பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது! - பெ. மணியரசன் அறிக்கை!
பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
“சாட்டை” வலையொளி ஊடகவியலாளர் துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருச்சி காவல்துறையினர் நேற்று (11.06.2021) இரவு சிறையில் அடைத்திருப்பது முற்றிலும் சனநாயக மறுப்புச் செயலாகும்; வன்மையான கண்டனத்திற்குரியது!
திருச்சியில் “சமர் கார் ஸ்பா” நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் தமிழீழத் தேசியத் தலைவர் – தமிழர்களின் பெருமைக்குரிய மேதகு வே. பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி, சுட்டுரை(Twitter)யில் கருத்து வெளியிட்டார்.
பிரபாகரன் அவர்களை மேற்படி வினோத் கொச்சைப்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? பிரபாகரன் அவர்களோ, விடுதலைப் புலிகளோ தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு கருத்துகள் கூறியதில்லை. அவர்கள் தமிழ்நாட்டு தலைவர்களை இழிவுபடுத்தியும் கருத்துகள் வெளியிட்டதில்லை.
அண்மைக் காலமாகக் கலைஞர் கருணாநிதி அவர்களை கடுமையாக விமர்சித்து சிலர் கருத்துகள் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு எதிர்வினையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி சிலர் கருத்துகள் வெளியிடுகிறார்கள்.
கலைஞர் மீது எழுப்பப்படும் திறனாய்வுகள் அல்லது கொச்சைப்படுத்தல்கள் ஆகியவற்றிற்கு கலைஞர் அன்பர்கள் எதிர்வினையாற்றும்போது, யார் அவ்வாறு கலைஞரை பேசினார்களோ அவர்களை அல்லது அவர்களுடைய அமைப்பை விமர்சனம் செய்வது இயல்பானது. அதற்காக, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் உயர்மதிப்பிற்குரிய – தமிழினத்தின் பெருமைக்குரிய சின்னமாக விளங்கக்கூடிய மேதகு பிரபாகரன் அவர்களை கொச்சைப்படுத்துவது முற்றிலும் முரணானது! கண்டனத்திற்குரியது!
பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி சுட்டுரை வெளியிட்ட வினோத் என்பவரை “சாட்டை” துரைமுருகன் உள்ளிட்ட நால்வரும் காவல்துறையினரின் முன்னிலையில் சந்தித்து, நடந்த விவரங்களை எடுத்துச் சொல்லி மேற்படி வினோத் தமது தவறை உணரும்படிச் செய்துள்ளார்கள். அதன் வெளிப்பாடாகத்தான் காவல்துறையினர் முன்னிலையில் பதிவான வினோத்தின் வருத்தம் தெரிவிக்கும் கருத்து உள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதமாகக் கூடியது, சட்டவிரோமதாக நுழைந்தது, கொலை மிரட்டல் விடுத்தது, தாக்கியது போன்ற பிணை மறுப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் இரவோடு இரவாக மேற்படி துரைமுருகன் உள்ளிட்ட நால்வரையும் தளைப்படுத்தி சிறையில் அடைத்திருப்பது, அதிகாரத்தை முற்றிலும் தவறாகப் பயன்படுத்திய அத்துமீறலாகும்! இதில், ஆளுங்கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்களின் அழுத்தம் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இந்தத் தவறான போக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு திருத்த வேண்டும். பழிவாங்கும் நோக்கில் துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் மீதும் போட்ட வழக்கைக் கைவிட்டு அவர்கள் நால்வரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment