கேரளத்தின் அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் அமர்த்தத்தால் தி.மு.க. - அ.தி.மு.க. சாயம் வெளுத்து விட்டது! தோழர் பெ. மணியரசன்.
கேரளத்தின் அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் அமர்த்தத்தால் தி.மு.க. - அ.தி.மு.க. சாயம் வெளுத்து விட்டது! தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும், அவர்களது பொருளியல் – கல்விச் சூழல்கள் குறித்தும் ஆராய 1969இல் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், ஒரு குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வந்த தலைவர் இளையபெருமாள் அவர்கள் தலைமையில் அக்குழு செயல்பட்டது.
அக்குழுவின் பல்வேறு பரிந்துரைகளுள் ஒன்றுதான், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்ற கோரிக்கை! இக்கோரிக்கையை திராவிடர் கழகத் தலைவர் பெரியார் வரவேற்றார். 1970இல், அதற்காக கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.
இதனையடுத்து, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி 02.12.1970இல் கொண்டு வந்தார். அதற்குத் தடை கோரி ஆதிக்கவாதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் 14.03.1972 அன்று தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பு தமிழ்நாடு சட்டத்தைத் தடை செய்யவில்லை. ஆகமப் பயிற்சி கொடுத்து அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. 1976 சனவரி 31 வரை ஆட்சியிலிருந்த கருணாநிதி ஆகமப் பயிற்சி கொடுத்து அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கிட நிறைய வாய்ப்பிருந்தது. ஏன் அவர் அதைச் செய்யவில்லை?
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 24.09.1979 அன்று, நீதிபதி மகாராசன் தலைமையில் அமைக்கப்பட்ட 12 பேர் குழு, 1982இல் அளித்த அறிக்கையில், சாதி அடிப்படையில் உச்ச நீதி மன்றம் எத்தடையும் விதிக்கவில்லை என்றும், ஆகமப் பயிற்சி அர்ச்சகர்களுக்குக் கண்டிப்பான தேவை என்றும் கூறியது. அதனடிப்படையில், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
இதன்பிறகு, 1989 சனவரியிலிருந்து 1991 சனவரி வரை கருணாநிதி முதல்வராக இருந்தார். அதன்பின், 1996 மே முதல் 2001 மே வரை முதல்வராக இருந்தார். அப்போதும் அவர் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கவில்லை!
1992இல் செயலலிதா ஆட்சிக்கு வந்த பின், “அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்” என்று கூறினார். ஆனால் எதையும் செய்யவில்லை! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், செயலலிதாவுக்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் வழங்கியதோடு, அர்ச்சகராக்குவது குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை!
கருணாநிதி அவர்கள் 2006இல் மீண்டும் முதலமைச்சர் ஆன போது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்காகப் புதிதாக ஒரு அரசாணையை (எண் 118) 23.05.2006 அன்றும், ஒரு சட்டத்திருத்தத்தை (சட்டம் 15/2006) 14.07.2006 அன்றும் இயற்றினார்.
ஏற்கெனவே அவர் இயற்றிய சட்டத்தைத் தள்ளுபடி செய்யாமல், ஒரே திருத்தம் சேர்த்து உச்ச நீதிமன்றம் 1972இல் தீர்ப்பு வழங்கியிருக்கும்போது, புதிய சட்டம் ஏன் இயற்றினார்? சமூகநீதிச் சாதனையாளராகக் காட்டிக் கொள்வதற்கான ஒரு பாசாங்கு அது!
இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து ஆதிக்க சாதியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். இந்தத் தடவையும் உச்ச நீதிமன்றம் கருணாநிதியின் சட்டத்தைத் தள்ளுபடி செய்யாமல், ஆகமப்படி அமைந்த கோயில்களுக்கு அந்த அந்த ஆகமத்தைச் சேர்ந்த இந்துக்களுக்குப் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக்கலாம் என்றும், அர்ச்சகராவதற்குப் பிறப்பு வழியில் எந்தத் தடையும் இல்லை; சாதி, கோத்ரம் போன்ற எந்த நிபந்தனையும் கிடையாது என்று 15.12.2015 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்போது அத்தீர்ப்பின் விளக்கத்தை –ஆன்மிக அறிஞர் ஐயா. சத்தியவேல் முருகனார் அவர்களிடம் நான் கேட்டு ஐயங்களைப் போக்கிக் கொண்டேன். சத்தியம் தொலைக்காட்சி விவாதத்திலும் புதிய தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றேன். அதேபோல், பேராசிரியர் சுப. வீரபாண்டியனும், சத்தியவேல் முருகனாரிடம் தனியே விளக்கம் கேட்டு உறுதி செய்து கொண்டு, தொலைக்காட்சி விவாதத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகத் தடை இல்லை என்று வாதிட்டார்.
அதன்பின்னர், தோழர் சுப.வீ.யைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, “இப்பொழுது வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒடுக்கப்பட்ட பிரிவினர் உள்ளிட்ட அனைத்துச் சாதியினரும் அ.இ.அ.தி.மு.க. அரசு அர்ச்சகராக அமர்த்த வேண்டும் என்று அறிக்கை விடும்படி கலைஞரைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றேன். “உறுதியாகக் கலைஞரைச் சந்தித்துச் சொல்கிறேன்” என்றார் சுப.வீ. ஆனால் கடைசிவரை அவ்வாறு ஒரு கோரிக்கையை அ.தி.மு.க. அரசிடம் கலைஞர் வைக்கவே இல்லை!
ஊடகவியலாளர்கள் 16.12.2015 அன்று கலைஞரிடம் இத்தீர்ப்பு குறித்து கேட்டபோது, “ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்” என்று சொன்னார். ஆனால், அதன்பின்னர் அப்படியொரு “ஆராய்ச்சி”யோ, “முடிவோ” எட்டப்பட்டதாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை!
ஆசிரியர் வீரமணி, இத்தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக அமர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். அதற்காகக் கூட்டங்கள் நடத்தினார்.
அன்றைய முதல்வர் செயலலிதா எப்போதும் ஆரியச் சிந்தனையை அடிமனத்தில் தேக்கியவர். எனவே அவர் 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் சட்டத்தைச் செயல்படுத்தவில்லை.
இப்போது அந்த 15.12.2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தித்தான் கம்யூனிஸ்ட் முதல் அமைச்சர் பினராயி விசயன் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 6 பேர் உட்பட பிராமணரல்லாத 36 பேரை கேரளக் கோவில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் விதித்த ஆகமப் பயிற்சி என்ற நிபந்தனை ஆகமப்படி கட்டப்பட்ட கோயில்களுக்கு மட்டும்தான் பொருந்தும். ஆகமப்படி கட்டப்படாத கோயில்களில் ஆகமப்பயிற்சி இல்லாமல் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கலாம்; அதற்கான வழிபாட்டுப் பயிற்சி இருந்தால்போதும். தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கீழ் மிக அதிகமாக ஆகமம் இல்லாத கோயில்களே இருக்கின்றன! தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள 36,000 கோயில்களில், 2,000க்கும் குறைவான கோயில்கள் மட்டுமே, ஆகம விதிகள்படி கட்டப்பட்டவை.
பிராமணர் பொல்லாப்பு வேண்டாம், பிராமணரல்லாதோரில் உள்ள மேல்சாதிக் கோட்பாட்டாளர்கள் எதிர்ப்பு வேண்டாம் – வாக்குகள் பாதிக்கப்படும் என்று கருதித்தான் கருணாநிதி 1972 தீர்ப்புப்படி ஒடுக்கப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்காமல் ஒதுங்கிக் கொண்டார்! அ.தி.மு.க. ஆட்சியில் அக்கோரிக்கையை எழுப்பாமலும் ஒதுங்கிக் கொண்டார்!
“தான் செயல்படத் தயார். ஆனால் உச்ச நீதிமன்றம் தடுத்து விட்டது” என்று பாச்சா காட்டும் உத்திதான் எதிலும் எப்போதும் கருணாநிதியின் இரட்டை அணுகுமுறை!
இதே கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் 2011இல் (05.01.2011), திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் பிரசாதம் லட்டு பிடிப்பதற்கு பார்பனர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென தனது இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்க இன்னொரு செய்தி!
இந்த வரலாற்றையெல்லாம் யார் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள் என்ற துணிச்சலில், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் சமூகநீதித் தாகத்துடன் கருணாநிதி இருந்ததாகவும், உச்ச நீதிமன்றம் தடுத்துவிட்டது போலவும் அறிக்கை விடுகிறார் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்! அத்தோடு, கேரளாவைப் பார்த்து அ.தி.மு.க. அரசு பாடம் கற்குமா என்று கேள்வியும் எழுப்புகிறார்.
அ.தி.மு.க. பாடம் கற்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதேவேளை தி.மு.க.வின் சமூகநீதிச் சாயம் கேரள நடவடிக்கையால் வெளுத்து விட்டது என்பதையும் ஸ்டாலின் உணர வேண்டும்.
தமிழர்களுக்கு முதல் முதல் கோவணம் கட்டி விட்டதே திராவிடத் தலைவர்கள்தாம் என்று மிகை வர்ணனை செய்து கொள்ளும் திராவிடவாதிகள் கேரளாவைப் பார்த்தாவது தங்கள் தம்பட்ட சத்தத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, ஆக்கவழியில் செயல்பட - சிந்திக்க வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment