ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்!

பறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்!


காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாட்டு உரிமையைப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடெங்கும் தமிழர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சை

தஞ்சையில் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11.30 மணியளவில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சிமியோன் சேவியர்ராஜ், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான தோழர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.


தருமபுரி

தருமபுரி இந்திய அரசுத் தொலைப்பேசித் தொடர்பகம் முன்பு, நண்பகல் 12.30 மணியளவில் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. விசயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


குடந்தை

குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில், பகல் 1 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், குடந்தை நகரச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன் உள்ளிட்ட தோழர்களைக் காவல்துறையினர் வலுவந்தமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.


திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில், 16.02.2018 மாலை 4 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் செந்தில்குமார் தலைமையில் அண்ணா சிலை அருகில், ஒன்று கூடிய தோழர்கள், அங்கிருந்து முழக்கங்கள் எழுப்பியபடி புதிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்து காவிரி உரிமைப் பறிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் சை. செயபால், கோட்டூர் செயலாளர் தோழர் தனபாலன், நகரச் செயலாளர் தோழர் இரமேசு, தமிழக உழவர் முன்னணி தோழர் கோவிந்தசாமி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


ஓசூர்

ஓசூர் – இராம் நகர் – அண்ணா சிலை முன்பு, மாலை 5 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஓசூர் செயலாளர் தோழர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூருவாசன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தமிழக மாணவர் முன்னணி தோழர் ம.சு. தமிழ்மாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர். திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். காவிரித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதியாக தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டிக்கும் வகையில், 177 ஆ.மி.க. என எழுதப்பட்ட தாள்களை தோழர்கள் எரிக்க முயன்றபோது, காவல்துறையினர் அதைத் தடுத்து நிறுத்தவே தள்ளுமுள்ளு ஆனது.


திருச்சி

திருச்சியில், மாலை 5.30 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழக உழவர் முன்னணி திருச்சி அமைப்பாளர் திரு. நகர் ஆ. செல்லையன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இனியன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் வெள்ளமாள் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர்.


இதேபோல், இன்று (17.02.2018) காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலும், மாலை 5 மணிக்கு, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டங்கள் நடக்கின்றன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.