வடக்கிந்தியக் கம்பெனி வைசிராயின் பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் - க. அருணபாரதி கட்டுரை.
வடக்கிந்தியக் கம்பெனி வைசிராயின் பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் - தோழர் க. அருணபாரதி கட்டுரை.
தமிழ்நாட்டையும், தமிழர்களின் குரலையும் இழிவுபடுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது, இந்திய அரசு!
மனித குலத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் அணு உலைகள் வேண்டாம் என கூடங்குளத்தில் மக்கள் போராடினார்கள். ஆனால், அப்போராட்டத்தை சிறிதும் பொருட்படுத்தாத இந்திய அரசு, அங்கு ஒன்றல்ல, இரண்டல்ல பத்து அணு உலைகளைத் திணித்தது!
தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் வேண்டாமென கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நாம் போராடி வந்த நிலையில்தான், நெடுவாசலில் ஐட்ரோகார்பன் திட்டத்தைத் திணித்தது இந்திய அரசு!
கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுத்து _ அக்கிராமத்தின் நிலத்தடி நீரைப் பாழ்படுத்த வேண்டாமென நாம் கடுமையாகப் போராடிவரும் நிலையில்தான், தமிழ்நாட்டில் மேலும் 110 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவளி எடுக்கும் திட்டத்தை அறிவித்தது இந்திய அரசு!
இப்பொழுது, காவிரிப் படுகையை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடெங்கும் பல்வேறு இடங்களில் தமிழர்கள் போராட்டங்கள் முன்னெடுத்துவரும் நிலையில்தான், காவிரிப் படுகையின் கடலூர் _ நாகை மாவட்டங்களில் சற்றொப்ப 45 கிராமங்களின் 23,000 ஹெக்டர் நிலத்தில், எரிபொருள், வேதியியல் மற்றும் எரிம வேதிப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petroleum, Chemicals and Petrochemicals Investment Region - PCPIR) அமைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி வைசிராயின் மறுவடிவமான வடக்கிந்தியக் கம்பெனி வைசிராயின் தில்லித் திட்டம் இது!
இந்திய அரசின் இத்திட்டத்தை ஏற்று கடந்த 2017 சூலை 19 அன்று, தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் சார்பில் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தின் பரப்பளவைவிடப் பெரிதாக - சற்றொப்ப 230 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த முதலீட்டு மண்டலத்தில், கடலூர் மாவட்டத்தின் கடலூர், புவனகிரி, சிதம்பரம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 25 கிராமங்களும், நாகை மாவட்டத்தின் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 20 கிராமங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை கடற்கரை கிராமங்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி!
இந்த 45 கிராமங்களிலுள்ள 57,345 ஏக்கர் நிலப்பகுதியை ஒருங்கிணைத்து புதிய நகரியம் அமைக்கப்படும் என்றும், அந்த நகரியத்தை நிர்வகிக்க உறுப்பினர், செயலாளர் நிலையில் ஓர் அதிகாரி அமர்த்தப்படுவார் என்றும், அங்கு அமைக்கப்பட உள்ள பெட்ரோலியம், வேதியியல் மற்றும் எரிம வேதியியல் சார்ந்த அனைத்துத் தொழில்களுக்கும் உறுப்பினர் செயலாளரே அனுமதி அளிப்பார் என்றும் தமிழ்நாடு வீட்டு வசதித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், இத்துறையின் அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் 25.07.2017 அன்று இத்திட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், இத்திட்டம் குறித்து தனக்குத் தெரியாது என்றும், இது குறித்து தெரிந்து கொண்டு பின்னர் பதில் அளிக்கிறேன் என்றும் கூறுகிறார். உண்மையில், இங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்பதே மிகப்பெரும் வினாவாக உள்ளது!
காவிரி நீர் மறுப்பாலும், வரலாறு காணாத வறட்சியாலும் காவிரிப் படுகையின் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இச்சூழலில், மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன் திட்டங்களைத் திணிக்க இந்திய அரசு பெருமுயற்சி எடுத்து வருகிறது. அதன் இன்னொரு பகுதியாகவே, கடலூர் _ நாகை மாவட்டங்களைக் குறிவைத்து இந்த புதிய முதலீட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டு மண்டல அறிவிப்பின் மூலம், இந்த கிராமங்களில் இனி வேதிப்பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளும், பெட்ரோல் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளும் நிறுவப்படவுள்ளன. ஏற்கெனவே, கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து - கடலூரில் ஆந்திராவைச் சேர்ந்த நாகார்ஜூனா குழுமத்தின் நாகார்ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மையமாகக் கொண்டே, இந்த புதிய முதலீட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச்சில், காங்கிரசு _தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது, நாடெங்கும் வேதிப் பொருட்கள் மற்றும் எரிம வேதியியல் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தனி முதலீட்டு மண்டலங்கள் ஏற்படுத்த, இந்திய அமைச்சரவை முடிவெடுத்தது.
மேற்கு வங்கத்தில் இம்முதலீட்டு மண்டலத்தை அமைக்க இடது முன்னணி அரசு முன்வந்தது. 2007ஆம் ஆண்டு, இம்முதலீட்டு மண்டலத்துக்காக ஒதுக்கப்பட்ட கிராமம்தான், உழவர்கள் போராட்டத்தால் உலகறிந்த கிராமமாக மாறிய நந்திகிராமம் ஆகும். நந்திகிராமத்தில், இந்தோனேசியாவின் சலீம் குழுமத்தின் வேதிப்பொருள் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தவந்த அரசுக்கும் உழவர்களுக்கும் ஏற்பட்ட மோதலின்போது, காவல்துறையினரால் உழவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட களங்கத்தின் காரணமாக, இடது முன்னணி அரசு தனது 34 ஆண்டுகாலத் தொடர்ச்சியான ஆட்சியை இழந்தது. 2011 ஏப்ரலில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக வந்த மம்தா பானர்ஜி அத்திட்டத்தை இரத்து செய்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உழவர்களிடமே திருப்பி அளித்தார்.
மேற்கு வங்கத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலையில், கேரளாவுக்கு இத்திட்டம் கொண்டு செல்லப்பட்டது. 2015 ஆகத்தில் (24.08.2015), கேரளாவில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என அம்மாநில தலைமைச் செயலாளர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், 2012 மார்ச்சில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா வெளியிட்ட “விசன் 2023’’ என்ற ஆவணத்தில், இத்திட்டம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, 2012ஆம் ஆண்டு சூலையில், இந்திய அரசின் வேதியியல் மற்றும் எரிமவேதியியல் துறை, இத்திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுமதியளித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக இருந்தவர் வேறு யாருமல்ல, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிதான்!
அதன்பின், 2014 பிப்ரவரியில், இத்திட்டம் குறித்து இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, இந்திய அரசின் இத்திட்டத்தை - அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோத்துக் கொண்டுதான் வரவேற்றன. ஆனால், இப்பொழுது நெடுவாசல் _ கதிராமங்கலம் என சூழலியல் பாதிப்புத் திட்டங்களுக்கு மக்களிடம் பெரும் எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இப்பகுதிக்குள், வேதியியல் மற்றும் எரிமவேதியியல் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பெரும் மூதலீட்டில் அமைக்கப்படும். இந்திய அரசு இத்திட்டத்திற்காக சற்றொப்ப 1,146 கோடி ரூபாய் ஒதுக்கவுள்ளதாம்! தமிழ்நாட்டின் வேளாண் நிலங்களை அழித்து, வேதிப்பொருள் மண்டலம் உருவாக்குவதில், இந்திய அரசுக்கு அவ்வளவு ஆர்வம்!
கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து, கடலூரில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிப்காட் _ தொழிற்சாலை வளாகத்தின் காரணமாக ஏற்பட்டு வரும் சூழலியல் பாதிப்புகளை ஆவணப்படுத்தி வரும் சமூக சூழல் கண்காணிப்பு (Community Environmental Monitoring - CEM) என்ற தன்னார்வ அமைப்பினர், இத்திட்டத்தின் காரணமாக இம்மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுவதும், மாசுபடுத்தப்படுவதும் நடக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறது.
ஏற்கெனவே, கடலூரின் சிப்காட் வளாகத்தில் பூச்சிக் கொல்லி உள்ளிட்ட அபாயகரமான வேதிப் பொருட்களைத் தயாரிக்கும் 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அப்பகுதியின் இயற்கைச் சூழல் மீதும், மக்களின் உடல் நலத்தின் மீதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வேதிப்பொருள் முதலீட்டு மண்டலத் திட்டம் இந்த பாதிப்புகளை மேலும் கொடுமையாக்கும் என்று எச்சரிக்கிறது அவ்வமைப்பு!
ஏற்கெனவே, கடலூரில் இயங்கி வரும் சிப்காட் தொழிற்பூங்காவிலுள்ள வேதியியல் தொழிற்சாலைகளாலும், பெரியபட்டு சாயப்பட்டறை, பரங்கிப்பேட்டை - அனல்மின் நிலையம் போன்ற வற்றாலும், நாகை மாவட்டத்தில் அமையவுள்ள அனல் மின் நிலையங்களாலும் மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை இம்மாவட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய திட்டம் இம்மாவட்ட மக்களை முற்றிலு மாக நிலைகுலையச் செய்யும்.
இந்த புதிய முதலீட்டு மண்டலத்திற்குள் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகளும் சுத்திகரிப்பு நிலையங்களும், ஒவ்வொரு நாளும் பல இலட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடியவை. ஏற்கெனவே கடலூர் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு ஆகியவற்றில் கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் இதனை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறி வேளாண்மையும், குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெருமளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது, இப்பகுதியில் நடந்து வரும் கொஞ்சநஞ்ச வேளாண்மையையும் சீர்கெடுத்துவிடும்.
இந்தத் திட்டம் ஒருபுறத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்னொருபுறத்தில், கிழக்குக் கடற்கரைச் சாலையை எப்படியாவது தமிழ்நாடு அரசிடமிருந்து கைப்பற்றிக் கொள்ள இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் காவிரிப்படுகையின் வேளாண்மையை அழித்து, அங்கிருந்து மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோகார்பன் பொருட்களை கடலூர் _ காரைக்கால் துறைமுகங்கள் வழியாகவும், கிழக்குக் கடற்கரைச் சாலையின் வழியே சென்னைதுறைமுகத்திற்குக் கொண்டுசென்று ஏற்றுமதி செய்வதே இந்திய அரசின் பெருங்கனவுத் திட்டம்!
மீத்தேன் எடுத்துத் தீர்ந்த பிறகு, அதற்கும் கீழ் கிடைக்கும் நிலக்கரியைத் தோண்டியெடுத்துப் பயன்படுத்தவே, சென்னையின் எண்ணூர் தொடங்கி நாகை மாவட்டம் வரையில் கடலோரங்களில் புதிது புதிதாக பல அனல் மின் நிலையங்கள் இந்திய அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டத்தில் மட்டும் 9 அனல் மின் நிலையங்கள் வரவுள்ளன. ஆக, இந்த அனல் மின் நிலையங்களின் மூலம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம் அளித்து இலாபம் ஈட்டுவது இந்திய அரசின் இன்னொரு பெருந்திட்டம்!
இந்தத் திட்டங்களால் தமிழ்நாட்டின் சூழலியல் சீர்கெட்டு, மக்கள் நோயாளிகளாவதும், வேளாண்மை சீர்கெட்டு தமிழக உழவர்கள் தற்கொலையுண்டு இறப்பதும், இந்திய அரசின் கண்களை உருத்தாது! ஏனெனில், இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழர்களும் தமிழரின் தாயகமும் அழித்தொழிக்கப்பட வேண்டியவை!
எனவே, தமிழ்நாட்டு மக்கள் விழிப்பு பெற்று இந்த புதிய திட்டங்களை விரட்டியடிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தை எதிர்ப்பதாக இருந்தால், முதலில் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்!
சூழலியலுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது! வேளாண்மையைப் பெருக்கி, சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத சிறுதொழில் உற்பத்தி நிறுவனங்களை வளர்த்து, மண்ணின் மக்களில் தொழில் முனைவோரை ஊக்குவித்து வளர்த்தெடுப்பதே, உண்மையான “வளர்ச்சி”யாகும். பெருநிறுவனங்களுக்காக சூழலியலை நாசம் செய்வதற்குப் பெயர், “வளர்ச்சி” அல்ல, “பேரழிவு”! தமிழ்நாடு அரசு அதை செய்யக்கூடாது!
(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 ஆகத்து 1-15 இதழில் வெளியானது)
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 ஆகத்து 1-15 இதழில் வெளியானது)
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment