ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

துக்ளக் விழாவா? சனநாயகத்தைத் தூக்கிலிடும் விழாவா? பெ. மணியரசன் அறிக்கை!


துக்ளக் விழாவா? சனநாயகத்தைத்
தூக்கிலிடும் விழாவா?

ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

ஆர்.எஸ்.எஸ். சார்பு ஏடான “துக்ளக்”கின் ஐம்பதாம் ஆண்டு விழா 14.1.2020 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

ஆரிய அதிகார பீடத்தின் ஆணவக் குரலாக, தமிழ்நாட்டில் துக்ளக் இதழ் வந்து கொண்டுள்ளது.

இவ்விழாவில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் காணொலி உரை காட்டப்பட்டது. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயடு, நடிகர் இரசினிகாந்த் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழ்நாட்டு அரசியலுக்கான ஆர்.எஸ்.எஸ். வேலைத் திட்டத்தை முன்வைத்தார்.

மக்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் நாட்டை முன்னோக்கி இழுத்துச் செல்வோராகச் செயல்பட வேண்டும் என்றார் மோடி! இதன் பொருள், பா.ச.க. அரசின் எதேச்சாதிகார – வர்ணாசிரமவாதச் சட்டங்களை மற்ற கட்சிகளும் மக்களும் எதிர்த்தால் அவர்களை எதிர்த்து வீதிக்கு வந்து அவர்களை முறியடிக்க வேண்டும் என்பதாகும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம். தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து சனநாயக வழியில் போராடும் மாணவர்கள், மக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்துகிறது பா.ச.க. அவர்களின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துகிறது.

காசுமீர் உரிமைப் பறிப்பு, முத்தலாக் தடைச் சட்டம், மாநில அரசுகள் வணிக வரி விதிக்கும் உரிமைப் பறிப்பு (ஜி.எஸ்.டி.), ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதியில் கைவைத்து மேல்சாதியினர்க்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளைத் தனது அரசின் “சாதனை”களாக அந்தக் காணொலியில் மோடி முழங்கியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த இத்தனை உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்துவிட்டதைச் “சாதனை”களாகக் கூறிய மோடி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் மக்களுக்குத் தலைவணங்குகிறேன் என்று அதே காணொலியில் கூறியுள்ளார். இதன் பொருள் என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோதே, நடுவண் அரசில் மிகையான அதிகாரக் குவிப்புகள் வைத்து, ஒற்றை ஆட்சித் தன்மை மேலோங்கியுள்ள கூட்டாட்சியாக அமைத்தார்கள் என்று உலக அரசமைப்புச் சட்டங்களை அலசி ஆராய்ந்த பேராசிரியர் கே.சி. வியர் கூறினார்.

கொஞ்ச நஞ்சமிருந்த மாநில அதிகாரங்களையும் அன்றாடம் பறித்து வருகிறது மோகன் பகவத் – மோடி ஆட்சி! திரௌபதியின் சேலையை உரிந்த துச்சாதனன் போல், சனநாயக உரிமைகளையும் மாநில உரிமைகளையும் அன்றாடம் பறித்து வருகிறது பா.ச.க. ஆட்சி!

அவர்களால் அம்மணமாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைப் பாராட்டி ஆராதிக்கும் பக்தர்களாக இந்திய நாட்டு மக்கள் மாற வேண்டும் என்பது மோடியின் எதிர்பார்ப்பு. அதனை சூசகமாகச் சொல்லத்தான் மேற்கண்ட துகிலுரியும் காட்சிகளை வர்ணித்துளளார் மோடி!

இனியும் துகிலுரியப்படும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உச்சி மோந்து உயர்த்திப் பிடிக்கும் மக்களுக்குத் தலைவணங்குவதாக மோடி கூறியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் “தலைவணங்கும்” தத்துவத்தில், அரசமைப்புச் சட்டத்தில் மிச்சம் மீதியுள்ள மக்கள் உரிமைகள், மாநில உரிமைகள், தேர்தல் சனநாயகம் போன்றவற்றைக் காலி செய்யும் உத்தி அடங்கி இருக்கிறது.

நடிகர் இரசினிகாந்தும், துணிச்சல் பெற்று, தி.மு.க.வையும் காங்கிரசையும் தாக்கிப் பேசியுள்ளார். கையில் “முரசொலி” வைத்திருப்பவர் தி.மு.க.காரர்; ”துக்ளக்” வைத்திருப்பவர் அறிவாளி என்று வர்ணாசிரம பாணியில் தரப் பிரிப்பு செய்துள்ளார்.

துக்ளக் ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி தமிழ்நாட்டில் பா.ச.க.வும் காங்கிரசும் மட்டும்தான் இருக்க வேண்டும். காங்கிரசுக் கட்சியோ இப்போது தி.மு.க. போலவே மாறிவிட்டது. அதனால் தமிழ்நாட்டில் மாற்று அரசைக் கொண்டு வருவதற்கான ஒரே கட்சி பா.ச.க. மட்டுமே என்று பேசியுள்ளார்.

பிறப்பு அடிப்படையில் – மேல், கீழ் பேசும் வர்ணாசிரம – சனாதனத்தைத் தனது தத்துவமாகக் கொண்டுள்ள துக்ளக் ஏட்டின் ஆசிரியர் குருமூர்த்தி, தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மரபணு (DNA) பாரததேசத்திற்கு எதிரானது என்றும், அப் பல்கலைக்கழகத்தை மூடிவிடலாம் என்றும் அவ்விழாவில் பேசியுள்ளார்.

வார இதழ் ஒன்றின் பொன்விழாவாகவா அந்நிகழ்வு நடந்துள்ளது? ஒட்டுமொத்த இந்தியாவின் சனநாயக உரிமைகளைப் பறிக்கும் உள்நோக்கத்துடன் தலைமை அமைச்சரின் காணொலி உரை, இரசினிகாந்தின் வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ். பாணி உரை, தமிழ்நாட்டில் பா.ச.க. ஆட்சிக்கும், சவகர்லால் நேரு பல்கலைக்கழக மூடலுக்கும் ஆன குருமூர்த்தியின் உரை ஆகிய ஆரியத்துவா திட்டங்களின் பரப்புரை மாநாடாக அவ்விழா நடந்துள்ளது.

இந்த ஆரியத்துவா வேலைத் திட்டங்கள் அரங்கேற வழிவிடப் போகிறோமா? அவற்றை வழி மறிக்கப் போகிறோமா? இந்த வினாவை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் கேட்டுக் கொண்டு விடை சொல்லுங்கள்; விழிப்புணர்வு கொள்ளுங்கள்; ஒல்லும் வகையில் எல்லாம் செயல்படுங்கள்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.