சமற்கிருத செய்தித் திணிப்பு! ஆரியத்துவா ஆதிக்கம்! - ஐயா கி.வெங்கட்ராமன் கண்டனம்
இந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத் தொலைகாட்சி உள்ளிட்ட அனைத்து மாநில மொழி தொலைக்காட்சிகளும் அன்றாடம் காலை 7.15 முதல் 7.30 வரை சமற்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும், ஒரு வேளை அந்த நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் 15 நிமிடத்தை சமற்கிருதச் செய்தி ஒளிபரப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்று இந்திய அரசின் பிரசார் பாரதி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
அதுமட்டுமின்றி ஒவ்வொறு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் சமற்கிருத வாரந்திர செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த குறிப்பிட்ட நேரம் வாய்க்கவில்லை என்றால் அந்த நாளுக்குள் நேரத்தை ஒதுக்கீடு செய்து அதனை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்றும் இந்த சுற்றறிக்கை கட்டளையிடுகிறது.
யாருக்கும் தாய்மொழி இல்லாத சமற்கிருதத்திற்கு நாள் தோறும் கால்மணிநேரம் செய்தி அறிக்கைக்காக ஒதுக்கீடு செய்தவதும் வாரந்தோறும் ஒளிபரப்புவதுமே மிகையானது.
இப்போது அது போதாதென்று ஒவ்வொறு நாளும் கால்மணிநேரம் தமிழ் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சமற்கிருத செய்தியை ஒளிபரப்பவேண்டும் என்பது சமற்கிருதத் திணிப்பு மட்டுமின்றி தமிழ் நீக்கமும் ஆகும்.
இந்தியா ஆரியத்துவா நாடுதான் என்பதை சமற்கிருதத் திணிப்பின் மூலம் மோகன் பகவத் - மோடி அரசு நிலைநிறுத்த விரும்புகிறது.
ஏற்கெனவே பல துறைகளில் சமற்கிருதத்தையும் இந்தியையும் திணித்துவருவதன் தொடர் நடவடிக்கையாகவே இந்த சமற்கிருத திணிப்பு விளங்குகிறது. தமிழின ஒதுக்கலின் இன்னொறு நடவடிக்கையாகும் இது. தமிழினம் இதை ஒரு போதும் ஏற்காது.
இந்திய அரசின் செய்தி ஒளிபரப்பு துறை இந்த சமற்கிருதத் திணிப்பு சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
Leave a Comment