விவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ? ஜூனியர் விகடன் வார ஏட்டில் - தோழர் பெ. மணியரசன் பேட்டி!
விவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ? ஜூனியர் விகடன் வார ஏட்டில் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேட்டி!
“ராஜாராஜசோழன் விழாவுக்கு விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி. நன்கொடை!” என்ற தலைப்பில், 05.11.2017 நாளிட்ட ஜூனியர் விகடன் வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் அவர்களது பேட்டி வெளியாகியுள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது :
“தமிழ்ப் பேரரசன் இராசராசன், தன் ஆட்சிக்காலத்தில் எவ்வளவோ மானியங்களையும் நிவந்தங்களையும் அள்ளிக் கொடுத்திருக்கின்றான். தன் தேசத்தின் பிரதானத் தொழிலாக வேளாண்மையை அங்கீகரித்தவன் ராஜராஜன். அதற்கு ஏற்பட்டத் தடைகளையெல்லாம் வென்று விவசாயிகளைக் காத்தவன். அதெற்கெல்லாம் தான் எழுப்பிய பெரிய கோயிலிலேயே ஆதாரங்களைப் பதிந்துவிட்டுச் சென்றிருக்கின்றான். அவனுடைய சதய விழாவைக் கொண்டாட தமிழக அரசால் நிதி ஒதுக்க முடியவில்லை என்பது மிகப்பெரும் அவமானம்!
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிலத்தடி நீரையும், விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் அழிப்பதாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் போராடி வருகிறார்கள். நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும் 1000 நாள்களைக் கடந்து போராட்டம் நடக்கிறது. போராட்டக்காரர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புகிறது ஓ.என்.ஜி.சி.
விவசாயத்தை வளர்த்தெடுத்த தஞ்சை மண்டலத்து வேந்தனுக்காக நடத்தப்பட்ட விழாவுக்கு விவசாயத்தை அழிக்கத் துடிக்கிற ஒரு நிறுவனத்திடம் கையேந்தி நன்கொடை வாங்கியது மிகப்பெரியக் கேலிக்கூத்து! பெரிய கோவிலைச் சுற்றிலும் அந்த நிறுவனத்தின் செயலை நியாயப்படுத்துவதுபோல் விளம்பரப் பதாகைகளை வைக்கவும் அனுமதித்திருக்கிறார்கள்.
“ராஜராஜனுக்குச் சதய விழா கொண்டாட எங்களிடம் நிதியில்லை.. நிதி தாருங்கள்” எனக் கேட்டிருந்தால், எங்கள் விவசாயிகள் இலட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்திருப்பார்கள். அரசு, உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அளித்த ஏழு இலட்சம் ரூபாயைத் திருப்பி அளிக்க வேண்டும். நான்கே நாள்களில் நாங்கள் விவசாயிகளிடமிருந்து அந்தத் தொகையைத் திரட்டி அரசுக்கு அளிப்போம். இதை ஏற்காதபட்சத்தில், தமிழ்நாடு அரசு மிகப்பெரும் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்!”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.
“தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க கதிராமங்கலத்தில் குழந்தைகளுடன் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களைப்போய் ஒரு எட்டுப் பார்த்துவிட்டு வர நேரமில்லை. அவர்கள் யாரை எதிர்த்துப் போராடுகிறார்களோ, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, போஸ் கொடுக்க மட்டும் உங்களுக்கு நேரமிருக்கிறதா?” என்ற கேள்வியுடன், அச்செய்திக் கட்டுரை முடிகின்றது.
நன்றி : ஜூனியர் விகடன், வெ. நீலகண்டன், 05.11.2017.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment