ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மணற்கொள்ளை அரசியலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் - ஒரு திறனாய்வு தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

மணற்கொள்ளை அரசியலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் - ஒரு திறனாய்வு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
“இன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் மணல் தோண்டும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் மணல் விற்பனைக் குழிகளைப் (Sand Quarries) புதிதாகத் திறக்கக் கூடாது”.

இது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் 29.11.2017 அன்று நீதிபதி ஆர். மகாதேவன் பிறப்பித்த ஆணை !

இராமையா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் எதிர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 15 இந்திய – தமிழ்நாட்டு அதிகாரிகள் என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பில், மேற்படி ஆணையைப் பிறப்பித்தார் நீதிபதி. இராமையா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எம்.ஆர்.எம். இராமையா.
இவர் மலேசியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் டன் ஆற்று மணல் வாங்கினார். முறைப்படி இந்திய அரசின் இறக்குமதி அனுமதி, கப்பலில் கொண்டு வர அனுமதி அனைத்தும் பெற்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு முதல் தவணையாக 55,443.84 டன் மணல் கொண்டு வந்தார். இந்திய அரசின் சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) 38,39,347 ரூபாய் கட்டினார்.

இந்த மணலை தூத்துக்குடி துறைமுகக் கிடங்கில் தற்காலிகமாக வைத்திருப்பதற்கு ஒரு நாளைக்கு இரண்டு இலட்ச ரூபாய் துறைமுக வாடகையும் கட்டி வந்தார்.
மணல் ஏற்றி வந்த சரக்குந்துகள் தடுக்கப்பட்டன
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் கட்டுமானப் பணிக்காக விற்ற இம்மணலில் ஒரு பகுதியை ஆறு சரக்குந்துகளில் ஏற்றிச் சென்றார்கள். வழியில் ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர், தமிழ்நாடு அரசின் உரிமம் மற்றும் போக்குவரத்து அனுமதி (Transport Permit) இல்லாமல் மணல் கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது என்று அந்த 6 சரக்குந்துகளையும் தடுத்தார். மாவட்ட ஆட்சியர் ஆணையின்பேரில் அந்த சரக்குந்துகளைக் கைப்பற்றிக் கொண்டார்.

இந்திய அரசிடம் உரிமம் பெற்று சுங்கவரி உட்பட எல்லா வரிகளும் கட்டி முறைப்படி கொண்டு வந்த தனது மணலை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் எனப் பலரைச் சந்தித்து இராமையா மன்றாடினார். “அனுமதிக்க முடியாது” என்று அதிகாரச் சவடாலுடன் அறிவித்தார்கள் ஆட்சியாளர்கள். தூத்துக்குடி துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு இரண்டு இலட்ச ரூபாய் கட்டினார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
வேறு வழியில்லாத நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மணல் விற்பனைக்கு அனுமதி ஆணை கோரி ரிட்மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கில் 29.11.2017 அன்று நீதிபதி ஆர். மகாதேவன் தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த மணலை தமிழ்நாட்டில் விற்கும் உரிமை தொடர்பானது. இன்னொன்று தமிழ்நாட்டில் மணல் தோண்டும் குழிகளை (Sand Quarries) இனியும் அனுமதிப்பதா அனுமதிக்கக் கூடாதா என்பது பற்றியது.

தமிழ்நாடு சட்டங்கள்

மலேசியாவிலிருந்து முறைப்படி இந்திய அரசின் இறக்குமதி அனுமதி பெற்று, சுங்க வரி கட்டி, சரக்கு சேவை வரி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் செலுத்தி, இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை உடனடியாகத் தமிழ்நாட்டிலோ அல்லது வெளி மாநிலங்களிலோ விற்க அனுமதிக்க வேண்டும்.

மணல் தோண்டுவது, அதை வெளியே கொண்டு போய் விற்பது தொடர்பான தமிழ்நாட்டுச் சட்டங்கள் 1. தமிழ்நாடு சிறு கனிம பயன்பாட்டு விதிகள் – 1959 (Tamilnadu Minor Mineral Concession Rules - 1959), இதில் பின்னர் இணைக்கப்பட்ட விளக்கம் 38 – C.

மற்றொன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்சசி மற்றும் ஒழுங்கமைப்பு) சட்டம் – 1957 (Mines and Minerals (Devlopment and Regulation) Act – 1957).

மூன்றாவது சட்டம், தமிழ்நாடு சட்ட விரோதமாகக் கனிமம் தோண்டுதல், எடுத்துச் செல்லுதல், இருப்பு வைத்தல் மற்றும் விற்பனையாளர்கள் தடை விதிகள் – 2011 (Tamilnadu Prevention of Illegal Mining Transportation and Storage of Mineral and Mineral Dealers Rules - 2011).

இந்த மூன்று சட்டங்களும் விதிகளும் தமிழ்நாட்டிற்குள் தோண்டும் மணல் தொடர்பானவையே தவிர, வெளி நாட்டிலிருந்து நடுவண் அரசின் சட்ட விதிகள்படி இறக்குமதி செய்த மணலுக்குப் பொருந்தாது என்று தீர்ப்பெழுதினார் நீதிபதி மகாதேவன். எனவே தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி மணலை வெளியே கொண்டு சென்று விற்பதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று அத்தீர்ப்பில் ஆணை இட்டார்.
வரவேற்கத்தக்க தீர்ப்பு
இது வரவேற்கத்தக்க சரியான தீர்ப்பு. வெளி நாட்டிலிருந்து இந்திய அரசின் முறையான அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழ்நாட்டு அதிகாரிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் ஏன் தடுத்தார்கள்? அம்மணல் விற்றதால் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு? ஒரே ஒரு பாதிப்புதான், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தமிழ்நாட்டு மணல் விற்பனையில் 24 மணி நேரமும் நடத்தும் கையூட்டு வசூலில் பாதிப்பு ஏற்படும்! ஏனெனில் அந்த மணற்கொள்ளைக் கையூட்டு தி.மு.க. ஆட்சியிலும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் முறைப்படுத்தப்பட்ட வரிவசூல் போன்றது!

அதிலும் முதலமைச்சராக இருந்தபோது செயலலிதா, நூறு ரூபாய்க்கு இவ்வளவு விகிதம் கையூட்டுத் தர வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறை உருவாக்கினார். அதன் பெயர் விழுக்காட்டு வெட்டுத் தொகை வசூல் (Percentage Cutting).

வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய அனுமதித்துவிட்டால், அதற்கான கையூட்டு நடுவண் அதிகாரிகளுக்கும் – ஆட்சியாளர்களுக்கும்தான் போய்ச் சேரும். தமிழ்நாடு அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இப்போது தமிழ்நாட்டு மணற்கொள்ளையில் கிடைக்கும் மலையளவுக் கையூட்டு கிடைக்காது.

“தமிழ்நாட்டிற்குள் நாங்கள் விற்கவில்லை; கேரளாவில் விற்றுக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வழியாக மணலை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதியுங்கள்” என்று கடைசியாகக் கெஞ்சியது இராமையா என்டர்பிரைசஸ்! அதற்கும் மறுப்புத் தெரிவித்தது தமிழ்நாடு அரசு! அதுவும் எந்த நேரத்தில் இந்த மறுப்பு?
மணல் தட்டுப்பாட்டுக் காலத்தில்
எழுதப்பட்ட எல்லா சட்ட விதிகளையும் மீறி இரவு பகலாகத் தமிழ்நாட்டு ஆற்று மணலைக் கொள்ளையடித்து அடுத்த மாநிலங்களிலும் அடுத்த நாடுகளிலும் விற்றுச் சூறையாடிய ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் தமிழ்நாட்டு ஆறுகள் மலட்டுப் பெருங்குழிகளாக மாற்றப்பட்டன. இந்த ஆற்றுப் படுகொலையைச் சகியாது இயற்கை ஆர்வலர்களும் தலைவர்களும் மக்களை இணைத்து மணற்கொள்ளைத் தடுப்புப் போராட்டங்கள் நடத்தி வரும் காலத்தில்! அவர்கள் நீதிமன்றங்களை அணுகி தமிழ்நாடு அரசு மணல் தோண்டுவதற்கு எதிராகத் தடையாணைகள் பெறப்பட்டுள்ள காலத்தில்!

இந்தத் தடை ஆணைகளால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, கட்டுமானப் பணிகள், மனைகள் விற்பனை அனைத்தும் நிலைகுலைந்து நின்ற கட்டத்தில், இலட்சோப இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்த நிலையில், முறைப்படி வாங்கப்பட்ட வெளிநாட்டு மணலைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அனுமதிக்காமல் தடுத்ததன் நோக்கம் என்ன? காவிரி போல் அல்லாமல் கங்கைபோல் வற்றாமல் வந்த வசூல் வெள்ளம் வடிந்துவிடும் என்பதால்தான் வெளிநாட்டு இறக்குமதி மணலைத் தடுத்தார்கள்!

அரசுடைமை முகமூடிக்குள் ஆட்சியாளர் கொள்ளை

மணல் தோண்டுவதும் விற்பதும் அரசுடைமை ஆக்கப்பட்டதாக 2003-இல் சட்டமியற்றினார் அன்றைய முதல்வர் செயலலிதா! எப்படிப்பட்ட முற்போக்கு நடவடிக்கை – எப்படிப்பட்ட நிகரமை (சோசலிச) நடவடிக்கை என்று பலர் பாராட்டினார்கள். அரசுடைமை ஆக்கப்பட்ட மணல் வணிகத்தில் மணல் விற்பனை விலை – கற்பனைக்கெட்டாத அளவில் வீங்கியது எப்படி?

ஆற்றில் மணல் தோண்டுமிடத்தில் அரசு விற்பனை விலை 1 யூனிட் 525 ரூபாய். இதில் மணல் விலை ரூ. 400; பொக்லைன் வாடகை ரூ. 105; விற்பனை வரி ரூ. 20.00. சாதாரணமாக ஒரு சரக்குந்தில் 3 யூனிட் ஏற்றுவார்கள். இந்த 3 யூனிட் விலை ரூ. 1,575.00. மூன்று யூனிட் மணல் சரக்குந்தில் ஒரு லோடு என்கிறார்கள். இந்த ஒரு லோடு மணல் இடைத்தரகர்களால் ரூ. 1,575க்கு வாங்கப்பட்டு, சென்னை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதைவிட அதிகத் தொகைக்குக் கேரளத்திற்கும், கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டு மணல் போகிறது. அம்மாநிலங்களில் காவிரி மணல், தாமிரபரணி மணல், பாலாற்று மணல் என்று தனித்தனியே குவித்து வைத்து, விலை வேறுபாட்டுடன் விற்கிறார்கள். இதெல்லாம் அரசுடைமையாக்கப்பட்ட மணல் விற்பனையில் இடம் பெற்றதெப்படி? இதெல்லாம்தான் திராவிட அரசியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகள்! அ.தி.மு.க., தி.மு.க. கழகங்களின் அரிய வகை சமூக நீதிகள்! இந்திரன் மாறினாலும், இந்திராணி மாறுவதில்லை என்று சொல்வது போல் இவ்விரு கழகங்களின் ஆட்சி மாறினாலும் மணற் கொள்ளையர்கள் மட்டும் மாற மாட்டார்கள்.

இவர்கள் ஆட்சியில், இலஞ்சம் வாங்குவதில், வேண்டியவர் வேண்டாதவர் என்ற நபர் வேறுபாடு இல்லை. ஒரே சமச்சீரான “சமூகநீதி”யைத் திராவிடக் கட்சிகள் மணல் வசூலில் கடைபிடிக்கின்றன.

மது விற்பனையை அரசுடைமை ஆக்கினார் செயலலிதா. ஆனால் அரசு மது வாங்கும் தனியாரின் மது ஆலைகள் மட்டும் நிரந்தரமானவை. அவை பெரும்பாலும் அ.இ.அ.தி.மு.க.வினரின் மற்றும் தி.மு.க.வினரின் மது ஆலைகள்! ஆட்சி மாறினாலும் அவை விற்பனையை இழப்பதில்லை. ஏனெனில், அவை கட்ட வேண்டியதை நிரந்தரமாகக் கட்டி பெற வேண்டிய விற்பனை உரிமத்தை நிரந்தரப்படுத்திக் கொண்டன. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்! எதிர்க்கட்சிக்காரன் கொடுக்கும் இலஞ்சமும் இனிக்கும்! மதுக்கடைகளில் மாமிசம் விற்பவர்களும் நிரந்தரமானவர்கள். அவர்களும் ஆட்சி வேறுபாடின்றிக் கட்ட வேண்டியதைக் கட்டும் கடமை தவறாத கண்ணியவான்கள்!
மணற்கொள்ளையர் உருவானதெப்படி?

அரசுடைமையாக்கப்பட்ட மணல் வணிகத்தில் தனியார் புகுந்து மணற்கொள்ளையர்களாக உருவானதெப்படி?

ஆற்றுக்குள் மணல் எடுப்பதும் அந்த இடத்தில் விற்பதும் அரசின் பொறுப்பு! அந்த மணலை ஆற்றுக்குள் வாங்கிக் கரைக்குக் கொண்டு வந்து பத்து ஏக்கர் நிலப்பரப்பில் குவித்து, இருப்பு வைத்து, விற்கும் முகவர்கள் ஆட்சியாளர்களால் அமர்த்தப்பட்டு உரிமம் பெறுகிறார்கள். இவர்கள் அரசு விற்கும் விலையுடன் ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, சரக்குந்து வாடகை ஆகியவற்றுடன் சிறிது இலாபம் வைத்து யாருக்கு வேண்டுமானாலும் மணலை விற்றுக் கொள்ளலாம். இவர்கள் விலை நிர்ணயம் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் நடைமுறையில் இல்லை. ஏன்? இவர்கள்தாம் வற்றாத கங்கை வெள்ளம்போல் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருபத்து நான்கு மணி நேரமும் விழுக்காட்டு வெட்டுத் தொகை என்ற இலஞ்சத் தொகை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்!

தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய கழகங்களின் இரத்த ஓட்டமே மணல் வசூல், மது வசூல் போன்ற விழுக்காட்டு வெட்டுத்தொகைகள்தான்!

இந்த இடைத்தரகர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விலையை ஏற்றி விற்றுக் கொள்ளலாம்; அதுமட்டுமா, எவ்வளவு வேண்டுமானாலும் ஆற்று மணலைச் சூறையாடி, ஆறுகளைப் பாதாளப் படுகுழிகளாக சீரழித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ஆட்சியாளர்களின் அரவணைப்பு உண்டு!

தமிழ்நாடு அரசு வெளி மப்புக்குப் போட்ட மணல் அள்ளும் வழிமுறைகளை – மணல் விற்பனை விதிமுறைகளைத் தூக்கி மணல் தோண்டிய குழிகளுக்குள் போட்டார்கள் இந்தக் கொள்ளையர்கள்.

அரசு விதியின்படி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும்தான் ஆற்றில் மணல் தோண்ட வேண்டும். இவர்களோ இருபத்து நாலுமணி நேரமும் இரவு பகலாகத் தோண்டினார்கள். வாரம் ஒருநாள் விடுமுறைவிட வேண்டும். ஏழுநாட்களும் தோண்டினார்கள். யார் மேற்பார்வையில் தோண்டினார்கள்? அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில்!

ஒரு நேரத்தில் ஒரு பொக்லைன்தான் தோண்ட வேண்டும். அதை ஏற்றிச் செல்ல மூன்று சரக்குந்துகள் மட்டும்தான் அங்கு ஒரு நேரத்தில் நிற்க வேண்டும். பல பொக்லைன்கள் தோண்டின; பல கிலோ மீட்டர் நீளத்திற்கு சரக்குந்துகள் வரிசை கட்டி ஒரே நேரத்தில் பணியில் இருந்தன.

கரையிலிருந்து எவ்வளவு தொலைவு தள்ளித்தோண்ட வேண்டும் என்று விதி இருக்கிறது. பாலத்திலிருந்து 500 மீட்டர் தள்ளித் தோண்ட வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் மணற்கொள்ளையர்கள் கடைபிடிப்தில்லை.

அறுநூறு மீட்டர் நீளம், 400 மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் என்ற அளவில் மட்டும்தான் ஒரு மணற்குழி இருக்க வேண்டும். அதற்குள் மட்டும்தான் மணல் தோண்டி அள்ள வேண்டும் என்று வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியெல்லாம் ஏட்டில் மட்டும்தான்! நோட்டுகள் மூட்டை மூட்டையாக ஆட்சியாளர்களுக்குப் போகும்போது இந்த ஏட்டுச் சுரைக்காய் விதிகளைக் கடைபிடிக்கத் திராவிட அரசியல்வாதிகள் ஏமாளிகளா என்ன?
மணற்கொள்ளை செய்த கொலைகள்
வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து விவரம் தெரியாமல் நேர்மை பேசி – இந்த விதிமீறல்களைத் தடுத்த அப்பாவிக் கீழ்நிலை அதிகாரிகள் பலர் மணற் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு மணற் கொள்ளையர்களால், கொல்லப்பட்ட காவல்துறையினர் – வருவாய்த்துறையினர் – சமூக அக்கறையாளர்கள் எத்தனைபேர்! மணற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மற்றும் சமூக அக்கறையாளர்கள் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் இருக்கும் என்கிறார் தமிழ் இந்து கட்டுரையாளர் கே.கே. மகேஷ் (01.12.2017).

செங்கல்பட்டு தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார் ஆறுமுகம், செங்கல்பட்டு உள்ளாவூர் கிராம நிர்வாக அதிகாரி மணி, அரக்கோணம் தலைமைக் காவலர் கனகராசு, திசையன்விளை சதீஷ், திருவைகுண்டம் தேவசகாயம், வீரவநல்லூர் சுடலைமுத்து, பெரியபாளையம் தலைமைக் காவலர் அண்ணாமலை, புதுக்கோட்டை ஆவூர் கார்த்திக், ராஜேஷ் இன்னும் இன்னும் இங்கு பெயர் குறிப்பிடாத எத்தனை போராளிகள் மணற்கொள்ளை அரம்பர்களால் (ரவுடிகளால்) கொல்லப்பட்டார்கள்! அவர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்!

மணற்கொள்ளைத் தடுப்பில் பலதடவை தாக்கப்பட்டார் தோழர் முகிலன். அவருடன் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தில் செயல்படும் பெரியவர்களும், பல தாக்குதல்களை எதிர் கொண்டார்கள். தொண்ணூறு அகவைக் கடந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வணக்கத்திற்குரிய நல்லகண்ணு அவர்கள் எவ்வளவு ஆபத்துகளுக்கு இடையே மணற்கொள்ளை தடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மணற்கொள்ளை அரம்பர்கள் மனித நேயர்களைக் கொலை செய்தபோதெல்லாம் தி.மு.க. ஆட்சியாளர்களோ, அ.தி.மு.க. ஆட்சியாளர்களோ அலட்டிக் கொள்ளவே இல்லை! அவர்கள் ஏற்கெனவே தங்கள் மனச்சான்றைக் கொன்றவர்கள்தானே!

கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற தி.மு.க. ஆட்சியும், அ.தி.மு.க. ஆட்சியும் உரியவாறு அக்கறை காட்டவில்லை. அரசியல் அழுத்தம் தரவில்லை என்று அவர்களின் உள்குத்து வேலை புரியாமல் வெள்ளந்தியாகப் பலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் வந்தால் மணற்கொள்ளை தடைபடும், மணற்கொள்ளை தடைபட்டால் வசூல் வரத்து பாதிக்கும் என்ற “விவரம்” தி.மு.க., அ.தி.மு.க. அரசியல்வாதிகளுக்குத் தெரியும்.

அறச்சீற்றத்தில் அதிரடித் தீர்ப்பு

மணற்கொள்ளை ஊழல் ஒருபக்கம் – மறுபக்கம் சுற்றுச்சூழல் அழிப்பு! அருங்கோடையிலும் அடிமணலில் நீரைச் சேமித்து வைத்திருக்கும் அன்னை ஆற்றுமணல். அந்த அன்னையின் பால் சுரக்கும் மார்பை அறுக்கிறார்கள் பாவிகள்! இதனால் ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது. நிலத்தின் வெப்பம் அதிகரித்துவிட்டது.

இவை அனைத்தும் ஏற்படுத்திய மனக்காயத்தால் சினந்து சீறினார் நீதிபதி மகாதேவன். தீர்ப்புரைக்கான முன்னுரையாக அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மனித குலத்திற்கு விடுத்த எச்சரிக்கையைப் பொன் மொழிபோல் குறிப்பிடுகிறார் நீதிபதி.

“நிலம் – என்ற இந்தக் கோள், இன்னும் அறுநூறு ஆண்டுகளுக்குள் நெருப்புப் பந்துபோல் மாறிவிடும்” என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். இதற்குக் காரணம் இயற்கை வளங்களைத் தங்கு தடையின்றி சூறையாடுவதுதான்!

அடுத்தடுத்த பகுதிகளில் அதிகாரிகளின் துணையோடுதான் மணற்கொள்ளை அரங்கேறுகிறது என்கிறார் நீதிபதி. முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை வெளிப்படையாக அவர் கூறாவிட்டாலும், அவர் சுட்டிக் காட்டும் அதிகாரிகள் பட்டியலுக்குள் அமைச்சர் பெருமக்களும் அடங்குவார்கள்.
தீர்வில் – ஒரு திறனாய்வு
“41. விரிந்து பரந்த பயன்கள், தமிழ்நாட்டு மக்கள், சுற்றுச்சூழல் – ஆற்றுப்படுகைகள் – ஆற்று நீர்க் கட்டமைப்புகள், பல்லாயிரக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரமாய் உள்ள நிலங்கள் ஆகிய அனைத்தின் நலன்களை முன்வைத்தும், இந்த நீதிமன்றம் எதிர் மனுதாரர்களுக்குப் பின்வரும் ஆணைகள் இடுகிறது.

அ. மாநில அரசு இன்றிலிருந்து, ஆறு மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் மணல் தோண்டும் நடவடிக்கைகள் (Sand Mining and Quarrying Activities) அனைத்தையும் நிறுத்திவிட வேண்டும். புதிய மணல் குழிகள் எதையும் தோண்டக் கூடாது.

இ. இறக்குமதி செய்யப்பட்ட மணல் அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கும் விற்பதற்கும் இறக்குமதியாளர்களுக்குரிய அனுமதி வழங்க வேண்டும்.

ஈ. எந்தெந்த நாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய வாய்ப்புண்டு எனக் கண்டறிந்து மாநில அரசு, அதற்குரிய வேலைகளைச் செய்ய வேண்டும். விவரமறிந்து அந்தப் பட்டியலை வெளியிட வேண்டும்.

2. மாநில அரசே தனது வாரியத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்து விற்கலாம்.

பிரிவு ஏ -இல், மணற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

சட்ட விரோதமாக மணல் தோண்டி எடுத்தோர் குவித்துப் பதுக்கி வைத்திருப்போர் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் ஊர்திகளை நிரந்தரமாகப் பறிமுதல் செய்ய வேண்டும்.
ஐ. மணற்கொள்ளையர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளை உரியவாறு அறிந்து – அந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்”.
திறனாய்வு
நமது திறனாய்வு இங்குதான் தொடங்குகிறது.

1. தமிழ்நாட்டுச் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க தமிழ்நாட்டில் மணல் எடுப்பதைத் தடை செய்துவிட்டு, வெளி நாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆர். மகாதேவன் கூறுகிறார். வெளிநாட்டுச் சுற்றுச்சூழல் கெடலாமா?

அறுநூறு ஆண்டுகளுக்குள் நிலம் – என்ற இந்தக் கோள் முழுவதுமாக நெருப்புப் பந்தாக மாறாமல் இருக்க வேண்டுமாயின், அனைத்து நாடுகளின் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம்.

எனவே வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும் என்று தீர்ப்புரையில் கூறியிருப்பது சரியன்று!

2. தமிழ்நாடு, தனது கட்டுமானப் பணிகளுக்கான மணலுக்கு முழுக்க முழுக்க வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதும் சரியன்று.

தமது தீர்ப்புரையில் நீதிபதி மகாதேவன் அவர்கள் புறநானூற்றுப் பாடல், திருக்குறள் பாக்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ளார். அவர் காட்டியுள்ள குறள்களில் ஒன்று.

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு

வெளிநாடுகளை நாடிச் செல்லாமல், தன் நாட்டிற்குள்ளேயே வளங்கள் நிறைந்திருத்தல் நாட்டிற்கு அழகு என்றார் திருவள்ளுவப் பேராசான். எல்லாப் பொருளுக்கும் இக்குறளைப் பொருத்திவிட முடியாது. கட்டுமானப் பொருட்களுக்குத் தமிழ்நாடு வெளிநாடுகளை நம்பி இருத்தலாகாது.

மணற்கொள்ளையைத் தடுத்திட மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் (M Sand) உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.

பாறைகளை உடைத்துதான் செயற்கை மணல் உற்பத்தி செய்கிறார்கள். காலப்போக்கில் மலைகளை உடைத்து செயற்கை மணல் உற்பத்தி செய்வது பெருமளவில் தொடங்கிவிடும். மணல் கொள்ளையர்கள் மலை விழுங்கிகளாக மறுபிறப்பு எடுப்பார்கள். இதிலும், ஒருபக்கம் ஊழல்; மறுபக்கம் சுற்றுச்சூழல் அழிப்பு!
என்னதான் செய்ய வேண்டும்?
1. மேற்கத்திய பாணிக் கட்டுமானங்களைக் குறைக்க வேண்டும். மரபுவழிப்பட்ட கட்டுமான முறைகளையும் கையாள வேண்டும். மரங்கள், களிமண், சுண்ணாம்பு போன்றவற்றைக் கொண்டு சிறிய நடுத்தரக் கட்டடங்களாக அமைக்க வேண்டும். மரங்களைப் பயன்படுத்தும்போது, கூடுதலாக மரங்களை வளர்க்கவும் வேண்டும்.

ஓரளவு செயற்கை மணலையும் பயன்படுத்தலாம்.

வல்லுநர்களைக் கொண்டு இன்னும் என்னெ்னன மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டுமானங்களை எழுப்பலாம் என்று ஆராய வேண்டும்.

2. (அ). மக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நெரிசலாகக் குவிவதைத் தவிர்க்க வேண்டும்; தடுக்க வேண்டும்.

(ஆ). பெருந்தொழில் உற்பத்தி முறையைக் (Mass Production) கைவிட்டு, மண்டல வாரியான தேவைகளுக்கு அங்கங்கே சிறிய, நடுத்தர உற்பத்தி முறை கொண்டு வர வேண்டும். ஒரு சில நகரங்களில் உற்பத்திக் குவியல் கூடாது.

(இ). உலகம் முழுவதற்கும், இந்தியா முழுவதற்கும் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் தொழிற்கூடங்கள் - பெரும் பெரும் கட்டுமானங்கள் சென்னையைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. அவை பெருமளவில் இயற்கை வளங்களை அழித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கொண்டுள்ளன. அவ்வாறான பெருந்தொழில் நிறுவனங்களைப் புதிதாக அனுமதிக்கக் கூடாது.

ஏற்கெனவே இருக்கும் பெருந்தொழில் நிறுவனங்களை சிறிது சிறிதாக வெளியேற்றிவிட வேண்டும். அங்கு வேலை செய்யும் தமிழ்நாட்டுத் தொழிலாளிகளுக்கு உரியவாறு மாற்று வேலை வழங்க வேண்டும்.

3. இயற்கை வளங்களைப் பாதுகாக்க, சூழல் மாசுபடாமல் காக்க, முதல் தேவை தமிழ்நாட்டு அரசியல் மாசுகள் நீக்கம், இதெல்லாம் முடியாதென்றால் அதெல்லாம் முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிந்திக்கும் துணிச்சலும் ஊழல் பெருச்சாளிகளை அருவருக்கும் தன்மானமும் வேண்டும்.
அதிகாரம் உண்மையாக மக்கள் மயப்பட வேண்டும். ஒரே மையத்தில் அதிகாரக் குவியல் கூடாது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் விதிகள் திருத்தப்பட்டு, அதிகாரம் உள்ளவை ஆக்கப்பட வேண்டும். இதுபற்றி வேறொரு வாய்ப்பில் விரிவாகப் பேசலாம்.

4. ஆறுமாதங்களுக்குள் தமிழ்நாட்டில் முற்றிலுமாக ஆற்று மணல் பயன்பாட்டைத் தடுத்துவிட்டால், தமிழ்நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும். கட்டுமானப் பணிகளில் உள்ள இலட்சோபலட்ச மக்கள் வேலையின்றித் தவிப்பர். இப்போதே அந்த நிலை உருவாகியுள்ளது.

எனவே, ஆற்று மணல் தோண்டும் குழிகளின் எண்ணிக்கையை மிகவும் குறைத்து, அவற்றை இயக்கிடவும், கண்காணிக்கவும் அந்தந்த வட்டாரத்தில் மக்கள் குழுக்கள் உண்டாக்க வேண்டும்.

மணலை விலைக்கு வாங்கிக் கரையில் கொண்டு வந்து குவித்து விற்கும் இடைத்தரகர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

ஞாயவிலைக் கடைகளை அரசு நடத்தவது போல் – மணற்குழிகளை அரசு நடத்த வேண்டும். அளவோடு மணலை விற்க வேண்டும்.

போகப்போக ஆற்றுமணல் பயன்பாட்டை மேலும் குறைத்து சூழலைக் கெடுக்காத மாற்றுக் கட்டுமானங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆற்று மணல் அள்ள நீதிமன்ற தடை விவாதத்தில் தோழர் பெ.  மணியரசன்
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9841949462, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.