ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சாதிவெறிக் கொலைக்குத் தனிச்சட்டம் தேவை சங்கர் கொலை வழக்கு தரும் பாடம்! பெ. மணியரசன்.



சாதிவெறிக் கொலைக்குத் தனிச்சட்டம் தேவை
சங்கர் கொலை வழக்கு தரும் பாடம்!


ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

உடுமலை சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 22.06.2020 அன்று அளித்த தீர்ப்பு பல்வேறு வினாக்களை எழுப்புகிறது.

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கௌசல்யாவும் கல்லூரிப் படிப்பின்போது காதலித்துப் பின்னர் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சாதிவெறி காரணமாக கௌசல்யா பெற்றோர் தரப்பினர், 13.03.2016 அன்று சங்கரைப் பட்டப்பகலில் உடுமலைப்பேட்டைக் கடைத் தெருவில் படுகொலை செய்தனர். கௌசல்யா படுகாயங்களுடன் பிழைத்துக் கொண்டார்.

காவல்துறை குற்றச்சதி, கொலை, படுகாயப்படுத்தல் முதலிய பிரிவுகளில் வழக்குப் போட்டது. கௌசல்யா தந்தையார், தாயார், மாமா ஆகியோர் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டியது. திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 12.12.2017 அன்று அளித்த தீர்ப்பில், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னகுமார் ஆகியோரை குற்றம் மெய்ப்பிக்கப்படவில்லை என்று விடுதலை செய்தது. கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனையும், ஸ்டீபன் தன்ராசுக்கு இரட்டை வாழ்நாள் தண்டனையும், மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டோரும், காவல்துறையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். குற்றஞ்சாட்டப்பட்டோர் விடுதலை கோரினர். காவல்துறையோ, அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட கௌசல்யாவின் தாயார் அன்னட்சுமி உட்பட மூவருக்கும் சாவுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரியது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு 22.06.2020 அன்று அளித்த தீர்ப்பில், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோரைக் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை உறுதி செய்து, காவல்துறையின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது. அத்துடன் கீழமை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை பெற்ற கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமியின் மீதான குற்றச்சாட்டும் மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரையும் விடுதலை செய்தது.

மேலும், ஸ்டீபன் தன்ராசுக்குக் கொடுக்கப்பட்டிருந்த இரட்டை வாழ்நாள் தண்டனையும், மணிகண்டனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த 5 ஆண்டுத் தண்டனையையும் இரத்துச் செய்தது உயர் நீதிமன்றம். கீழமை நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை பெற்றிருந்த எஞ்சிய 5 பேர் தூக்குத் தண்டனையையும் வாழ்நாள் தண்டனையாக மாற்றியது. இவர்கள் ஐவரும் குறைந்தது 25 ஆண்டுகளாவது சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் நிபந்தனை விதித்தது.

மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சாவுத் தண்டனை பெற்றவர்களின் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது சரி. சாவுத்தண்டனை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து உலகெங்கும் வலுத்து வரும் காலம் இது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கருத்தும் அதுவே! அதேவேளை, சாதிவேறுபாடு காரணமாக, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கரைக் கொலை செய்ய கௌசல்யாவின் பெற்றோரும் மாமாவும் சதித்திட்டம் தீட்டவில்லை அல்லது அக்குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்றுகூறி அவர்களை உயர் நீதிமன்றம் முற்றிலுமாக விடுதலை செய்ததுதான் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கீழமை நீதிமன்றத்தில் இரட்டை வாழ்நாள் தண்டனை பெற்ற ஸ்டீபன் தன்ராஜ் முற்றிலுமாக விடுதலை செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியாக உள்ளது.

கொலைச் சதிக் குற்றச்சாட்டு ஐயமற மெய்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கூறுகிறார்கள். கௌசல்யாவின் தந்தையார், தாயார், தாய்மாமா ஆகியோர் மீது கொலைச் சதிக் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. இவர்கள் கொலைக்குத் திட்டமிட்டார்கள் என்பதற்கான சான்றுகளும் காவல்துறையினரால் அளிக்கப்பட்டிருந்தது.

ஒரு சான்றை இந்நீதிபதிகள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். கூலிக்குக் கொலை செய்த நபர்களோடு கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி 2016 பிப்ரவரி 6-லிருந்து மார்ச்சு 6 வரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டிருந்தார் என்பதே உயர் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்ட சாட்சியம்.

இரண்டாவதாக, மேற்படி சின்னச்சாமி – அன்னலட்சுமி இணையரின் கூட்டு வங்கிக் கணக்கில் இருந்த பணத்தில் ரூபாய் என்பதாயிரத்தை 2016 மார்ச்சு 12-லிருந்து 14 வரை சின்னச்சாமி எடுத்து, கூலிக் கொலைக் கும்பலுக்குக் கொடுத்தார் என்றும், அதில் ரூபாய் ஐம்பதாயிரத்தைக் கூலிக் கொலைக் கும்பலிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்தது என்றும் காவல்துறை குற்ற அறிக்கையில் கூறியுள்ளது. மேற்படி பணம் எடுத்ததும் உண்மை, கூலிக்குக் கொலை செய்யும் கும்பலிடம் கொடுத்திருக்கலாம்; ஆனால், சின்னச்சாமி ஏ.டி.எம்.மில் பணமெடுத்த போது சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருக்க வேண்டும், அப்படியான சான்றை காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, இந்தச் சான்றை நீதிபதிகள் புறக்கணித்துவிட்டார்கள்.

மூன்றாவதாக, கூலிக்கு வந்த கொலைக் கும்பலை சின்னச்சாமி ஒரு விடுதியில் தங்க வைத்ததை, விடுதி உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் அதற்கான வாய்மொழி சாட்சியமோ, ஆவணங்களோ தாக்கல் செய்யவில்லை என அதையும் நீதிபதிகள் புறக்கணித்திருக்கிறார்கள்.

இவ்வாறு கூறி, கொலைச் சதி குற்றச்சாட்டிலிருந்து மேற்படி நபர்களை உயர் நீதிமன்றம் நீக்கிவிட்டது. கொலைச் சதிகாரர்களை நீக்கிவிட்ட பிறகு, இந்தக் கூலிக் கொலைக் கும்பல் என்ன முன் விரோதத்தில் – என்ன பகை நோக்கத்தில் அல்லது யார் கொடுத்த கூலிக்காக சங்கரைக் கொலை செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

எனவே, கூலிக்குக் கொலை செய்தவர்கள் யாருக்காக செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்ற விடையில்லாமல் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், இந்த ஒரு காரணத்தை வைத்து இந்த ஐந்து பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய வாய்ப்பிருக்கிறது. சாதிவெறிக் கொலைகள் மேலும் நடைபெற ஊக்கம் பெறும் அபாயம் இதிலிருக்கிறது!

நீதிக்குக் கண்ணில்லை என்பார்கள். நீதித்துறையின் நடுநிலைப் பார்வையைக் குறிப்பதற்காக அப்படிச் சொல்வார்கள். ஆனால், இத்தீர்ப்பு நீதியானது ஓரக் கண்ணால் பார்த்தது போல் அல்லவா தோன்றுகிறது.

காவல்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கை சரியாக நடத்தவில்லையா என்ற வினாவுக்கும் விடை தேட வேண்டும். அதேவேளை, இவ்வாறு தீர்ப்பு வரக் காரணமென்ன என்ற வினாவுக்கும் விடை கண்டாக வேண்டும். இத்தீர்ப்பு பல வினாக்களை எழுப்புகிறது!

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கட்டாயம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் கொலை வழக்குகளில் மிகைத் தண்டனை வழங்குவதையும் அல்லது உரிய தண்டனை வழங்காததையும் பெருமளவில் தவிர்ப்பதற்கு, அங்கும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பு வழங்கும் முறையைச் செயல்படுத்தலாம்.

இக்கருத்தை உரியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உடுமலை சங்கர் கொலை வழக்குத் தரும் மிகமிக முகாமையான படிப்பினை – சாதிவெறிக் கொலைகள் – குற்றங்கள் ஆகியவற்றை விசாரித்துத் தண்டனை வழங்குவதற்குத் தனிச் சட்டம் தேவை என்பதாகும்.

சங்கர் கொலை வழக்கில் கொலைச்சதி – ஐயமற மெய்ப்பிக்கப்பட முடியாமல் போனதற்கு, அனைத்தையும் மெய்ப்பிக்கும் பொறுப்பு அரசுத் தரப்புக்கு மட்டுமே இருந்ததாகும். சாதிவெறிக் கொலைச் சதியில் குற்றம் சாட்டப்பட்டோர், தாங்கள் குற்றவாளிகள் அல்லர் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்ற மாறுதல் வர வேண்டும். வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தில் அப்படித்தான் இருக்கிறது.

சங்கரைக் கொலை செய்ய ஏற்பாடு செய்த கௌசல்யா உறவினர்கள் விடுதலையாகி விட்டார்கள். கூலிக்குக் கொலை செய்தோர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர். காரணம், இதில் கொலைச் சதியை ஐயமற மெய்ப்பிக்க முடியாததைக் காரணம் காட்டியுள்ளார்கள் நீதிபதிகள்!

எனவே, சாதிவெறிக் கொலை – அதாவது ஆணவக் கொலைக்குத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.