“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - பொறியாளர் அ. வீரப்பன் - கட்டுரை
“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - பொறியாளர் அ. வீரப்பன், செயலாளர், மூத்த பொறியாளர் சங்கம் முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு பொதுப்பணித்துறை!
கடந்த 16.02.2018 அன்று காவிரி ஆற்று நீர்ச்சிக்கல் மேல்முறையீட்டு வழக்குகளின் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் அமர்வு தம் தீர்ப்பினை வழங்கியது. இத்தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்று நீரில் ஒரு காலத்தில் 586 ஆ.மி.க. பெற்று அனுபவித்த தமிழ்நாடு - காலம் செல்லச் செல்ல 350 ஆ.மி.க., 250 ஆ.மி.க., 1991-இல் காவரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆ.மி.க. என மிகவும் குறைந்தது. காவிரி மன்ற இறுதித் தீர்ப்பில் (பிப்ரவரி 2007) இதுவும் குறைந்து 192 ஆ.மி.க. ஆக வழங்கப் பட்டது. அதிலும்கூட, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பயன் பாடுகளுக்குப் போக நமக்குக் கிடைத்தது 178 ஆ.மி.க.தான்!
இந்த 178 ஆ.மி.க.வை, கடந்த 10 ஆண்டுகளாகவே கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தெரிவித்தது போல மாத வாரியாக தண்ணீரை விடுவித்தது இல்லை. கர்நாடகத்தில், அவர்களுடைய அணைகள் நிரம்பினால் ஒழிய தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்து விடாமல், நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு எதிராக - ஏன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எந்த மதிப்பும் தரவில்லை!
இந்த நிலையில் தான் நடுவர் மன்றத் தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு கூடுதல் நீர் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கேரளா அரசும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. (மேல்முறையீட்டு வழக்குகளின் எண் C.A.No: 2453, 2454 மற்றும் 2456 / 2007). இந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தம் தீர்ப்பினை 16.02.2018 அன்று அளித்தபோது, தமிழ்நாட்டிற்கு 14.75 ஆ.மி.க. தண்ணீரைக் குறைத்து (192 - 14.75) 177.25 ஆ.மி.க.வாக அறிவித்தது.
இந்தளவு தண்ணீர்க் குறைப்பிற்கு உண்மையான காரணம் என்ன என்பதை தமிழ்நாட்டுப் பொதுமக்கள் பலரும் அறியாமல் குழம்பிப் போய் உள்ளனர். சில அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் முறையாக - மிகச்சரியாக - ஆணித்தரமாக வாதாட வில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இது முற்றிலும் சரியானது அன்று!
இந்தத் தண்ணீர் குறைப்பிற்கு என்ன தான் காரணம் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பக்கம் 433லிருந்து 438 வரையுள்ள 386 - 387 பத்திகளில் தெளிவாகவும் விளக்கமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரைக் கூடுதல் இருப்பாகக் கருதி (Additional Source of Water - X.6 Para 386) இந்த வழக்கில் தவறாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கர்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பழைய கால புள்ளி விவரங்களை (1992 முதல் 1989 வரை) அடிப்படையாகக் கொண்டும் நிலத்தடி நீர் என்பது எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை என்பதைப் புரிந்து கொள் ளாமலும் இந்தத் தீர்ப்புத் தவறாக அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கீழ்க்கண்ட புள்ளி விவரங்கள் தமிழ் நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் இந்த அளவிற்கு நிலத்தடி நீர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே இந்த அளவுக்கு நிலத்தடி நீர் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரிவித்து 20 ஆ.மி.க.விலிருந்து 10 ஆ.மி.க.வை கர்நாடகத்துக்கு 4.75 ஆ.மி.க.வைக் கூடுதலாக (முன்பே வழங்கப்பட்டது 1.85 ஆ.மி.க.) வளர்ந்து வரும் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கும் - மொத்தமாக 14.75 ஆ.மி.க. தண்ணீரை, தமிழ்நாட்டு பங்கீட்டு அளவிலிருந்து குறைந்து கர்நாடகாவிற்கு கூட்டி இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பில் நடந்துள்ள தவறு என்ன?
நிலத்தடி நீர் என்பது நிலையான இருப்பு அல்ல. இந்த நிலத்தடி நீரின் அளவு ஒவ்வொரு இடத்திலும் மாறிக் கொண்டே இருப்பது. (Ground Water quantity changes dynamically with refence to space & time). மழை அதிகமாகப் பெய்தாலும் ஆற்றிலே தண்ணீர் கூடுதலாக வந்தாலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அதன் இருப்புக் கொள்ளளவு அதிகமாகும். மாறாக மழை பெய்யா விட்டால், ஆற்றிலே தண்ணீர் வராவிட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்புக் கொள்ளளவு மிகவும் குறையும். இந்த நிலத்தடி நீரை ஆழ்த்துளை குழாய்க் கிணறுகள் மூலமாக கூடுதலாக இறைத்தாலும் நிலத்தடி நீர் மட்டம் இறங்கி இருப்பு குறையும். இப்படிப்பட்ட நிலத் தடி நீர் இருப்பை ஒரு நிலையாக இருக்கும் இருப்புச் சரக்காக (A Stock Available - ð‚è‹ 436) கருதியே இந்த உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு இந்தத் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் முன்பு கர்நாடக அரசின் சார்பில் முதல் சாட்சியாக விசாரிக்கப்பட்ட நிலத்தடி நீர் வல்லுநர் முனைவர் கே.ஆர். காரநாத் என்பவரும் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் காவிரிப் படுகையில் உள்ள நிலத்தடி நீரை இரண்டாம் முறையாக இருப்பதாக (முன்பே ஆற்றோட்டத்தில் எடுத்துக்கொண்ட கொள்ளளவை) கணக்கிடக் கூடாது என்றும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலும் தமிழ்நாட்டு வழக்கரைஞர்களால் இந்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1991-இல் கர்நாடகத் தின் பாசனப் பரப்பு 11 இலட்சம் ஏக்கரிலிருந்து 2007இல் 18.85 இலட்சம் ஏக்கராக கூட்டப்பட்டு காவிரியிலிருந்து கூடுதலாக தண்ணீரை கர்நாடகாக பயன்படுத்துகிறது என்பதை இந்த உச்ச நீதிமன்ற அமர்வு கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தஞ்சாவூர் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரின் இன்றைய இருப்பு (2017 - 2018) மிகவும் குறைவாக இருப்பதற்குறிய 3 காரணங்கள்.
• பயிர் செய்யும் காலத்தில் போதுமான மழை பெய்யாமை,
• கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய நீரை விடாமல் பிடித்துக் கொண்டமை,
• காவிரியில் நீர் வராமையால் இருக்கின்ற நிலத்தடி நீரை டெல்டா விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தி யதால் நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைவாகப் போய்விட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல் நீரே பல கி.மீ. தூரத்திற்கு உள்புகுந்து உப்புநீர் ஆகிவிட்டது.
இந்த அட்டவணையிலிருந்த தஞ்சை டெல்டா பகுதியில் இருக்கும் நிலத்தடி நீரைவிட அதிகமாகவே கர்நாடகாக பயன்படுத்துகிறது என்பது (-) புள்ளி விவரங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. உச்ச நீதிமன்ற அமர்வு கற்பனையில் கருதிக் கொண்டதைப் போல நிலத்தடி நீர் கூடுதலாக இல்லை என்பதும் புரிகிறது.
தமிழ்நாட்டில் காவரி டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் குறைவாக இருப்பதை தமிழ்நாடு சார்பில் வாதிட்ட வழக்குரைஞர்கள் மிகத் தெளிவாக உச்ச நீதிமன்ற அமர்வில் தெரிவித்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர் இருப்பை / பன்மாநில ஆற்று நீர் பகிர்வுக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் வாதிட்டுள்ளனர்.
அதற்கு எடுத்துக்காட்டாக முன்னரே வெளிவந்த நர்மதா நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாணையம் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாணையமும் நிலத்தடி நீர் இருப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே தான் காவிரி நடுவர் மன்றமும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மேலும் 1972, 1985 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இருந்த நிலத்தடி நீர் இருப்பை 2017ஆம் ஆண்டில் இருப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் இந்த நிலத்தடி நீர் இருப்புப் புள்ளி விவரங்கள் காலம் கடந்தவை (Out dated - Cannot be reliased upon) என்றும் வாதிட் டுள்ளனர்.
பெங்களூருக்கு அப்படி என்ன கூடுதல் சலுகை? நிலவியல் அடிப்படையில் பெங்களூரு நகரத்தில் 36% தான் காவிரிப் படுகையில் உள்ளது. எனவே தான் காவிரி நடுவர் மன்றம் அதில் 20% தண்ணீரை பெங்களூரு குடிநீருக்காக 1.85 ஆ.மி.க. வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. இது மிகச் சரியானது. இதற்கு மேலும் பெங்களூரு நகர குடிநீர் தேவைக்கு வேண்டிய தண்ணீரை அருகிலிருந்தும் நேத்ரா ஆற்றிலிருந்தும் துங்கப்பத்திரா ஆற்றிலிருந்தும் எளிதாகப் பெறலாம் என்றும் நம் வழக்குரைஞர்கள் விளக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு நகரின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பெரிதாகப் பேசிய இந்த மூவர் அமர்வு தமிழ்நாட்டுப் பெருநகரங்களான - காவிரிப் படுகையிலுள்ள ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சை மாநகராட்சிகளின் தண்ணீர்த் தேவைகளைக் கணக்கில் எடுத்ததுக் கொள்ளாதது ஏன்?
பெங்களூருவிற்கு குடிநீர் தர வேண்டும் என்பதற் காகவே 1972லிருந்து நிலத்தடி நீர் புள்ளிவிவரங்களை எடுத்துரைக்கும் இந்த மூவர் அமர்வு, அதைப் போல கர்நாடகாவின் காவிரிப்படுகையிலுள்ள நிலத்தடி நீரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்?
கர்நாடகத்தில் காவிரிப் படுகையிலுள்ள நிலத்தடி நீர் இருப்பை நடுவண் நிலத்தடி நீர் வாரியம் ஆண்டுதோறும் Ground Water year book of Karnataka State - கடைசியாக 2015 - 2016 ஆம் ஆண்டிற்கும்) பதிப்பித்து வருவதை அறியாமல் - புள்ளி விவரங்களை கேட்டுப் பெறாமலும் - கர்நாடகத்தில் நிலத்தடி நீர் பற்றிய நம்பகமான புள்ளிவிவரங்கள் இல்லையென உண்மைக்கு மாறாகத் தெரிவித்துள்ளது, இந்த அமர்வு (பக்கம் 438). எனவே எல்லா வகையிலும் இந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற அமர்வு பல தவறுகளைச் செய்து இருக்கிறது. இது தொடர்பாக நம்பகமான சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.
1990 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி கர்நாடகாவின் காவிரிப்படுகையில் நிலத்தடி நீரின் இருப்புக் கொள்ளளவு - 107.981 ஆ.மி.க.; பயன்பாடு - 19.516 ஆ.மி.க. மீதம் - 88.465 ஆ.மி.க.
பெங்களூரு பகுதியில் மட்டும் - இருப்பு 16.376 ஆ.மி.க.; பயன்பாடு - 5.837 ஆ.மி.க.; மீதம் - 10.539 ஆ.மி.க. ; (காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அறிக்கை - சனவரி, 1993).
எனவே இந்த புள்ளி விவரங்களின்படி பெங்களூருக்குட்பட்ட காவிரிப்படுகையில் நிலத்தடி நீரை பெங்களூரு குடிநீருக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளிக்காமல் தமிழ்நாட்டின் நீர்ப்பங்கீட்டளவைக் குறைப்பதில் (4.75 டி.எம்.சி) என்ன நியாயம் இருக்கிறது?
இந்திய பன்மாநில ஆற்றுநீர்ப் பங்கீட்டு அரசியல் சட்டம் 1956 - திருத்தம் (6(2))ன்படி, (Act 14 of 2000 - 06.08.2002) காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு இந்திய அரசிதழில் வெளியிட்டவுடன் அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதாக ஆகிறது. அத்துடன் இந்தத் தீர்ப்பு இறுதியானது; தொடர்புடைய மாநிலங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது (Final and Binding).
எனவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் நீர்ப் பங்கீட்டின் அளவுகளை மாற்றுவதற்கோ, குறைப்ப தற்கோ, கூட்டுவதற்கோ உச்ச நீதிமன்றத்திற்கு அதி காரம் ஏதும் அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட வில்லை. இப்படி இருந்தும் உச்ச நீதிமன்றம் தவறான காரணங்களின் அடிப்படையில் சரியாக கவனம் செலுத்தாமல் தமிழ்நாட்டின் நீர்ப்பங்கீட்டு அளவைக் குறைத்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இருப்பினும், இந்த மூவர் அமர்வு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெரிவித்த பல முடிவுகளை சரியானவை என்று உறுதிச் செய்துள்ளது. குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்ற பொருள்படும்படி தீர்ப்புரைத்துள்ளது.
இதிலாவது உச்ச நீதிமன்றம் உறுதியாக இருந்து - இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் தரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க் கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதித்து நடக்காத கர்நாடக அரசை இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் வழிக்குக் கொண்டு வந்து - இந்திய அரசியல் சட்டப்படி மதிக்கச் செய்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாமா நாம்?
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 1 - 15, 2018
கண்ணோட்டம் இணைய இதழ்
ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
பேச: 7667077075, 98408 48594
Leave a Comment