பா.ச.க.வின் திட்டம் : அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது! - ஐயா பெ. மணியரசன்,
பா.ச.க.வின் திட்டம் :
அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது
தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது!
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்நாட்டில், தி.மு.க. எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, அன்றாடம் தி.மு.க.வுக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறது பா.ச.க.
மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு, ஆரியத்துவா பா.ச.க.வுக்குத் திராவிடத் தி.மு.க. மீது அவ்வளவு வெறுப்பு என்று தோன்றும். ஆனால், பா.ச.க.வின் உண்மைத் திட்டம் தி.மு.க. ஒழிப்பல்ல; அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவதுதான்!
தமிழ்நாட்டு அரசியல், அ.இ.அ.தி.மு.க. எதிர் தி.மு.க. என்று இருமுனை முகாம்களாக இருப்பதை மாற்ற வேண்டும் என்பதே பா.ச.க.வின் உடனடித் திட்டம். இதைப் பா.ச.க. எதிர் தி.மு.க. என்று மாற்ற வேண்டும் என்பது அதன் போர் உத்தி!
எதிர்க்கட்சி என்ற நிலையில் தி.மு.க. இருக்க வேண்டும்; ஆளுங்கட்சியாகவோ அல்லது முதன்மை எதிர்க்கட்சியாகவோ அ.இ.அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்பதே பா.ச.க.வின் வேலைத் திட்டம். அ.இ.அ.தி.மு.க.வுக்கு வலிமையான தலைமை இல்லை என்பதால் அதை ஓரங்கட்ட முடியும் என்று பா.ச.க. கருதுகிறது.
இதற்காகத்தான் 24 மணி நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பரப்புரை செய்கிறது பா.ச.க. தமிழ்நாட்டு மக்கள் 24 மணி நேரமும் முதலிடத்தில் வைத்துப் பா.ச.க.வையும் தி.மு.க.வையும் பேச வேண்டும். பா.ச.க. கதாநாயகன், தி.மு.க. வில்லன் என்பது போல் மக்களிடையே விவாதங்களைக் கிளப்ப வேண்டும். ஆரியத்துவா கையாளும் உளவியல் போர் முறை இது!
ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, எடப்பாடி தலைமையை இடது காலால் எத்தி விடுகிறார் பா.ச.க. தலைவர் எல். முருகன்!
“பா.ச.க. கைகாட்டும் நபர்தான் அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சர்; பா.ச.க. பங்கேற்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்!”, “டிசம்பர் வாக்கில் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்!”.
இவையெல்லாம் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் எல். முருகன் பேசியவை!
எடப்பாடி – ஓ.பி.எஸ். தலைமை பா.ச.க.வின் அடாவடித்தனங்களுககு உரியவாறு எதிர்வினை ஆற்றாமல் பம்மிப் பதுங்குகிறது. ஏன்? பதவியைப் பயன்படுத்திப் பதுக்கி வைத்திருப்பது அவ்வளவு! மோடி ஏவிவிட்டால் தில்லியின் பல்வேறு துறையினர் அ.இ.அ.தி.மு.க. தலைவர்களின் - உறவினர்களின் – நண்பர்களின் வீடுகளும் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும்! ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படும்.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் ஆரியத்துவாவுக்கோ, பா.ச.க.வுக்கோ ஆபத்து ஒன்றுமில்லை. பழைய நட்புக் கழகம்; தி.மு.க.வின் - அதன் திராவிட ஊதுகுழல்களின் – திராவிடப் பரப்புரைகள், தமிழ்த்தேசிய வளர்ச்சியை – தமிழர் இன உணர்ச்சியைத் தடுக்கப் பயன்படும்; கூப்பிட்டால் கூட்டணிக்கு வந்துவிடும்; இந்தியத்தேசிய ஏகபோகத்தின் கையடக்கப் பதிப்பு தி.மு.க.; இவையெல்லாம் பா.ச.க.வின் கணிப்பு!
எனவே, தி.மு.க.விற்கு எதிர்வகை விளம்பரம் (Negative Propaganda) கொடுப்பதற்காக பா.ச.க.வினர் எந்நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பேசுகின்றனர். அ.இ.அ.தி.மு.க.வை எளிதாகக் கலைத்துப் போடலாம் என்றும் கணக்குப் போட்டுள்ளார்கள்.
பா.ச.க. – ஆரியத்துவா பாசிசக் கட்சி! பா.ச.க. பாசிசத்தை எதிர்ப்பதற்குத் தி.மு.க. அணியை வலுப்படுத்த வேண்டும் என்று பலர் பேசுகின்றனர்.
வலிக்காமல் வாக்குச்சாவடி மூலம் பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என்பவர்களின் மனக் கணக்கு இது! நோகாமல் நொங்கெடுக்க நினைப்பவர்கள் இவர்கள்!
தமிழ்த்தேசியம் பேசுவோரிலும் ஒருசாரார் “வாக்குச்சாவடிப் புரட்சி”யில் பெரு நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
வாக்குச்சாவடி வேண்டாம் என்பது நமது வாதமல்ல; வாக்குச் சாவடியை முதன்மைப்படுத்தாதீர்கள்; வாக்குச்சாவடி மூலம் தமிழ்த்தேசியம் வெற்றி பெறும் என்று எண்ணாதீர்கள்!
“எந்த அடக்குமுறை வந்தாலும் எதிர்கொண்டு, ஆரியத்துவா பாசிசத்தை முறியடிக்க முன்னேறுவோம்; இலட்சக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் தமிழ்த்தேசிய உரமேற்றி எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் உளவியலை உருவாக்குவோம்” என்பவற்றைத் தமிழ்த்தேசியர்கள் முதற்பெரும் கடமையாக ஏற்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment