ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பேரூர் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

பேரூர் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
பேரூர் மூத்த ஆதினகர்த்தர் தவத்திரு. சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். தமிழ்ச் சைவ சமயத்தில் நின்று தெய்வத்தொண்டு, செந்தமிழ்த் தொண்டு, கல்வித் தொண்டு மற்றும் பல மக்கள் தொண்டுகள் ஆற்றிய மாத்தமிழர் ஐயா அவர்கள். ஆன்மிகத்திலும் தமிழர் வாழ்வியலிலும் ஆக்கிரமித்துள்ள ஆரிய மொழி மற்றும் பண்பாட்டு ஆதிக்கங்களை நீக்கி மரபுவழிபட்ட தமிழர் பண்பாட்டை மீட்க அரும்பாடு பட்டவர் ஆவார்கள்.
 
ஆதினத்தின் பொறுப்பில் அருந்தமிழ் கல்லூரி நடந்து வருகிறது. கொங்குச் சீமையில் ஏரளாமாகத் தமிழ் வழிக் குடமுழுக்குகள் நடத்தினார்கள். நம்முடைய தமிழ் மக்களும் அடிகளாரின் ஆன்மிக வழிப்பட்ட தமிழ்த்தொண்டுக்கு வரவேற்பும் வாய்ப்பும் கொடுத்தார்கள்.
 
ஐயா அவர்களுடைய சிறந்த சாதனைகளில் ஒன்று தகுதியான இளையபட்டம் அவர்களைத் தேர்வு செய்தது ஆகும். இளையபட்டம் அவர்கள் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் ஆன்மிக மற்றும் தமிழ்ப் பணிகளை விரிவடைய செய்து வளர்த்தவருகிறார்கள்.
 
மூத்த ஆதினகர்த்தர் ஐயா அவர்களை பேரூர் ஆதினத்தில் ஒரு முறை நேரில் சந்தித்து அவர்களுடைய பணிகளைப் பாராட்டும் வாய்ப்பு பெற்றேன். ஐயா அவர்கள் இயல்பாக கலந்துரையாடி எமது தமிழ்த்தேசிய பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். நாங்கள் உணவு அருந்தி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவ்வாறே உணவு அருந்தி வந்தோம். இளையபட்டம் அவர்களுடன் அப்போதுதான் அறிமுகமானேன். இளையபட்டம் அவர்கள் தமிழ்மொழிக்காக எடுத்து வரும் எல்லாச் செயல்பாடுகளையும் தொடர்ந்து பாராட்டி வருவதுடன் அச்செயல்பாடுகளுக்கு இயன்ற வரை ஆதரவு அளித்துவருகிறேன்.
 
பேரூர் மூத்த ஆதினகர்த்தர் பெருமைமிகு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தவத்திரு இளையபட்டம் அவர்களுக்கும் அன்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.