ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“இந்தியாவின் அதிகாரப் போட்டிக்கு இலங்கை ஒத்துழைக்காது” கோத்தபய இராசபட்சே அறிவிப்பு! - ஐயா பெ. மணியரசன்,“இந்தியாவின் அதிகாரப் போட்டிக்கு இலங்கை
 ஒத்துழைக்காது” கோத்தபய இராசபட்சே அறிவிப்பு!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


“இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் ஆதிக்கத்திற்காக வல்லரசுகள் போட்டியிடு கின்றன. இலங்கையில் அதிகாரப் பகிர்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து, பிரிவினை சக்திகளுக்கு ஊக்கமூட்டுகிறார்கள்” என்று இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய இராசபட்சே கருத்துகள் வெளியிட்டுள்ளார். 

“ஜெனீவாவில் எங்களுக்கு விடப்பட்ட சவாலை நாங்கள் சந்தித்தோம். அழுத்தங்களுக்கு நாங்கள் அச்சப்பட மாட்டோம். நாங்கள் சுதந்திர நாடு. இந்தியப் பெருங்கடல் போட்டியாளர்களுக்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்றும் கோத்தபய கூறுகிறார். 

இந்தியப் பெருங்கடல் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளே! “ஜெனீவா சவால்” என்று கோத்தபய கூறுவது, மறைமுகமாக இந்தியாவைத்தான். ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த “போர்க் குற்றங்கள்” பற்றிய சாட்சியங்களைத் திரட்ட வேண்டுமென்று 23.03.2021 அன்று வாக்கெடுப்பு நடந்தது. அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியா, இலங்கை ஒற்றுமையையும், அதிகாரப் பகிர்வையும் சமமாக நாங்கள் கோருகிறோம் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அறிக்கை கொடுத்தது. மேலும் அந்த அறிக்கையில் இலங்கையின் 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டுமென்றும், மாநிலங்களுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்றும் இந்தியா கூறியிருந்தது. 

இக்கருத்துகளை மனத்தில் வைத்துத்தான், கோத்தபய இராசபட்சே இந்தியாவின் பெயரைச் சொல்லாமல் இந்தியாவை எச்சரிக்கிறார். 

இலங்கை அரசு, 1960களிலிருந்தே இந்தியாவுக்கு எதிராக சீனாவையும், பாக்கித்தானையும் ஆதரித்து வந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். இந்திய - சீன போரில் இலங்கை சீனாவுக்கு ஆதரவாகத்தான் இருந்தது. 1971இல் நடந்த வங்காளதேசப் புரட்சியை இந்தியா ஆதரித்தது. மேற்குப் பாக்கித்தான் படை விமானங்கள் கிழக்குப் பாக்கித்தான் (வங்காளதேசம்) எல்லைக்குள் சென்று மக்களைத் தாக்குவதற்கு இந்தியாவின் வழியாக வானத்தில் பறக்கக் கூடாதென்று தடை விதித்தது இந்திய அரசு. அப்போது, அவ்விமானங்களை இலங்கை வழியாக பறந்து செல்லவும், இலங்கையில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் இலங்கை அரசு அனுமதித்தது. 

இப்பொழுதும் இந்தியாவை இலங்கை அரசு முழுமையாக ஆதரிக்காமல் சீனாவுடன் கூடுதல் நெருக்கம் கொண்டுள்ளது. ஆனாலும், இந்திய அரசு ஈழத்தமிழின எதிர்ப்பை முதன்மைப்படுத்தி சிங்கள அரசின் இனப்படுகொலைகளுக்குத் துணை நின்றது. அப்படுகொலையில் பங்கெடுத்தும் கொண்டது. 

அந்த இனப்படுகொலைக் குற்றங்கள் பற்றி பன்னாட்டு விசாரணை வராமல் தடுத்திட, இந்தியா தனது தூதரக உறவின் மூலம் பல நாடுகளை அணுகி, அழுத்தம் கொடுத்து வருகிறது. 

இப்பொழுது கோத்தபய இராசபட்சே இந்தியாவுக்கு எதிராகத் துல்லியமாகத் தாக்குதல் தொடுத்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். இப்பொழுதும்கூட, இந்தியா இலங்கையுடன் கொண்டுள்ள நல்லுறவைக் கைவிட்டுவிடும் என்று எதிர்பார்த்திட இயலாது! இந்தியாவின் வரலாறு அப்படி! 

எல்லாவற்றுக்கும் மேலாக, தண்ணீரை விடக் குருதி அழுத்தமானது என்பார்கள். இந்திய ஆட்சியாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே ஆரியக் குருதி உறவு தொடர்கிறது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இதுவரை தமிழர்களா, சிங்களர்களா, எந்தப் பக்கம் நிற்பது என்ற கேள்வி வந்த போதெல்லாம் இந்தியா சிங்களர் பக்கமே நின்றிருக்கிறது. 

எனவே, ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இந்தியாவின் எதிர்வினை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.