ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

விலங்காய் மாறுங்கள் - சிராப்பள்ளி தே. மாதேவன்

விலங்காய் மாறுங்கள் - சிராப்பள்ளி தே. மாதேவன் 

அன்புள்ள (??) மாந்தருக்கு, ஐந்தறிவு உயிர்கள் வரையும் மடல்.

நீங்கள் ஒவ்வொரு முறை தவறிழைக்கும் போதும் எங்கள் பெயர் அடிபடுகிறது. நிறுத்துங்கள். இனியேனும் எம் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். அதற்கு நீங்கள் தகுதியானவர்களல்ல.

எங்களுக்கு அறம் இருக்கிறது. அதன்வழியே பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த அறம் பற்றி எங்களுக்கு எப்போதும் ஐயம் ஏற்பட்டதில்லை. நீங்கள் அறத்தை அறிவோடு இணைத்துக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடையேயும் சிலர் எங்களை விரும்பி எழுத்துகளாகவும், காட்சிகளாகவும் ஆவணப் படுத்தியிருக்கிறார்கள்.

எங்களில் ஒரு புலி, நூற்றுக்கணக்கான மான்களைக் கொன்று மரப்பொந்துகளிலோ, குகைகளிலோ சேமித்து வைத்திருக்கிற காட்சி ஒன்றையேனும் நீங்கள் கண்டதுண்டா. பெண்ணின் விருப்பின்றிப் புணர்கிற ஒரு ஆண் நாயை நீங்கள் எங்கேனும் பார்த்ததுண்டா? வேறொரு பேடையைச் சிறுமைப்படுத்தும் ஆண் குருவியின் பேச்சை என்றேனும் நீங்கள் கேட்டிருக் கிறீர்களா?

எல்லாவற்றிற்குமே இல்லை என்றுதான் நீங்கள் விடையிறுப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் அறம் தவறுவதில்லை. நிலம் எனும் போது எங்களுக்கும் எல்லைகள் உண்டு. ஆனால், எங்களிடம் போர்ப் படைகளோ ஆயுதங்களோ இல்லை. இயற்கை என்ன வழங்கியிருக்கிறதோ அவ்வளவே எங்கள் வலிமை. நீங்களோ ஆயுதம் கொண்டு ஆயுதமில்லாதவனை அழிக்கிறீர்கள். கேட்டால் அறிவு, அறிவியல் என்று புழுகுகிறீர்கள்.

எங்களுக்கு ஆடை செய்யத் தெரியாது. ஆனால், நீங்கள் ஆடை அணிந்தபின்னும் பெண்களை அம்மணமாய் காண்கிறீர்கள். விருப்பமில்லாப் பெண்ணை துரத்துகிறீர்கள், துன்புறுத்துகிறீர்கள். கேட்டால் தடைச் சட்டம், தண்டனைச் சட்டம் இருக்கிறது என்று பிதற்றுகிறீர்கள். எங்களிடம் சட்டங்களில்லை. இயற்கையின் ஒற்றை விதியில் தான் நாங்கள் எல்லோரும் இயங்குகிறோம். நீங்களும் ஒரு காலத்தில் அதைத் தெரிந்து வைத்திருந்தீர்கள். இப்பொழுது?

உங்கள் தொல்காப்பியரிடம் கேளுங்கள். மருதத்தில் தான் "ஊடல்" என்கிறார். முல்லையிலும் குறிஞ்சியிலும் அது இல்லை. புரிகிறதா? மருதம் உங்கள் வளர்ச்சி நிலையில் பெரும்படி. கூர்ந்து நோக்குங்கள். உங்கள் அற நூல்கள் எல்லாமே மருதத்தில் பிறந்தவையே!

மருதத்தின் வயல்வெளிகளில், பாறைகளில் தான் உங்கள் மெய்யியல்களும் தோன்றின. ஆம், நீங்கள் வளர்ச்சியடைந்துவிட்டீர்கள். உங்கள் கணக்குப் படி நாங்கள் வளர்ச்சியடையாதவர்கள். ஆனால், எங்கள் கணக்குப் படி நீங்கள் வாழத் தெரியாதவர்கள்.

அதோ மேலே விண்ணில் பறக்கும் அந்தப் புறாவைப் பாருங்கள். உயர உயரச் சிறகசைத்து உணவுக்காகப் பறப்பதைப் பாருங்கள். அந்தப் புறாவுக்கு எப்பொழுது நினைத்தாலும் சிறகு மடக்கி இறங்க உரிமையுண்டு. உங்கள் வளர்ச்சிப் பாதையில் உங்களால் அப்படி சிறகு மடக்க முடியாது. மீறினால் வீழ்ந்து மடிவீர்கள். உற்றுப் பாருங்கள் சிறகுகள் உங்களுடைய தல்ல. யாருடைய சிறகையோ கட்டிக்கொண்டு எங்கு பறக்கிறோம், எதற்குப் பறக்கிறோம் என்று தெரியாமலேயே பறந்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களில் எவராவது தவறு செய்யும் போதெல்லாம் "விலங்குகளைப் போல்" என்று அவரைப் பழிக்கும் மூடர்களே, திருக்குறளும், நாலடியாரும், திரிகடுகமும் இன்னும் பிற அறநூல்கள் யாவும் அறம் தவறிய உங்களுக்காக உருவாக்கப்பட்டவையே அன்றி எங்களுக்கு அல்ல. நாங்கள் எங்களுக்கான அறம் தவறாமல் வாழ்பவர்கள்.

மண் உங்களுக்கு மட்டுமென்று எண்ண ஆரம்பித்து விட்டீர்கள். எங்கள் வாழ்விடங்களை அழிக்கிறீர்கள். அதற்குள் நாங்கள் வரும்போது காது கிழிய வெடி வெடித்து ஓசையெழுப்புகிறீர்கள். துவக்கால் சுடுகிறீர்கள். விரட்டுகிறீர்கள். நீங்கள் எங்கள் காடுகளுக்குச் சுற்றுலா வரும்போது நாங்களும் எங்கள் வலிமைகொண்டு உங்களைத் தாக்கட்டுமா? முடியாதென்று நினைத்து விடாதீர்கள். சிறு பூச்சியினங்கள் நினைத்தால் தின்று தீர்த்துவிடும் உங்கள் மனிதகுலத்தை.

இனிமேலேனும் உங்கள் தவறுகளுக்கு எடுத்துக் காட்டுகளென எங்களை இழுக்காதீர்கள். "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்று சொன்ன உங்கள் பாட்டனிடம் கேளுங்கள் எப்படி வாழ்வதென்று. "அன்புடைமை" "அருளுடைமை" எனச் சொன்ன உங்கள் பேராசான் குறள் வழி வாழப் பழகுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்பைக் கற்றுத்தராமல், நீங்கள் அன்போடு இருக்காமல் எப்படி அடுக்ககங்களிலும், பெருநகரங்களிலும் நீங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று எண்ணுகிறீர்கள். கிராமங்களுக்குள்ளே பாதியில் புகுந்த சாதியின் பிடிகளுக்குள் எப்படி "இசைபட வாழ்வீர்கள்"

அன்பு என்பது பேரங்காடிகளில் வாங்கிய வெளி நாட்டு இனிப்பில் இருப்பது போன்றதொரு தோற்றத்தை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியது நீங்கள் தான். அதோ அந்த தூக்கணாங் குருவியைப் பாருங்கள் அது இன்னும் மின்மினிப் பூச்சியைத் தான் தேடி அலைகிறது. குழல் விளக்குகளை அல்ல. நீங்கள் சிரித்துக் கொண்டே அன்பை பொருள்களுக்குள் அடைத்தீர்கள். பொருள் தேடி அடுத்தவர் சிறகுகளை அணிந்துகொண்டீர்கள்.

திடீரென்று ஒரு நாள் உங்கள் காமம், அன்பை விடுத்துப் பொருளை மாலையாகச் சூடிக்கொண்டபோது அதிர்ந்து போனீர்கள். காமத்தை அடக்கிவிட நீங்கள் என்ன "நீங்கள் படைத்தக் கடவுளா"? பொருள் படைத்தவர் காமம் மண்ணுக்குள் நீரென ஓடிக்கொண்டி ருக்கிறது. பொருளற்றவர் காமம் புயலென சூல் கொண்டது. அது சிறு செடிகளைக் கூட சாய்த்துக் கொண்டி ருக்கிறது.

இயற்கையில் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே இருக்கிறது. அதற்கு ஆண் தன்னை மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது. ஆண் மயில் ஆடுவதை அழகென்று பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டீர்கள். அது தன்னை மெய்ப்பித்ததை மறந்து போனீர்கள். வலிமையைக் காட்டாது ஒரு புலியால் தலைவனாக இருக்க முடியாது. நீங்கள் அப்படியா இருக்கிறீர்கள். ஒரு ஆணை, தகுதி அடிப்படையில் பெண் தேர்ந்தெடுத்து, இணை சேர்ந்து, அடுத்த தலைமுறை உயிர் வளர்ப்பதே எங்கள் வழக்கம். உங்களுக்கு நினைவுத்திறன் எங்களை விட அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதனால் நினைத்து நினைத்து உருகி காமத்தை நுகர்பொருள் ஆக்கிவிட்டீர்கள். அதற்காக, "அறுபது வயது தொட்டவர்கள் பன்னி ரெண்டு வயது சிறுமியையா" . . . உங்களுக்கே கூசுகிறதா? அப்படியானால் எங்களுக்கு?

ஏதேனும் புரிகிறதா? நம் இருவரிடமும் காமம் இருக்கிறது. ஆனால் எங்களிடம் வன்கொடுமை இல்லை. அறம் இயற்கையில் இருக்கிறது. அதனால் அது எங்களிடமும் இருக்கிறது. நீங்கள் பொருள் வைத்திருக்கிறீர்கள். எங்களிடம் அது இல்லை. நாங்கள் இயற்கையின் விதிப்படி காமத்தில் இயங்குகிறோம். நீங்கள் காமத்தை கனவு காண்கிறீர்கள். கருத்தடைக் கருவிகளை, கருவழிக்கும் மருந்துகளைக் கண்டுபிடித்தீர்கள். அதை அறிவியல், அறிவு என்று கொண்டாடினீர்கள். அந்தக் கருவிகளில் சிறைப்பட்டு, மருந்துகளில் கரைந்து போனது, இயற்கை உங்களுக்கு அள்ளி வழங்கிய அன்பு. அன்பின்றிச் செரிக்க முடியாக் காமம், தொண்டைக் குழியில் கக்கலெனக் கொப்பளிக்கிறது. அலறியடித்து ஓடுகிறீர்கள். ஓடும் இடமெல்லாம் அந்த உலும்பல் நாற்றம் உங்களைத் துரத்துகிறது. எங்கே போவீர்கள். காமம் இல்லாத உலகிற்கா? காமம் இல்லையெனில் அது உலகா? உங்கள் வள்ளுவரே "காமத்துப் பால்" சொன்னாரே. எனில் அதுவும் அறமே.

பொருளை, பணத்தை முன்னிறுத்தி வாழ்வின் சிறப்பை, அன்பை குழந்தைகளுக்குப் புரிய வைக்காதீர்கள். பிற்காலத்தில் பொருளிருக்கும் இடத்தில் கண்டிப்பாய் அன்பிருக்கும் என்று அந்தக் குழந்தை ஏமாந்து விடும். பொருளற்றவர்கள் எல்லோரும் அன்பானவர்கள் என்றும் புகட்டி விடாதீர்கள். அதுவும் பிழையே.

அன்பு என்பது அன்பு மட்டுமே. அது உங்களைச் சுற்றித் தழைக்காதவரை உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது. நீங்கள் "கிராமங்களில் தனித்தனியே சேர்ந்து வாழ்கிறீர்கள். நகரங்களில் சேர்ந்து தனித்தனியே வாழ்கிறீர்கள்". உங்கள் அடுக்ககங்கள் அன்பையும், அடுத்தவரோடு உறவாடுவதையும் கீழ்நிலையில் வைத்திருக்கிறது, அல்லது பொருளை, பணத்தை அளவு கோலாய் வைத்திருக்கிறது. அதில் வளரும் குழந்தைகள் அப்படியே வளர்கிறார்கள். முந்நூறு வீடுகள், ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட உங்கள் மனிதர்கள் அந்த அயனாவர அடுக்ககத்தில். ஆனாலும், ஏழு மாதங்களாக அந்தக் கொடுமை நடந்து வந்திருக்கிறது. உங்கள் நாகரிகம் உங்கள் சந்திகளிலேயே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. சேர்ந்து வாழாமல் நீங்களோ உங்கள் குழந்தைகளோ தவறுகளிலிருந்து தப்பிக்க முடியாது.

உங்கள் அற நூல்களை படித்து அதன் படி வாழப்பழகுங்கள். அதெல்லாம் பழங்கதை என்று நீங்கள் சொல்வீர்களானால் இரவுகளில் தலையணைகளில் முகம் புதைத்து அழுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், உங்கள் குழந்தைகளோ பாவம், யாருமறியாமல் அழுவது கூட எப்படியென்று தெரியாமல் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். உங்கள் ஈரமான தலையணை அந்தப் புழுக்கத்தின் வெப்பத்தில் காய்ந்துவிடும்.

சரி. அதை விடுங்கள். நாங்கள் அறத்தை அழித்து விட்டு அழுததில்லை. எனவே இனி உங்கள் தவறுகளுக்கு எங்களை எடுத்துக்காட்டாய் சொல்லாதீர்கள். முடிந்தால் இனிமேலாவது விலங்காக மாற முயற்சி செய்யுங்கள்.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 ஏப்ரல் மாத இதழ்)


கண்ணோட்டம் இணைய இதழ்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.