ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்தியதேச வரலாறு இல்லை! இந்திய தேசங்களின் வரலாறே இருக்கிறது! பெ. மணியரசன் கண்டனம்!


இந்தியதேச வரலாறு இல்லை!
இந்திய தேசங்களின் வரலாறே இருக்கிறது!

அரசமைப்புக்கு எதிரான அமித்சாவின்
‘புதிய வரலாறு’ பேச்சுக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் 17.10.2019 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா, “இந்திய வரலாற்றை ஆங்கிலேயர்கள் பார்வையில் எழுதியிருக்கிறார்கள். அதை இந்தியப் பார்வையில் திருத்தி எழுத வேண்டும்” என்றும், “அவ்வாறு நாம் திருத்தி எழுதுவதற்கு யாரும் தடை போட முடியாது” என்றும் பேசியுள்ளார்.

எத்தனையோ சட்டங்களை நீக்கியும் மாற்றியும் எதேச்சதிகாரம் செய்து கொண்டிருக்கும் பா.ச.க. ஆட்சியாளர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தையே முழுமையாக மாற்றி எழுதத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்திய வரலாற்றை திருத்தி எழுத முன்மொழிந்துள்ளார் அமித்சா.
திருத்தி எழுதப்படும் இந்திய வரலாற்றின் “ஞானகுரு”வாக விநாயக தாமோதர சாவர்க்கரை அடையாளம் காட்டியுள்ளார் அமித்சா. சாவர்க்கர்தான் 1923இல் முதன் முதலாக “இந்துத்துவா” என்ற சொல்லைக் கட்டமைத்து, இன்றைய ஆரிய பிராமணிய வகுப்புவாத அரசியலுக்கு வழிகாட்டியவர்.

மேலும் அமித்சா, இந்திய வரலாற்றில் வாழ்ந்த சிறப்புமிக்க மன்னர்களின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது சாணக்கியரை வழிகாட்டி ஆசானாகக் கொண்டு அமைக்கப்பட்ட மௌரியப் பேரரசு, புரோகிதர்களின் பொற்காலமாக விளங்கிய குப்தர்கள் ஆட்சி, தமிழ்நாட்டின் மீது படையெடுத்துப் பிடித்து ஆட்சி செய்த தெலுங்கு கன்னட விஜயநகரத் தளபதிகளின் ஆட்சி, பிராமண குருவின் உபதேசப்படி செயல்பட்ட மராட்டிய சிவாஜி ஆட்சி ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் தமிழர்களின் சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சி பற்றி குறிப்பிடவில்லை. ஏன்? இமயத்தில் கொடியேற்றி வாழ்ந்தவர்கள் என்பதற்காக அவர்களை சேர்க்கவில்லையா? ஆரியத்துவாவின் அடிமைகளாக இல்லாமல் தமிழர்களின் அறிவு, வீரம், அறம் ஆகியவற்றோடு ஆட்சி செய்தார்கள் என்பதற்காக சேர்த்துக் கொள்ளவில்லையா?

கடந்த 2014இல் தமிழ்ப் பேரரசன் இராசேந்திரசோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவை மோடி அரசு கொண்டாடி உலகத்திலேயே மிகப்பெரிய கடற்படையை வைத்திருந்தவன் இராசேந்திர சோழன் என்று பாராட்டியது. அதெல்லாம் அவ்வப்போது அவர்களின் திட்டத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் தற்காலிகச் சொற்களா?

இந்தியா முழுவதையும் ஒரே தேசம் – ஒரே மதம் – ஒரே பண்பாடு - ஆனால் இரண்டு மொழி (இந்தி – சமற்கிருதம்) என்று மாற்றியமைத்திட செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. பரிவாரங்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனித்தாயக ஆட்சியையும், வளர்ச்சி பெற்ற பல தாய்மொழிகளையும், பண்பாடுகளையும் இனங்களுக்கிடையே இருக்க வேண்டிய சமத்துவத்தையும் கொண்டுள்ள பல்வேறு தேசிய இனங்களைத் தகர்த்துத் தரைமட்டமாக்கி - ஒற்றை ஆரிய தேசத்தை உருவாக்க எல்லா முனையிலும் செயல்படுகின்றன.

இந்த வெறிச்செயலில் பல்வேறு தேசிய இனங்களின் எஞ்சியிருக்கும் உயிரையும் பறிக்கும் வேலைதான் சாவர்க்கர் காட்டிய வழியின்படி ஒற்றை முகம் கொண்ட இந்திய வரலாற்றை வடிவமைக்கும் திட்டம்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வின் இந்த “புதிய வரலாறு” எழுதும் திட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால், கண்டனம் செய்தால் மட்டும் போதாது! சமூக அறிவியல்படியான இந்தியாவின் உண்மை வரலாற்றை ஒவ்வொரு தேசிய இனத்தவரும் வெளிப்படையாகப் பேச வேண்டும். இந்தியா என்ற சொல்லும், நிர்வாகக் கட்டமைப்பும் பிரித்தானிய பீரங்கிகளால் உருவாக்கப்பட்டவை. இன்றைய வடிவில் இந்தியா என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாடு இருந்ததே இல்லை! இந்தியத்தேச வரலாறு என்று எதுவுமில்லை. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தேசங்களின் வரலாறுதான் இருக்கிறது என்பதை ஓங்கிச் சொல்வதுடன், அந்தந்த தேசிய இனமும் தனது சரியான புதிய இன வரலாற்றை எழுத வேண்டும்!

இந்தியாவின் பன்மையைக் குறிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை “அரசுகளின் ஒன்றியம்” எனக் குறிப்பிடுகிறது; இந்தியாவை தேசம் (Nation) என்று கூறவில்லை. அரசமைப்புச் சட்டத்தையே முற்றிலும் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள பா.ச.க ஆட்சியாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைளைத் தடுக்க - இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களும், சனநாயக ஆற்றல்களும் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.