் கட்டுமானங்களை இடித்துத் தள்ள வேண்டும் இல்லையெனில் வட தமிழ் நாடு பாலைவனமாகும்!
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழின் சூலை 1-15 இதழில் வெளியான கட்டுரை!
ஆசிரியர் : பெ. மணியரசன்
இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்
ஊடகம் :www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
பேச: 7667077075, 98408 48594
Leave a Comment