ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆரியத்தின் இரட்டை நாக்கு! தோழர் கி. வெங்கட்ராமன்.

ஆரியத்தின் இரட்டை நாக்கு! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

நேற்று (17.09.2018) பெரியாரின் 140ஆவது பிறந்தநாள்! இதனையடுத்து, பெரியார் பற்றாளர்கள் தமிழகமெங்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையிலும், திருப்பூர் தாராபுரத்திலும் பெரியார் சிலைகளை சிலர் அவமரியாதை செய்துள்ளனர்.
சென்னையில் பெரியார் சிலை மீது செருப்பு வீசிய பா.ச.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் செகதீசன், அங்கேயே காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். தாராபுரத்தில் உடுமலை சாலை தீவுதிடல் பூங்காவிலுள்ள பெரியார் சிலையை அவமரியாதை செய்ததாக செங்கல் சேம்பர் உரிமையாளரின் மகன் நவீன் குமார் என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நிலைமை இவ்வாறிருக்க, நேற்று (17.09.2018) திருச்சியில் பா.ச.க. நடத்திய அமைப்புச் சாரா தொழிலாளர்களின் மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராசன் அவர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் தங்கள் கட்சியினரே இல்லை என்றார். அவருக்குப்பின் பேசிய நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் அதை வழிமொழிந்ததோடு, “தமிழ்த் தீவிரவாதிகள்தான் அவ்வாறு செய்திருப்பர்” என்று பேசியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் - பெரியாரின் கருத்துகளை திறனாய்வு செய்கிறது. திராவிடக் குழப்பவாதத்தை எதிர்க்கிறது. ஆனால், அதற்காக பெரியார் சிலையை அவமரியாதை செய்வதை பேரியக்கமும், தமிழ்த்தேசியர்களும் ஒருபோதும் ஏற்பதற்கில்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கம் நேற்றைய நிகழ்வுகள் உள்ளிட்டு, பெரியார் சிலை ஆரியத்துவாவாதிகளால் இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் கண்டித்து வருகிறது.
ஒரு விடயத்தை தான் பேசிவிட்டு, பின்னர் பேசவில்லை என மறுப்பது ஆரியத்துவா வாதிகளுக்குப் புதிதானதல்ல!
காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பார்கள். ஆனால், கோட்சேவுக்கு விழா எடுப்பார்கள்! பெரியார் சிலைகளை அகற்ற வேண்டுமென முகநூலில் எழுதிவிட்டு, தான் அவ்வாறு எழுதவில்லை - தனது அட்மின் அவ்வாறு எழுதிவிட்டதாகக் கூறி தப்ப முயன்றார் எச். இராசா! இப்போதுகூட, உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்திப் பேசிவிட்டு அவ்வாறு தான் பேசவே இல்லை என்று வாதிடுகிறார் எச். இராசா!
இதை எழுதும் இந்த நிமிடம் வரை, பெரியார் சிலையை அவமரியாதை செய்த செகதீசனை பா.ச.க. தனது கட்சியை விட்டு நீக்கி அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால், பா.ச.க. பெயர் பொறித்த அட்டையுடன் கைது செய்யப்பட்ட அவரை - தனது அமைப்பே இல்லை என்று வாதிடுகிறது பா.ச.க.! பா.ச.க. தப்பித்தவறி கூட உண்மையைப் பேச விரும்புவதில்லை! இதுதான் ஆரியத்தின் இரட்டை நாக்கு!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.