ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வைகோ அவர்கள் திராவிடத்தைக் கைவிட்டு தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்த வேண்டும்! தோழர் பெ. மணியரசன்

வைகோ அவர்கள் திராவிடத்தைக் கைவிட்டு தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்த வேண்டும்! தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா ஆண்டில் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அண்ணன் வைகோ அவர்களுக்கும், ம.தி.மு.க. பொறுப்பாளர்களுக்கும் தோழர்களுக்கும் என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.தி.மு.க.வின் வெள்ளி விழாவை ஒட்டி அண்ணன் வைகோ அவர்களின் சிறப்பு நேர்காணலை ஆங்கில இந்து இதழ் 07.05.2018 அன்று வெளியிட்டுள்ளது. இதழாளர் கோலப்பன் அவர்கள் அச்செவ்வியை எடுத்துள்ளார். அதில் திராவிடம் மற்றும் தமிழ்த்தேசியம் குறித்து வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு மட்டும் எனது மாற்றுக் கருத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நேர்காணலில் குறிப்பிட்ட வினாவும் விடையும் வருமாறு :

“கோலப்பன் : திராவிட இயக்கம் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கருதுகிறீர்களா?

வைகோ : ஆம். ஒரு பக்கம் இந்துத்துவா ஆற்றல்கள் தமிழ்நாட்டில் இடம்பிடிக்க முயலுகின்றன. இன்னொரு பக்கம் தமிழ்த்தேசியக் குழுக்கள் (Tamil Nationalist Groups) திராவிட இயக்கத்தை வலுக்குறையச் செய்ய புறப்பட்டுள்ளன. திராவிட இயக்கத்துடன் இணைந்த ஒரு பகுதிதான் தமிழ்த்தேசியம்.

பழைய சென்னை மாகாணத்தில் தென்மாநிலங்களின் பல பகுதிகள் இணைந்திருந்ததால் திராவிடர் கழகம் என்று பெரியார் பெயர் சூட்டினார். திராவிட இயக்கத்தைப் போல் தமிழ்நாடு மற்றும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டதாக மிகச் சில வேறு இயக்கங்களே உரிமை கோர முடியும்”.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

திராவிடக் கருத்தியலுக்கும், தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. கட்சிகளின் அரசியலுக்கும் எதிரான கருத்தியலை எமது தமிழ்த்தேசியப் பேரியக்கமும் முன் வைத்து வருகிறது. அதேவேளை ம.தி.மு.க.வுடன் பல்வேறு தமிழர் உரிமைப் போராட்டங்களில் பங்கேற்று வருகிறது.

மேற்படி நேர்காணலில், “திராவிடர் கழகம்” என்று பெரியார் பெயர் வைத்ததற்குக் காரணம் அப்போது சென்னை மாகாணத்தில் தென்னக மாநிலங்களின் பல பகுதிகள் சேர்ந்து இருந்ததுதான் என்று வைகோ கூறுகிறார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டால், அந்தத் தென் மாநிலங்களின் பகுதிகள் 1950களில் மொழி இன மாநில உருவாக்கம் நடந்தபோது – தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து சென்று விட்டன. எனவே அப்போது வைக்கப்பட்ட “திராவிட” என்ற பெயர் இப்போது பொருந்தாது; அப்பெயர் தேவை இல்லை!

தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து சென்ற ஆந்திரப்பிரதேசம், கர்நாடகப் பகுதிகள், மலையாளப் பகுதிகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தங்களைத் திராவிடர் என்ற பெயரில் அப்போதும் அழைத்துக் கொள்ளவில்லை; இப்போதும் அழைத்துக் கொள்ளவில்லை. அப்போது செயல்பட்ட நீதிக்கட்சியின் பெயர் தென்னிந்திய நலவுரிமை சங்கம் தானே தவிர திராவிட நல உரிமை சங்கம் அன்று! நடைமுறையில் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் “திராவிடர்” என்ற இன அடையாளத்தை ஏற்றுக் கொள்ளாத உண்மையைக் கண்ட பிறகாவது பெரியார் தன் கருத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் கடைசி வரை மாற்றிக் கொள்ளவில்லை!

தமிழர்கள் மட்டும் திராவிடர் என்ற பெயரை ஏன் தலைசுமக்க வேண்டும்? தமிழர்களின் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர்கள் இலக்கியம் எதுவுமே திராவிடர் – திராவிட என்ற பெயர்களைக் குறிப்பிடவே இல்லை!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி பேசும் பிராமணர்கள் பஞ்ச திராவிடர்கள் என்று குறிக்கப்பட்டார்கள். ஆனால், தமிழர்களைத் திராவிடர்கள் என்று நம் இலக்கியங்கள் கூறவில்லை. விசயநகர நாயக்க தெலுங்கு மன்னர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் வேரூன்றி நீண்டகாலம் தொடர்ந்தபோதுதான் “திராவிட” என்பது தமிழர்களையும் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்தது.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் புதூரு திராவிட சங்கம் என்று வைத்துள்ளார்கள். புதூரு பிராமணர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்கள்! (காண்க : http://www.pdassociationnellore.com, http://pudurdravida.com ).

சென்னையில் தென்கனரா திராவிட பிராமணர் சங்கம் – பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. (The South Kanara Dravida Brahmin Association, Chennai) பதிவு 1953 அக்டோபர் 19. (http://www.skdbassociation.com).

தமிழர் என்றால் “எங்கள் தாய்மொழியும் தமிழ்தான்” என்று பிராமணர்களும் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லி நம்மோடு சேர வருவார்கள். “திராவிடர்” என்று சொன்னால் பிராமணர்கள் நம்மோடு சேர வர மாட்டார்கள் என்றார் பெரியார்! இவ்வாறு பெரியார் கூறியது வரலாற்று உண்மைகளுக்கு மாறானது என்பதை மேலே கண்டோம். சரியாகச் சொன்னால் திராவிடர் என்பதில் தமிழர்கள்தான் வரமாட்டார்கள்.

சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு இரண்டும் வீழ்ச்சியடைந்தபின், பலவகையான அயலார்க்கு நீண்டகாலம் அடிமையாகிப் போனோம். அதனால் அயலார் சூட்டிய பெயர்களையெல்லாம் சுமக்கும் அவலம் தமிழர்களுக்கு ஏற்பட்டது. அவ்வாறு அயலார் சூட்டிய பெயர்கள்தான் திராவிடர் – சூத்திரர் – பஞ்சமர் என்பவை!

அவ்வாறு அடிமைப்பட்ட நிலையில், ஆங்கிலேயர்க்குத் தமிழர்கள் அடிமையானோம். ஐரோப்பாவிலிருந்து வந்த கிறித்துவப் பேராயரும் மொழியியல் ஆய்வாளருமான கால்டுவெல் செய்த பெருங்குழப்பம் திராவிடர் என்று ஓர் இனம் இருந்தது; திராவிடம் என்ற பெயரில் ஒரு மூலமொழி (Proto Language) இருந்தது என்பதாகும்!

தமிழ் மொழியிலிருந்து எந்த அகச்சான்றும் காட்ட முடியாமல் சமற்கிருத நூல்களான மனுதர்ம சாத்திரம், குமாரிலப் பட்டரின் தந்த்ர வார்த்திகா முதலியவற்றிலிருந்து “த்ராவ்ட” என்பதற்கு சான்று காட்டினார் கால்டுவெல்.

திராவிட என்ற பெயரில் ஒரு மூலமொழி இருந்ததே இல்லை. அதற்கான சான்று எள்ளளவும் எங்கேயும் கிடைக்கவில்லை. திராவிட என்ற பெயரில் ஓர் இனம் (Race) இருந்ததே இல்லை!

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர் திராவிட மூலமொழி இருந்ததாக ஒப்புக் கொள்வார்கள். ஏன்? தமிழ்தான் அந்த மூலமொழி என்ற உண்மையை மறைக்கவும் மறுக்கவும் இம்மூவருமே மூலமொழி என்ற கருத்தில் மட்டும் தந்திரமாக “திராவிட” என்பதை ஏற்றுக் கொள்வார்கள். தமிழை “சகோதர பாஷா” என்று கூறி – தங்கள் தாய்மொழியின் ஒர் உடன்பிறப்பு தமிழ் மொழி என்று குறுக்கிக் காட்டுவார்கள்.

மற்றபடி தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர் தங்கள் அரசியல் மற்றும் அன்றாடப் புழக்கம் எதிலும் தங்களைத் திராவிடத்துடன் இணைத்துக் கொள்ளமாட்டார்கள். தெலுங்கர், கன்னடர், மலையாளி என்ற தம்தம் தேசிய இனப் பெயரில் மட்டுமே ஊன்றி நிற்கின்றனர். அவர்களிடம் திராவிடக் குழப்பம் கிடையாது! தமிழ்நாட்டில்தான் திராவிடக் குறுக்குச்சால் ஓட்டி இனக்குழப்பம் விதைக்கப்பட்டது.

பெரியார் குறித்த திறனாய்வு ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கம் பெரியாரைத் திறனாய்வு செய்வது அவர் பிறப்பை வைத்தல்ல! பெரியாரை மட்டுமின்றி, பல நூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுப் போக்கில் தமிழ்நாட்டில் குடியேறி தமிழ்நாட்டைத் தங்கள் தாயகமாகக் கொண்டுள்ள தெலுங்கு, கன்னடம், சௌராட்டிரம், உருது, மராத்தி போன்ற மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரையும் இந்த மண்ணின் மக்களாக – தமிழ் மக்களாக ஏற்றுக் கொள்கிறது நாங்கள் முன்வைக்கும் தமிழ்த்தேசியம்!

இதற்கொரு கால வரம்பு வேண்டும் என்பதற்காக, 1956 நவம்பர் 1இல் தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு இந்திய அரசால் வரையறுக்கப்பட்ட பின் வந்த அயலார் அனைவரும் வெளியார் என்கிறது த.தே.பே.! இராசீவ்காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது வெளியார் சிக்கல் குறித்து அசாமில் போராடிய மாணவர் அமைப்புடன் போட்ட ஒப்பந்தத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்குப் பின் அசாமில் குடியேறியவர்கள் அயலார் என்று வரையறுக்கப்பட்டது.

1. உலகில் முதலில் தோன்றிய இனமான தமிழர் என்ற இனத்தின் பெயரை மறைத்தும், மறுத்தும் பெரியார், “திராவிடர்” என்ற ஆரியப் பெயரை தமிழர்க்குச் சூட்டிப் பரப்பினார்.

2. “தமிழ் காட்டுமிராண்டி மொழி – தமிழைப் படிக்காதீர்கள் – தமிழில் பேசாதீர்கள் – வீட்டில் மனைவியுடன் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேசிப் பழகிக் கொள்ளுங்கள்” என்று தமிழர்களிடம் அவர் வலியுறுத்தினார். 1968 – 69 இல் கூட இவ்வாறு வலியுறுத்தினார். “தமிழ்ச் சனியனை விட்டொழியுங்கள்” என்றார்.

3. திருக்குறள் தொடங்கி தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் குப்பை, உதவாக்கரை என்று பரப்புரை செய்தார். சிலப்பதிகாரத்தைத் தேவடியாள் காப்பியம் என்றார்.

4. திராவிட நாடு விடுதலை, தமிழ்நாடு விடுதலை என்றெல்லாம் பேசிக் கொண்டே இந்திய ஏகாதிபத்திய ஆட்சி நடத்தி வந்த காங்கிரசுக் கட்சிக்கு 1954 முதல் 1967 தேர்தல் வரை – சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வாக்குக் கேட்டார் பெரியார்.

இவ்வாறான அவருடைய தமிழிலக்கிய மறுப்புகளும், தமிழை இழிவுபடுத்திய செயல்களும் பற்பல இருக்கின்றன.

வேண்டுகோள்

எனவே அண்ணன் வைகோ அவர்கள், திராவிடத்தை ஒரு தத்துவம் போலவும், திராவிடர் என்ற பெயரில் ஓர் இனம் இருந்ததுபோலவும், திராவிடம் என்ற பெயரில் ஒரு மொழி இருந்தது போலவும் கருதிக் கொண்டு பேசுவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்த்தேசிய இனத்திற்குரிய இயற்கையான அரசியல், மொழி, பண்பாடு, பொருளியல் சார்ந்த “தமிழ்த்தேசியம்” என்ற கருத்தியலை திராவிடத்தை அழிக்க வந்த புதுக் கோட்பாடாகக் கருத வேண்டாம்! அதேபோல், திராவிட – நாற்றங்காலில் முளைத்ததுதான் தமிழ்த்தேசியம் என்ற பிழையான கருத்தியலை வைகோ அவர்கள் கைவிட வேண்டும்.

திராவிடம் பேசுவோர் தமிழ் மொழி – தமிழர் இனம் ஆகியவற்றை ஆதரித்துப் பேசவில்லையா என்று கேட்கிறார். அவர்கள் தமிழ் மண்ணில் அரசியல் நடத்துவதால் தமிழினப் பெருமைகளையும், தமிழ் மொழிச் சிறப்புகளையும் பேசுவது தேவையாக அமைந்தது. தமிழ், தமிழர் உரிமைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டியதாயிற்று! அதேவேளை, திராவிடக் கருத்தியலை மேலாதிக்கம் செய்ய வைத்து, அதற்குக் கீழ் இரண்டாம் நிலையில் தமிழையும் தமிழர்களையும் வைத்தனர்.

அண்ணன் வைகோ அவர்களும், ம.தி.மு.க.வினரும் தமிழ் மொழி – தமிழ் இன – தமிழர் தாயக – தமிழர் வாழ்வுரிமைப் போராட்டங்களில் மெய்யாகக் களமாடுகிறீர்கள். ஆனால், அதே வேளை காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் திராவிடக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்துத் தமிழ்த்தேசியத்தோடு முரண்படுவது அல்லது திராவிடத்திற்குள் தமிழ்த்தேசியத்தை உட்படுத்த முயல்வது தமிழர் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் பாதிப்புகளை உண்டாக்கும்! உங்கள் வளர்ச்சிக்கும் பாதிப்பை உண்டாக்கும்!

உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். மறு ஆய்வு செய்யுங்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/TamizhdesiyamNo comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.