"முழுமையான தமிழ்த்தேசியர் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா" தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
"முழுமையான தமிழ்த்தேசியர் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
மூத்த தமிழறிஞர், முழுமையான தமிழ்த்தேசியர் முனைவர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் 31.05.2018 விடியற்காலையில் புதுவையில் தம் இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பேரிடியாய் நெஞ்சில் இறங்கியது. நானும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, புதுவை ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. வேல்சாமி உள்ளிட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தச் சென்றோம்.
மறைமலையடிகளார், பாவாணர், பெருஞ்சித்தனார் வரிசையில் அடுத்து நின்றவர் ம.இலெ. தங்கப்பா அவர்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆழ்ந்த புலமை! வெளியிலும் வீட்டியிலும் தனித்தமிழே பேச்சு மொழி! குடும்பமே தமிழியக்கக் குடும்பம்!
ஐயாவின் இல்லத்தரசியார் விசாலாட்சி அம்மையார் தூயத்தமிழில் சரளமாய் வீட்டில் பேசுவார்; அவர்கள் பிள்ளைகள் செங்கதிர், விண்மீன், பாண்டியன், இளம்பிறை, மின்னல் ஆகியோர் தூயத்தமிழிலே உரையாடுவர்! எழுதுவர்!
தங்கப்பா அவர்கள் கட்டுரை மற்றும் பாக்களை 1965 – 1966 ஆம் ஆண்டுகளில் “தென்மொழி” இதழில் படித்ததின் வழியாக ஐயா அவர்கள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. திருச்சி தேவர் மன்றத்தில் 1968இல் நடந்த உலகத் தமிழ்க் கழக முதல் அமைப்பு மாநாட்டில் தங்கப்பா அவர்களின் அறிவார்ந்த உரையைக் கேட்டேன். பாவேந்தர் பாரதிதாசன் பாக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து “தென்மொழி”யில் வெளியிட்டார் தங்கப்பா!
கழக (சங்க) இலக்கியங்கள், வள்ளலார், பாரதியார், பாவேந்தர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். சங்க இலக்கியங்களை (Love Stands Alone) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தந்தார். அந்நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கியது. ஐயாவின் “சோளக் கொள்ளை பொம்மை” என்னும் சிறுவர் இலக்கிய நூலுக்கும் சாகித்திய அகாதமி விருது வழங்கியது.
இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தம்பட்டம் அறியா தமிழ்ச் சான்றோர்; ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைக் குன்றம் ம.இலெ. தங்கப்பா!
புதுவை அரசு ம.இலெ. தங்கப்பா அவர்களுக்கும், முனைவர் இரா. திருமுருகன் அவர்கட்கும் “கலைமாமணி” விருது அளித்தது. அரசு அலுவலர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் என்று ஆணை இடுமாறு புதுவைத் தமிழறிஞர்கள் புதுவை அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றவுடன் இவ்விருவரும் புதுவை அரசு தங்களுக்கு வழங்கிய கலைமாமணிப் பட்டத்தைத் திருப்பி அனுப்பி விட்டனர்!
ம.இலெ. தங்கப்பா அவர்கள் ஆய்வறிஞர் மட்டுமல்ல; களப் போராளியும் ஆவார்! தமிழ் மொழி, தமிழீழம் சார்ந்த போராட்டங்களில் புதுவையிலும் கலந்து கொண்டு தளைப்படுவார். தமிழ்நாட்டிலும் கலந்து கொண்டு தளைப்படுவார்.
“தமிழர் கண்ணோட்டம்” இதழில் அவ்வபோது கட்டுரை எழுதி வந்தார். அவர் எழுதிய மடலே ஒரு கட்டுரையாக தமிழர் கண்ணோட்டத்தில் வெளிவந்தது. கடைசியாக அவரது அருமையான கட்டுரை தமிழர் கண்ணோட்டம் 2018 மே 16 – 31 இதழில் வெளிவந்தது. அதன் தலைப்பு: நிற வெறி – இன வெறி – சாதி வெறி வேர்கள் எங்கே? அகற்றுதல் எங்ஙனம்?
உடல்நலமின்றி ஐயா அவர்கள் இருக்கிறார்கள் என்பதறிந்து 03.05.2018 அன்று புதுவை சென்று ஐயாவையும் அம்மாவையும் பார்த்து நலம் விசாரித்து வந்தோம்! முடியாத நிலையிலும் இருவரும் கலகலப்பாகப் பேசினார்கள்!
நேற்று (31.05.2018) மாலை புதுவையில் ஐயாவின் இல்லத்திலிருந்து புதுவை சிப்மர் மருத்துவமனைவரை அவர் உடல் பின்னால் வந்தோம். அவர் விருப்பப்படி அவர் உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதற்கு முன் மருத்துவமனை வளாகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ஐயா நெடுமாறன் அவர்களும் நானும் மற்றவர்களும் பேசினோம்.
“தமிழ்த்தேசியத்தில் உங்கள் பாதை சரியாக இருக்கிறது; முன்னேறிச் செல்லுங்கள்!” என்று ஐயா அவர்கள் 03.05.2018 அன்று என்னிடம் கூறிய சொற்கள் இன்று அவர் உடல் அருகே நின்று இரங்கல் உரையாற்றிய போது என் மனதில் எதிரொலித்தது!
நாங்கள் மட்டுமல்ல, நாம் எல்லோரும் ஐயா ம.இலெ. தங்கப்பா அவர்கள் வாழ்ந்து காட்டிய – வகுத்துக்கொடுத்துள்ள தமிழ்த்தேசியப் பாதையில் முன்னேறிச் செல்வோம்! இதுவே ஐயாவுக்கு தமிழர்கள் செலுத்தக் வேண்டிய நன்றிக்கடன்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment