பேராசிரியர் இராம சுந்தரம் மறைவு மனத்தை வாட்டுகிறது! - பெ. மணியரசன் இரங்கல்!
பேராசிரியர் இராம சுந்தரம் மறைவு
மனத்தை வாட்டுகிறது!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக அறிவியல் புலத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம் அவர்கள் தமது 83-ஆம் அகவையில் இன்று (08.03.2021 திங்கள்கிழமை) விடியற்காலை தஞ்சையில் தமது இல்லத்தில் இயற்கை எய்தினார். என்ற செய்தி துயரம் தருகிறது.
ஐயா அவர்கள் மொழியியல் துறையில் ஓர் ஆய்வறிஞர். அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரின் முனைவர் பட்ட வழிகாட்டி காலஞ்சென்ற தமிழறிஞர் வ. அய். சுப்ரமணியம் அவர்கள். திருவனந்தபுரத்தில் வ.அய்.சு. பேராசிரியராகப் பணியாற்றிய போது இராம. சுந்தரம் முனைவர் பட்டம் பெற்றார்.
ஐயா வ.அய். சுப்ரமணியம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராகப் பணியாற்றிய காலத்தில், ஒவ்வொரு துறைக்கும் திறமையாளர்களைத் தேடிப்பிடித்துப் பணியில் அமர்த்தினார். அப்படி வந்தவரே இராம. சுந்தரம். அவர் அண்ணாமலையில் தமிழ்ப் பேரறிஞர்கள். ஏ.சி. செட்டியார், தெ.பொ.மீ.ஆகியோரின் மாணவர்.
புனா, மதுரை தியாகராசர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தமிழ்விரிவுரையாளராகப் பணியாற்றிய இராம. சுந்தரம் அவர்கள், ஏழாண்டுகள் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு திருக்குறளை போலிஷ் மொழியில் வல்லுநர்களின் துணையுடன் மொழியாக்கம் செய்தார்.
தஞ்சை தமிழ்ப்பல்கலையில் அறிவியல் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிய போது மருத்துவம் (MBBS), பொறியியல் (BE) இரண்டு தொழிலியல் கல்வியும் தமிழில் கற்பிப்பதற்கான முயற்சியாக இவற்றின் முதல் இரண்டாண்டுப் பாடங்களைத் தமிழாக்கம் செய்ய துணைவேந்தர் வ.அய். சுப்ரமணியம் அவர்களின் ஊக்குவிப்புடன் களத்தில் இறங்கினார் இராம. சுந்தரம். தக்க கல்வியாளர்களின் துணை கொண்டு இரண்டாண்டுப் பாடங்களைத் தமிழாக்கினார். ஆனால் ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
தஞ்சை தமிழ்ப் பல்கலையில் அறிவியல் தமிழ் தொடர்பான ஆய்வுத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றினார். அத்துறையில் பல நூல்கள் எழுதியுள்ளார். மொழியில், அறிவியல் தமிழ் தொடர்பாக ஏராளமாகக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அமெரிக்கப் பேராசிரியர். தாமஸ் டரவுட்மன் ஆங்கிலத்தில் எல்லீசின் தமிழ்ப் பணி குறித்து எழுதிய “திராவிடச் சான்று” என்ற நூலைத் தமிழாக்கினார். அந்நூலைக் காலச்சுவடும் – சென்னை வளர்ச்சி ஆய்வு நடுவமும் சேர்ந்து வெளியிட்டன.
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க தமிழ் மொழியியல் ஆய்வாளராக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பல்கலை மேனாள் ஆய்வுத்துறை பேராசிரியர் மற்றும் பதிவாளர். முனைவர் கி. அரங்கன் அவர்கள் இராம. சுந்தரம் அவர்கள் தமது கருத்து வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியவர் என்று பெருமையுடன் கூறுவார் இராம.சுந்தரம் அவர்கட்கு நட்புவட்டம் அதிகம். எல்லோருடனும் கலகலவென்று இனிமையாக நகைச்சுவையாகப் பேசும் இயல்பு கொண்டவர்.
இடதுசாரிச் சிந்தனையும் தமிழ்ப் பற்றும் மிக்க இராம. சுந்தரம் அவர்களுடன், நானும் எமதியக்கத் தோழர்களும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தது இயல்பானதே!
முனைவர் சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ப் பல்கலைத் துணை வேந்தராக இருந்தபோது உதவி ஆய்வாளர்கள் மற்றும் தற்காலிகப்பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்துப் பேராசிரியர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் நெடும் போராட்டம் நடத்தினார்கள். சற்றொப்ப 60 நாள் நடந்த அப்போராட்டத்தில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இராம.சுந்தரம் பங்கு ஆற்றினார்.
எமது “தமிழர் கண்ணோட்டம்” மாத இதழில் “வசந்தன்” என்ற புனை பெயரில் பல கட்டுரைகள் எழுதினார். வளர்ச்சியடையாத வெளிநாடுகளில் எல்லாம் அந்தந்த நாட்டின் தாய்மொழி ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்தப்பட்ட வரலாற்றைத் தொடர்கட்டுரையாகத் தமிழர் கண்ணோட்டத்தில் எழுதி வந்தார். தமிழர் கண்ணோட்டம் வளர்ச்சிக்குப் பல்வேறு மதியுரை வழங்கி வந்தார். தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழுவிலும் உறுப்பு வகித்தார்.
சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டையில் பிறந்த இராம.சுந்தரம் தஞ்சை தமிழ்ப் பல்கலையில் பணியாற்றியதை ஒட்டி தஞ்சாவூர்க்காரர் ஆனார்.
பேராசிரியர் - முனைவர் - எம் பேரன்புக்குரிய தோழர் இராம. சுந்தரம் அவர்களின் மறைவு மனத்தை வாட்டுகிறது. அவரது மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
பி.கு. பேராசிரியர், முனைவர், இறுதி ஊர்வலம் தஞ்சை பாரதிநகர் அருகே பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதிக்கு (பிள்ளையார்ப் பட்டிச் சாலை) எதிரே 71, செல்லையா நகரின் இல்லத்திலிருந்து நாளை (09.03.2021) காலை 10 மணிக்குப் புறப்படும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment