ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
நீண்டகாலக் காத்திருப்புக்குப்பிறகு தமிழ்நாடு அமைச்சரவை, இராசீவ்காந்தி கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாகச் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என தீர்மானித்து, அதனைப் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் அதனை இன்று (13.09.2018) இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.
 
உறுப்பு 161-இன்படி முன் விடுதலை குறித்து மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் தகவலாகவோ, கருத்துக் கேட்டோ அனுப்புவது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்!
 
உறுப்பு 161-இன்படியான தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது; எந்த நிபந்தனைகளுக்கும் அப்பாற்பட்டது! உறுப்பு 161-இன்படியான தண்டனைக் குறைப்பு என்பது ஆளுநரின் ஆணையாக வெளியிடப்படுகிறதே அன்றி, இதில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு அதிகாரம் (Personal Discretion) எதுவும் இல்லை! ஆளுநர் 163 (1)-இன்படி அமைச்சரவை முடிவை செயல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பு மட்டுமே கொண்டவர் ஆவார்.
 
தண்டனைக் குறைப்பு தொடர்பான மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதை சாம்ஷேர்சிங் - எதிர் - பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் (1974 AIR 2192) நீதிபதி ஏ.என். ரே தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் தெளிவுபட கூறியிருக்கிறது.
 
இதன்பிறகு, மாரூராம் வழக்கில் (1981) நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் இன்னும் விரிவாகவும் - தெளிவாகவும் கூறிவிட்டது.
 
“ஒரு மாநில ஆளுநர் விரும்புகிறாரோ இல்லையோ உறுப்பு 161-இன்படி மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரைக்கு அவர் கட்டுப்பட்டவர் ஆவார். முன் விடுதலை அளிப்பதில் ஆளுநர் சுயேச்சையான எந்த முடிவுக்கும் வர முடியாது. ஆளுநர் என்பவர் உறுப்பு 161-இன்படி மாநில அமைச்சரவையின் சுருக்கெழுத்து வடிவம் ஆகும்” என்று உறுதிபடக் கூறியிருக்கிறது.
 
இதை அடியொற்றி நளினி - எதிர் - தமிழ்நாடு ஆளுநர் என்ற வழக்கில் (25.11.1999), சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரவையின் முடிவின்படியே ஆளுநர் செயல்பட்டாக வேண்டும் எனத் தெளிவுபடுத்தியது.
 
நளினி மற்றும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தங்களுக்கு மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கி விடுதலை அளிக்க வேண்டும் எனக் கோரி அன்றைய தமிழ்நாடு ஆளுநர் பாத்திமா பீவிக்கு மனு அனுப்பியிருந்தனர். மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் காத்திராமல், ஆளுநர் பாத்திமா பீவி, நளினி உள்ளிட்ட நால்வரின் மனுவை தன்னிச்சையாக நிராகரித்தார்.
 
அதனை எதிர்த்து நளினி மற்றும் மூவர் தொடுத்த மேற்கண்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரவை பரிந்துரைப்படிதான் ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும் எனத் தீர்ப்புரைத்தது.
 
எனவே, உறுப்பு 161-இன்படியான தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை எந்தவித குறுக்கீட்டுக்கும் இடம் தராமல் செயல்படுத்த வேண்டும் என்பதே சட்டநெறியாகும்!
 
ஆளுநர் புரோகித் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து அறிக்கை அனுப்பியிருப்பது அரசமைப்புச் சட்டத்தை ஆளுநரே கவிழ்க்க முயல்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
ஒருபுறம் தமிழ்நாட்டுக்கு வந்து சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் இராசீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை மன்னித்துவிட்டோம் என்று கூறிவிட்டு, இப்போது காங்கிரசுக் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுரஜ்வாலா வழியாக ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக அறிக்கை கொடுப்பது காங்கிரசுக் கட்சியின் தமிழினப் பகைப் போக்கையும், நயவஞ்சக இரட்டை வேடத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
 
வழக்கம் போல் பா.ச.க. சுப்பிரமணியசாமி போன்றவர்கள் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக நஞ்சு கக்கி வருகிறார்கள். இப்போது ஆளுநர் இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவது, வடநாட்டு அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படுகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஆணையாக வெளியிட வேண்டும் என்பதில் உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும். சட்டநெறிப்படியும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்திற்கு மதிப்பளித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை எந்தத் தாமதமும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
 
தமிழின உணர்வாளர்கள் விழிப்போடு இருந்து, ஏழு தமிழர் விடுதலையில் உறுதியாக செயலாற்ற வேண்டும்!
 
#7தமிழர்விடுதலை
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.