ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் மலையாள நம்பூதிரிகளின் தேவப்பிரசன்னம் கூடாது! தமிழ் இந்து தெய்வீகச் சடங்குகள் செய்க! - பெ. மணியரசன் அறிக்கை!



மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் மலையாள நம்பூதிரிகளின் தேவப்பிரசன்னம் கூடாது! தமிழ் இந்து தெய்வீகச் சடங்குகள் செய்க!

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் 
பெ. மணியரசன் அறிக்கை!


கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் அண்மையில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அதையொட்டி, அதை சரி செய்யும் பணியில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. தீ விபத்து நடந்த பகுதியில் இரும்புத் தகடு பதிக்கும் பணி நடந்து வருவதாக பகவதி அம்மன் பற்றாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

அதேவேளை, இந்தத் தீ விபத்து ஏதோவொரு கெட்ட செயலுக்கான அறிகுறியாக நடந்திருக்கிறது என்று கருதி, அதுபற்றி அறிய கேரளாவில் உள்ள கடைபிடிக்கப்படும் தேவப்பிரசன்னம் பார்த்தல் என்ற ஒரு சடங்கை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அரங்கேற்ற இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதற்காக கேரள நம்பூதிரி பிராமணர்கள் 9 பேரை தேர்வு செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள். 

தமிழ்நாட்டில் தமிழ் இந்துக் கோயில்களில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்களையே மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும், மலையாள பிராமண சடங்குகளைத் தமிழ்நாட்டு தமிழ் இந்து பகவதி அம்மன் கோயிலில் கடைபிடிக்கக் கூடாது என்றும் இந்து சமயச் சான்றோர் பெருமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்கள். 

இவ்வேண்டுகோள் தமிழர் ஆன்மிக நெறிப்படியும் தமிழ் இந்து சம்பிரதாயங்களின் படியும் மிகவும் சரியானது. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு கேரளாவிலுள்ள நம்பூதிரி பிராமணர்களைக் கொண்டு, தமிழ் இந்துக் கோயிலான மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் தேவப்பிரசன்னம் பார்க்கும் சடங்கு நடக்காமல் தடுத்து நிறுத்தும்படியும், தமிழர் ஆன்மிக மரபுப்படி அத் தீ விபத்துக்குப் பின் செய்ய வேண்டிய தெய்வீகச் சடங்குகளை முறையாகச் செய்திட ஏற்பாடு செய்யுமாறும் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 


தெய்வத் தமிழ்ப் பேரவை

முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.