ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

போராடும் மக்களை மதித்து தமிழ்நாடு அரசு பேருந்து கட்டண உயர்வை பெருமளவு குறைக்க வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

போராடும் மக்களை மதித்து தமிழ்நாடு அரசு பேருந்து கட்டண உயர்வை பெருமளவு குறைக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
பேருந்துக் கட்டணங்களைத் தமிழ்நாடு அரசு, தாறுமாறாக உயர்த்தியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பொது மக்களும் தன்னெழுச்சியாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
ஏற்கெனவே, வழக்கமாக அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் பேருந்துகளைக்கூட விரைவு வண்டி, இடைநில்லா பேருந்து, வரம்புக்குட்பட்ட நிறுத்தப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து என பல பெயர்கள் மாற்றி வெளிப்படையாக அறிவிக்காத கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியே வருகிறது.
 
வேறு மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லக் கூடியதாக, அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற போதிலும், படிகள் உடைந்த பேருந்து, சிறிய மழைக்கும் ஒழுகும் பேருந்து, பழுதாகி அங்கங்கே நிற்கும் பேருந்து, ஓட்டை வழியாகக் குழந்தையே விழும் அளவிற்கான பேருந்து போன்றவற்றை கண்ணை மூடிக் கொண்டு, அரசுப் பேருந்தாகத்தான் இருக்கும் என சொல்லிவிட முடியும்! அந்தளவிற்கு படுமோசமான நிர்வாகச் சீரழிவில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில், 19.01.2018 அன்று தமிழ்நாடு அரசு அனைத்துப் பேருந்துகளின் கட்டணங்களையும் சராசரியாக 66 விழுக்காடு வரை உயர்த்தி, அன்று நள்ளிரவு முதலே உடனடியாக செயலுக்கு வரும் என்று அறிவித்ததை அறிந்த மக்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். குறிப்பாக, மாணவர்கள், அன்றாட ஊதியக்காரர்கள், குறு வணிகர்கள் போன்றவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற மாநகரங்களில் எளிய மக்கள், தங்கள் செலவில் 58 விழுக்காடு வரை போக்குவரத்திற்கு செலவு செய்வதாக அரசின் புள்ளி விளக்கங்களே கூறுகின்றன.
 
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தொடர் இழப்பில் இயங்குவதால் ஏழாண்டு கழித்து இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஞாயம் பேசுகிறார். மேலே சுட்டிக்காட்டியவாறு, அறிவிக்கப்படாத கட்டண உயர்வுக்கு மேலாக இக்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழாண்டாக கட்டணமே உயர்த்தப்படவில்லை என முதலமைச்சர் கூறுவது முழு உண்மையல்ல!
 
தொழிற்சங்கங்களும், பல்வேறு தரப்பு வல்லுநர்களும் போக்குவரத்துக் கழக இழப்பை சரி செய்வதற்கான வழிகளை பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அவற்றில் எதையும் கருதிப் பார்க்காமல், மக்கள் மீது கட்டண உயர்வை சுமத்துவது மட்டுமே ஒரே வழி என அரசு கூறுவது ஏற்பதற்கில்லை!
 
உண்மையில், போக்குவரத்துக் கழகங்களை இழப்பிலிருந்து பாதுகாப்பதைவிட தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்காக, இந்த தாறுமாறான உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என ஐயப்பட அடிப்படை உண்டு! இதற்காக முதலமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட ஆட்சியாளர்களுக்கு, பல கோடி கையூட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கசிந்து வரும் செய்திகளை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
 
ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி அரசியல் புள்ளிகளின் குடும்பத்தினர் பல பேருந்து நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை! இந்நிலையில், தனியாருக்காகவும் இந்த பேருந்துக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என ஐயப்படுவதில் தவறில்லை!
 
பேருந்துகள் கட்டுவது, வெளியிலிருந்து வாங்குவது, உதிரி உறுப்புகள் கொள்முதல் உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் கொடிகட்டிப் பறப்பது போக்குவரத்துக் கழகங்களில் எல்லோரும் அறிய பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான். இன்னொருபக்கம், கடுமையான டீசல் விலை உயர்வு!
 
2014 திசம்பரில், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105 டாலர் இருந்தது. (ஒரு பேரல் என்பது 159 லிட்டரைக் குறிக்கும்). அதாவது 6,615 ரூபாய்! அப்போது ஒரு லிட்டர் டீசல் விலை 53 ரூபாய் 78 காசுகள். அதன்பிறகு, கடந்த நான்காண்டுகளாக உலகச்சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2018 சனவரியில், இந்த விலை 61 டாலர்! அதாவது 159 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூபாய் 3,876.58. தூய்மைப்படுத்திய பிறகு ஒரு லிட்டர் டீசலின் அடிப்படை விலை 35.05 ரூபாய். ஆனால், இப்போது ஒரு லிட்டர் டீசல் விலை 67 ரூபாய்!
 
கச்சா எண்ணெய் விலை மிகப்பெரும் அளவுக்குக் குறைந்த பிறகும், டீசல் விலை ஏறிக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசு மற்றும் மாநில அரசு விதிக்கும் வரிகள்தான்! 2014இல் இந்திய அரசின் டீசல் வரி ரூபாய் 3.46 ஆக இருந்தது. இப்போது, அது ரூபாய் 15.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது விதிக்கும் டீசல் மீதான வரி லிட்டருக்கு 8 ரூபாய் 76 காசுகள்.
 
இவ்வாறு வரி வழியில் ஏறத்தாழ 50 விழுக்காடு விலை உயர்வு நேர்கிறது! தனியார் மற்றும் அரசு எண்ணெய் நிறுவனங்களின் இலாபமாக ஏறத்தாழ 40 விழுக்காடு செல்கிறது. வணிகர்கள் ஈவுத் தொகை உள்ளிட்ட பிற வகையில் 10 விழுக்காடு செல்கிறது. ஆக, கச்சா எண்ணெயிலிருந்து தூய்மைப்படுத்தி கிடைக்கும் ஒரு லிட்டர் டீசலின் விலை 35 ரூபாய் 5 காசாக இருப்பது, இவ்வாறு 67 ரூபாயாக மாறுகிறது.
 
இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தங்களது வரி விகிதத்தை உயர்த்தாமல் இருந்தாலே, உலகச்சந்தையில் விலை குறைவு நுகர்வோருக்கு கிடைக்க வாய்ப்புண்டு! போக்குவரத்துக் கழகங்களுக்கு மிகப்பெரும் அளவுக்கு செலவு குறையும்.
 
இந்திய அரசின் இசைவோடு தனியார் நிறுவனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கும் சுங்கக் கட்டணம், காலவரையற்ற பெருங்கொள்ளையாக இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்களுக்கு, சுங்கக்கட்டணங்களின் வழியாக ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.
 
கழகங்களின் எண்ணிக்கை தேவையற்ற வகையில் அதிகமாக இருப்பது மிகப்பெரும் அளவுக்கு அதிகாரிகள் பட்டாளத்தை உருவாக்குகிறது. இது, பெரும் தொகையை விழுங்குகிறது. இதுதவிர, ஆளுங்கட்சி மற்றும் “செல்லப்பிள்ளை” சங்கப் பொறுப்பாளர்கள் என்ற வகையில் ஒவ்வொரு பணிமனையிலும் பல தொழிலாளிகள் கோயில் காளை போல், சுற்றித் திரிந்து வேலை செய்யாமல் சம்பளம் பெறுகிறார்கள். அவ்வப்போது, கருங்காலி வேலைக்கு பயன்படும் நிரந்தரப் படையாக இவர்கள் இருக்கிறார்கள்.
 
உதிரி உறுப்புகள் உள்ளிட்டு அனைத்துக் கொள்முதலிலும் தாறுமாறான கையூட்டுகள் நடைபெறுகின்றன.
 
இவையெல்லாம் சேர்ந்துதான், போக்குவரத்துக் கழகங்களுக்கு தொடர் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக எட்டாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டிய பேருந்துகள், ஓட்டை உடைசலாக மாறிய பின்னும் 16 ஆண்டுகள் வரை ஓட்டப்படுகின்றன. இது பயணிகளுக்கு பெரும் இடையூறுகளையும், விபத்துகளையும் ஏற்படுத்துகின்றது.
 
டீசல் மீதான இந்திய – தமிழக அரசுகளின் வரிக் குறைப்பு, சுங்கச்சாவடிக் கட்டணங்களிலிருந்து விதிவிலக்கு, அதிகாரிகள் எண்ணிக்கையைக் குறைத்து பராமரிப்புத் தொழிலாளர்களை போதுமான அளவுக்கு நியமித்தல், ஊழல் தவிர்ப்பு ஆகியவற்றை மேற்கொண்டால், மிகக் குறைந்த கட்டண உயர்வை மூன்றாண்டுக்கு ஒருமுறை அறிவித்தாலே, போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க முடியும்!
 
எந்தக் காலத்திலும் கட்டண உயர்வே இருக்கக் கூடாது என்பது நமது வாதமல்ல! மக்கள் தாங்கக் கூடிய, ஞாயமான கட்டண உயர்வை அறிவித்தே போக்குவரத்துக் கழகங்களை இலாபமாக இயக்க முடியும் என்பதே நமது கருத்து!
 
எனவே, மேற்கண்ட சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கட்டண உயர்வை பெருமளவுக் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.