ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கொரோனாவிலும் தில்லியின் இன ஒதுக்கல் அரசியல்! சென்னையில் இன இரண்டக அரசியல்! பெ. மணியரசன்.


கொரோனாவிலும் தில்லியின் இன ஒதுக்கல்

அரசியல்! சென்னையில் இன இரண்டக அரசியல்!



ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


கூரைக்குக் கீழே மனித வாழ்க்கை குறுகிக் கிடக்கும் கொரோனாக் கொடூர காலத்திலும் வழக்கம்போல் அ.தி.மு.க. – தி.மு.க. வாய்மோதல் இலாவணி அரசியல் நடத்துவது வேதனை தருகிறது.

எல்லா வகையிலும் தமிழ்நாட்டைக் காலி செய்து கொண்டிருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் கொரோனாக் காலத்திலும் இனப்பாகுபாட்டுடன் தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டின் கண்டனமும் இப்போது தில்லியின் பக்கமல்லவா திரும்ப வேண்டும்!

எசமானரின் வாயசைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அ.தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எதிர்க்கட்சியான தி.மு.க.வோ, இக்கட்டில் மாட்டிக் கொண்டதா ஆளுங்கட்சி என்று எள்ளி மகிழ்கிறது!

தமிழ்நாட்டில் கொரோனா பரவும் வேகமோ மக்களைக் குலை நடுங்கச் செய்கிறது. நேற்று (12.04.2020) ஒரு நாளில் மட்டும், தமிழ்நாட்டில் புதிதாக 106 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். வீட்டுக் கண்காணிப்பில் மட்டும் தமிழ்நாட்டில் 39 ஆயிரம் பேர் இருக்கிறார்களாம்.

ஒருவருக்கு வந்திருக்கும் நோய் கொரோனோவா இல்லையா என்று கண்டறிய இப்போது 14 நாட்களுக்கு மேல் ஆகிறது. அதற்கான ஆய்வகங்களும் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன. அரை மணி நேரத்தில் கொரோனாவைக் கண்டறியும் கருவியை சீனா உற்பத்தி செய்வதாக அறிந்து, தமிழ்நாடு அரசு 4 இலட்சம் மிகு விரைவு சோதனைக் கருவிகள் (Rapid Testing Kits) சீனாவில் விலைக்கு வாங்கக் கொள்முதல் ஆணை (Order) கொடுத்துள்ளது.

இந்த சோதனைக் கருவி மட்டுமின்றி, வெண்டிலேட்டர் உள்ளிட்ட எந்த மருத்துவக் கருவிகளையும் மாநில அரசுகள் நேரடியாக வெளிநாடுகளிலிருந்து வாங்க அனுமதி இல்லை என்று நரேந்திர மோடி அரசின் பொதுநலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தாக்கீது அனுப்பிவிட்டது.

தமிழ்நாட்டிற்கு சீனாவிலிருந்து வந்து கொண்டுள்ள மிகு விரைவு சோதனைக் கருவிகளை இந்திய அரசு எடுத்துக் கொள்ளும் என்றும், அது எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் என்றும் கூறப்படுகிறது. நேரடியாக இப்படிச் சொல்லாவிட்டாலும் இதைத் தமிழ்நாடு அரசின் பொது நலத்துறையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் சொன்னதாக இந்து ஆங்கில நாளிதழ் நேற்று (12.04.2020) செய்தி வெளியிட்டிருந்தது.

“மிகு விரைவு சோதனைக் கருவிகள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.. மிகு விரைவுக் கருவிகள் எங்களுக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது… தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamilnadu Medical Services Corporation) 4 இலட்சம் மிகு விரைவு சோதனைக் கருவிகள் வாங்கிட கேட்பாணைகள் (Orders) கொடுத்துள்ளது”.

பெயர் குறிப்பிடாத தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 11.04.2020 அன்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் காணொலிக் கருத்தரங்கில் பேசிய போது, “மிகு விரைவு சோதனைக் கருவிகளை விரைவாகத் தருவிக்க (Provide) ஏற்பாடு செய்யுமாறு” வேண்டுகோள் விடுத்ததாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பே கூறுகிறது. (The Hindu, 12.04.2020).

சீனாவிலிருந்து தமிழ்நாடு அரசு தருவித்த மிகுவிரைவு சோதனைக் கருவிகள் தமிழ்நாட்டிற்குக் கிடைக்காமல் தடுத்தது அரசமைப்புச் சட்டப்படியும் தவறு, மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசர அறத்தின்படியும் தவறு என்பதை சுட்டிக்காட்டி, அக்கருவிகள் உடனடியாக தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வெளிப்படையாக ஏன் அறிக்கை வெளியிடக் கூடாது?

அவ்வாறு சீனாவிடம் தமிழ்நாடு அரசு அக்கருவிகளை வாங்க கேட்பாணை கொடுக்கவில்லை, இந்திய அரசும் தடுக்கவில்லை என்றால், அதையாவது தமிழ்நாடு முதல்வர் தெளிவுபடுத்தலாம். இதுபற்றிய விவாதம் சமூக வலைத்தளங்களில் அல்லோலகல்லோலப்படுகிறது. சீனாவிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மிகு விரைவு சோதனைக் கருவிகளை இந்திய அரசு தடுக்கிறது என்று நான் கொடுத்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது. #IndiaBetraysTamils என தமிழ்நாட்டு இளையோர் அதை தன்னெழுச்சியாக டிரெண்டிங் செய்துள்ளனர்.

எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த மிகு விரைவு சோதனைக் கருவிகள் வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமாக ஏன் பேசவில்லை? ஏதோ மர்மம் நடப்பதாக சொல்லி ஒதுங்கிக் கொள்வது ஏன்? கொரோனா மருத்துவத்திற்குத் தேவைப்படும் மருத்துவக் கருவிகள், N95 முகக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள் முதலியவற்றை மாநில அரசுகள் நேரடியாகக் கொள்முதல் செய்யக்கூடாது; நடுவணரசின் பொதுநலத்துறை கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் என்று இந்திய அரசின் பொதுநலத்துறை 02.04.2020 நாளிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அச்சுற்றறிக்கையை மு.க. ஸ்டாலின் ஏன் எதிர்க்கவில்லை?

நிதி அளிப்பதில் இனப்பாகுபாடு
-------------------------------------------------
கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் தேசியப் பேரிடர் நிதியிலிருந்து தருமாறு மோடி அரசை தமிழ்நாடு முதல்வர் கேட்டார். மோடி அரசு கொடுத்தது 870 கோடி ரூபாய் மட்டுமே!

இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் மராட்டியம்; இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு! மராட்டியத்திற்கு 1650 கோடி ரூபாய் தரும்போது, தமிழ்நாட்டிற்கு 1200 கோடி ரூபாயாவது தந்திருக்க வேண்டாமா? வெறும் 870 கோடிதான் கொடுத்திருக்கிறது மோடி அரசு. தமிழ்நாட்டின் அளவிற்குக் கொரோனா பாதிப்பில்லாத உ.பி.க்கு 966 கோடி ரூபாய்! மத்தியப் பிரதேசத்திற்கு 910 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது இதே மோடி அரசு!

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது, மிக மிகக் குறைந்த அளவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உ.பி., ம.பி., பீகார் மாநிலங்களுக்குத் தமிழ்நாட்டை விட மிகக் கூடுதலாக நிதி அளித்தது ஏன்? இதுதான் பா.ச.க. – ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தமிழர்களுக்கு எதிராகக் கடைபிடிக்கும் இன ஒதுக்கல் கொள்கை! தமிழர்கள் உயிர் அவ்வளவு மலிவானது!

மராட்டியத்திற்கு அடுத்த நிலையில், இந்திய அரசுக்கு வரிகள் மூலமும், தொழிற்சாலைகள் மூலமும் அதிக வருமானம் தருவது தமிழ்நாடு! கொரோனா நிதி தருவதில் மோடி அரசு இனப்பாகுபாடு காட்டுகிறது என்று சொல்லி இடித்துரைக்கும் கொள்கையும் துணிச்சலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இல்லை! இந்த அநீதியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போர்க்குரல் எழுப்பியிருக்க வேண்டாமா? தமது அறிக்கையில் போகிற போக்கில் குறைவான தொகை என சுட்டிக் காட்டுகிறார்.

ஜி.எஸ்.டி. வரியில் இந்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பாக்கித் தொகை 12,200 கோடி ரூபாய்! அறவிக்கப்பட்ட மானியங்களில் தர வேண்டிய பாக்கித் தொகை சற்றொப்ப 10 ஆயிரம் கோடி ரூபாய்! வெள்ளைக்காரனின் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழ்நாட்டிலிருந்து அள்ளிக் கொண்டு போனதை விட பல நூறு மடங்கு கூடுதலாக நிதியை அள்ளிக் கொண்டு போகிறது புதுதில்லி! ஆனால் சட்டப்படி தர வேண்டிய தொகைகளைக் கூடத் தராமல் கிள்ளிப் போடுகிறது. கெஞ்சுவதைக் கூட வெளிப்படையாகக் கெஞ்ச அஞ்சுகிறது அ.தி.மு.க. அரசு. தமிழர்களுக்கு வந்துள்ள இந்த இழப்புகளையும், நெருக்கடிகளையும் ஆளுங்கட்சிக்கு வந்த நெருக்கடிகளாகக் கருதி இரசிக்கிறது எதிர்க்கட்சியான தி.மு.க.!

மோடியுடன் காணொலியில் கலந்துரையாடிய போது, ஓர் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் எடப்பாடியார். பேரிடர் இழப்பீடு நிதி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு 120.33 விழுக்காடு உயர்த்தியுள்ளீர்கள்; தமிழ்நாட்டிற்கு 64.65 விழுக்காடு மட்டுமே உயர்த்தியுள்ளீர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்!

தமிழர்களே, இப்பொழுதாவது புரிகிறதா? இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் (Apparthied) கொள்கையைக் கடைபிடிக்கிறது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பி வருகிறதே, அது உண்மைதான் என்பதைத் தமிழர்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்!

இந்தப் பாகுபாட்டை எடுத்துச் சொன்ன முதல்வர் பழனிச்சாமி, தமிழ்நாட்டிற்குரிய பங்கு நிதியைக் கொடுங்கள் என்று ஓங்கிக் குரல் கொடுத்தாரா? இல்லை! கூடுதலாகக் கடன் வாங்குவதற்கு மோடியிடம் அனுமதி கோரினார்! மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டுத் தொகையில் (ஜி.டி.பி.) 3 விழுக்காடு பற்றாக்குறை வரும் அளவிற்கு மட்டுமே திட்டங்கள் தீட்ட வேண்டும் என்ற வரம்பை 4.5 விழுக்காடு வரை பற்றாக்குறை விழுவதை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

இதன் பொருள் என்ன? இப்பொழுது மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பைத் தாண்டி 4.5% பற்றாக்குறை வரும் அளவிற்குக் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்!

இப்பொழுதே தமிழ்நாடு அரசுக்கு 5 இலட்சம் கோடி அளவிற்குக் கடன் உள்ளது. இன்னும் அது அதிகரிக்க வேண்டுமாம்! தமிழர்களின் பொருளாதார நிலை என்னாவது?

இந்திய அரசே, நீ தமிழ்நாட்டின் உரிமைகளை எவ்வளவுப் பறித்துக் கொண்டாலும், தமிழ்நாட்டு நிதி வளத்தை எவ்வளவு சூறையாடிக் கொண்டாலும், உன்னை எதிர்த்துப் போர்க்குரல் கொடுக்க மாட்டோம்; எவ்வளவு அதிகாரத்தைக் குறைத்துக் கொண்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் பதவி எங்களுககு வேண்டும் – இது எங்கள் ஒரே இலட்சியம் என்ற அளவில்தான் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் செயல்படுகின்றன.

தமிழின உணர்வாளர்களே, அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளின் இன இரண்டகத் தன்னல அரசியலை அடையாளம் காண வேண்டியது தேவை! ஆனால், அது மட்டுமே நம் வேலையல்ல; நம் வாரிசுகள் பிச்சை ஓடு ஏந்தாமல், தாயகம் இழந்து ஏதிலிகளாய் அலையாமல் தடுக்க வேண்டுமானால், இலட்சியத் தமிழ்த்தேசியத்தைப் பெரும்பாலான தமிழர்கள் ஏற்கும்படிச் செய்ய வேண்டும்! அது மட்டுமல்ல, 24 மணி நேரமும் விழிப்போடிருந்து கொரோனாக் கொடூரத்திலிருந்து விடுபட அரசு செய்ய வேண்டிய பணிகளைச் செய்யுமாறு குரல் கொடுக்க வேண்டும். அழுத்தம் தர வேண்டும். நம் மக்களைக் காக்க வேண்டும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.