சூழலியல் நெருக்கடி நிலை ! கி. வெங்கட்ராமன் கட்டுரை.
சூழலியல் நெருக்கடி நிலை !
தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
“மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த இயற்கை அமைப்பே நிலைகுலைந்து வருகிறது. மாபெரும் உயிர்மப் பேரழிவின் தொடக்கத்தில் நாம் நிற்கிறோம். ஆனால், நீங்களெல்லாம் பணத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். தடையில்லாத பொருளியல் வளர்ச்சி குறித்து கற்பனைக் கதைகளை அள்ளி விடுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்?”
நியூயார்க்கில் கடந்த 2019 செப்டம்பர் 23 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை செயல்பாட்டு உச்சி மாநாட்டில் ஸ்வீடன் நாட்டின் சிறுமி கிரேட்டா துன்பெர்க் ஆற்றிய அறச்சீற்ற சொற்கள் இவை!
2015 பாரீசு பருவநிலை ஒப்பந்தத்திற்குப் பிறகு அதன் மீதான செயல்பாடுகளை விரைவுபடுத்த நடைபெற்ற இந்த உலகநாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டை ஒட்டி, வரலாறு காணாத அளவில் ஏறத்தாழ 150 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இலட்சக்கணக்கான இளையோர் கூடி, புவிவெப்பமாதலைத் தடுக்க நாட்டுத் தலைவர்களும், பெருங்குழுமங்களும் உடனடியாக செயல்பட வேண்டுமென வலியுறுத்தி பேரணிகள் நடைபெற்றன. மாநாடு நடைபெற்ற நியூயார்க்கில் வரலாறு காணாத பேரணியும் நடந்தது.
இவ்வளவு அழுத்தங்கள் இருந்தபோதும், பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ள புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய நாடுகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருப்பதையே உச்சி மாநாட்டின் நிகழ்வுகள் எடுத்துக் காட்டின.
பாரீசு பருவநிலை மாநாட்டில் 195 நாடுகள் பங்கேற்ற போதிலும், அதன் மீதான செயல்திட்டங்களை உறுதிப்படுத்தும் உச்சி மாநாட்டில் 70 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. புவிவெப்பமடைவதற்கு காரணமான கர்பன் டை ஆக்சைடு – மீத்தேன் ஆகியவற்றை வெளியிடுவதில் முதன்மைப் பங்கு வகிக்கும் அமெரிக்க வல்லரசு அதிலும் பங்கேற்கவில்லை. ஆனால், மாநாடு நடந்து கொண்டிருந்தபோது வட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் பார்வைாளராக சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
கரி உமிழும் முதல் வரிசை நாடுகளான சீனாவும், இந்தியாவும் இதில் பங்கேற்றாலும் கருதத்தக்க உறுதிப்பாடு எதையும் வெளிப்படுத்தவில்லை.
ஏற்கெனவே தாங்கள் உறுதி அளித்தவாறு பசுமை மாற்று எரிசக்திகளுக்கு கூடுதல் திட்டங்கள் வகுத்து வருவதாகக் கூறிய சீனா, தாங்கள் அதற்கு மேல் செயல்பட முடியாததற்கு பாரீசு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதை காரணமாகக் கூறியது.
இந்தியத் தலைமையமைச்சர் மோடி, கதிரவன் மின்சாரம் உள்ளிட்ட மாற்று எரி ஆற்றல் மின்சார உற்பத்தியை இப்போதுள்ள 175 ஜிகா வாட்டிலிருந்து 2022-க்குள் 450 ஜிகா வாட்டாக உயர்த்தப்போவதாக அறிவித்தார். ஆனால், நிலக்கரி, மீத்தேன் பெட்ரோலியப் பயன்பாடுகள் குறைப்பது பற்றி ஒரு சொல்கூட பேசவில்லை.
ஆயினும், 65 நாடுகள் மற்றும் கலிபோர்னியா போன்ற முக்கியமான மாகாண அரசுகள் 2050க்குள் பசுமைக்குடில் வளிகள் உமிழ்வதை முற்றிலும் நிறுத்துவதாக உறுதியளித்தன.
பிரான்சு குடியரசுத் தலைவர் மக்ரான் பாரீசு ஒப்பந்தத்திற்கு இசையாத நாடுகளுடன் பிரான்சு எந்த தொழில் – வர்த்தக ஒப்பந்தமும் இனி செய்யாது என்று அறிவித்தார். மற்றபடி தன்னுடைய நாடு என்ன செயல்பாட்டை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்து, திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.
செர்மனி, இத்தாலி, போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் 2020-லிருந்து புதிய நிலக்கரிச் சுரங்கங்களை தங்கள் நாடுகளில் திறப்பதில்லை எனவும், இருப்பதையும் 2050-க்குள் மூடி விடுவதாகவும் அறிவித்தன.
பாரீசு பருவநிலை ஒப்பந்தத்தில், இதுவரை கையெழுத்திடாத இரசியா கையொப்பமிட இப்போது ஒப்புக் கொண்டது. சிறிய நாடுகளில் கரிம வளியை நிறுத்தும் நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதியை வழங்குவதற்கு பிரிட்டன், செர்மனி, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் உறுதி கொடுத்தன.
ஆயினும் இதுவரை இல்லாத அளவுக்கு 100 பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் பாரீசு ஒப்பந்தத்திற்கு இசைய, தங்கள் உற்பத்தித் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்வதாக உறுதி கூறின. இவற்றுள் 87 பெருங்குழுமங்கள் புவிவெப்பமலை 1.5 செல்சியசுக்கு மிகாமல் இருப்பதற்குத் தங்கள் பங்களிப்பை உறுதி கூறின.
அதுபோல், உலகின் பெரிய வங்கிகளாக அறியப்பட்ட 130 வங்கிகள் பாரீசு பருவநிலை ஒப்பந்தத்திற்கு முரணாகச் செயல்படும் திட்டங்களுக்கு நிதி வழங்குவதை 2030-க்குள் முற்றிலும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தன.
மக்கள் போராட்டங்களின் அழுத்தங்கள் முற்றிலும் பயணற்றுப் போய் விடவில்லை. இந்த உச்ச மாநாடு தொடங்குவதற்கு முன்னால் 23 நாடுகள் மட்டுமே செயல்திட்டங்களுக்கு உறுதியளித்திருந்தன. ஆனால், இம்மாநாட்டு அரங்கில் 70 நாடுகள் பங்கேற்று, செயல் திட்டங்களுக்கு உறுதி கூறியிருக்கின்றன.
ஐ.நா. தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டிரஸ் தனது நிறைவுரையில் கூறியதுபோல, இந்த ஆண்டு இறுதியில் திசம்பரில் சில்லி நாட்டின் சான்டியோகோ நகரில் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் கருதத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பலாம்.
ஆயினும், “சந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்ற கொள்கை வழியிலிருந்தும், “வளர்ச்சி” வாதத்திலிருந்தும் மீளாமல் பருவநிலை சிக்கலுக்கு முற்றிலும் விடை கண்டு விட முடியாது.
இருந்தபோதிலும், இருக்கின்ற அரசியல் – பொருளியல் கட்டமைப்பிற்குள்ளேயே மாற்றங்கள் கொண்டு வர தொடர் அழுத்தங்களால் முடியும்!
இத்தொடர் முயற்சியின் முதல் நடவடிக்கையாக கிரேட்டா துன்பெர்க்கும், இந்தியாவைச் சேர்ந்த ரீமா பாண்டே உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட 15 சிறார்களும் - “ஐ.நா. குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் இந்த உச்சி மாநாட்டில் நடைபெற்றவை உலக நாடுகளின் குழந்தைகள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவாது. எனவே, ஐ.நா. தங்களது மனுவை குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்ற புகாராக எடுத்துக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தி ஒவ்வொரு நாட்டுக் குழந்தைகளும் புவிவெப்பமடைவதால் எந்தந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மனு அளித்திருக்கிறார்கள்.
வரும் திசம்பரிலும், அதற்கு முன்பும் “பருவநிலை நெருக்கடி” (Climate Emergency) அறிவிக்க வலியுறுத்தி, உலகெங்கிலும் தொடர் மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்!
வரும் திசம்பரிலும், அதற்கு முன்பும் “பருவநிலை நெருக்கடி” (Climate Emergency) அறிவிக்க வலியுறுத்தி, உலகெங்கிலும் தொடர் மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்!
பெருந்திரள் மக்கள் அழுத்தமில்லாமல், உலக நாடுகள் தாமே செயல்படாது!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment