ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி வழக்கில் இன்று (16.05.2018) உச்ச நீதிமன்றத்தில் மிகவும் அடிப்படையான – உயிரான திருத்தம் ஒன்றை தமிழ்நாடு அரசு முன்வைக்காமல் போனது பெருந்துயரம் ஆகும்! அதாவது அமைக்கப்படவுள்ள “காவிரி செயல்திட்டம்” – தற்சார்பான தன்னதிகாரம் (Independent) கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். அதற்கான திருத்தத்தை உச்ச நீதிமன்றம் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். செயல்திட்டத்தின் அதிகாரம் தெளிவில்லாமல் இருக்கிறது என்று கூறியதோடு தமிழ்நாடு அரசு நிறுத்தியிருக்கக் கூடாது!

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பு பாகம் – 5இல் – 15ஆம் பத்தியில் (Para) செயல்திட்டம் பற்றி கூறும்போது, “தற்சார்பு அதிகாரம்” (Independent) கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்குமுன் 14ஆம் பத்தியில் “செயல்திட்டம் போதுமான அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்; அவ்வாறான அதிகாரம் அதற்கு இல்லையென்றால் தீர்ப்பாயத்தின் முடிவுகள் ஒரு துண்டுத்தாளில் (Piece of Paper) மட்டுமே இருக்கும் என்று அஞ்சுகிறோம்” என்று தீர்ப்பாய நீதிபதிகள் மூவரும் கூறியுள்ளனர்.

இந்திய அரசின் நீர்வளத்துறை தயாரித்த செயல் திட்ட வரைவில் வேண்டுமென்றே தந்திரமாக “தற்சார்பு அதிகாரம் (Independent)” என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டது; தீர்ப்பாயத்தில் உள்ள மற்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த செயல்திட்டத்திற்குத்தான் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று பெயர் மட்டும் வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியிருக்கிறது. அக்கோரிக்கையை உச்ச நீதிமன்றமும், இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது.

இந்த “காவிரி மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏதாவதொரு மாநிலம் செயல்படுத்த மறுத்தால், அதைச் செயல்படுத்திக் கொள்வதற்கு தேவையான உதவியை அது நடுவண் அரசிடம் கோரலாம் என்று தீர்ப்பாயத் தீர்ப்பில் உள்ளது. இதை “செயல்படுத்த மறுப்பது பற்றி நடுவண் அரசிடம் மேலாண்மை வாரியம் கூறி உதவி கோரலாம்; அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது” என்று வரைவுச் செயல்திட்டத்தில் நடுவண் அரசு தந்திரமாகச் சேர்த்துள்ளது.

“மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏற்க ஒரு மாநிலம் மறுத்தால், அதைச் செயல்படுத்தி வைக்கத் தேவையான காவல்துறை மற்றும் இராணுவ உதவிகளைப் போன்ற உதவிகளை இந்திய அரசிடம் கோரலாம் என்ற பொருளில்தான் மேலாண்மை வாரியம் நடுவண் அரசின் உதவியைக் கோரலாம் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இந்திய அரசின் முடிவே இறுதி முடிவு என்று புதிதாகச் சேர்க்கப்பட்ட பத்தியை நீக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியதும், அத்திருத்தத்தை தீபக் மிஸ்ரா ஆயம் ஏற்றுக் கொண்டதும் வரவேற்கத்தக்கது!

அடுத்து, என்னென்ன பயிர் செய்ய வேண்டும் என்பதையும், சொட்டு நீர்ப் பாசனம் உட்பட என்னென்ன பாசன முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மேலாண்மை வாரியம் முடிவு செய்யும் என்று நடுவண் நீர்வளத் துறை தயாரித்த செயல் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதையும் நீக்குமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கோர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள் யாரும் கட்டக் கூடாது என்பதை செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு உச்ச நீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு திருந்தவே இல்லை என்பதற்கான சான்றாகத்தான் “மாதவாரியாகத் தண்ணீர்திறந்து விடக் கூறும் பகுதியை நீக்க வேண்டும்” என்றும், சூலை மாதத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் அடாவடிக் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தின் முறையற்ற கோரிக்கைகளை ஏற்கக் கூடாது!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.