பேரியக்கத்தின் மீது எப்போதும் அன்பும் மதிப்பும் கொண்ட சிதம்பரம் வி.சி.க. செயல்பாட்டாளர் தோழர் தியாகு மறைந்தார்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செய்தித் தொடர்பாளரும், சிதம்பரம் நகரமன்றத்தின் 1ஆவது வார்டு உறுப்பினருமான தோழர் தியாகு, இன்று (10.02.2022) காலை 11 மணியளவில் மறைவுற்றார் என்ற செய்தி பேரதிர்ச்சியாக அமைந்தது. அவருக்கு வயது 44.
கடந்த 25 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்த தோழர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தாலும், கட்சி கடந்து அனைவரின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர். குறிப்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் பல்வேறு நிகழ்வுகளில் துணையாக நின்றவர்.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையைப் போலவே கடலூர் மாவட்டமும் பெருவெள்ள பாதிப்பில் சிக்கியது. சிதம்பரம் நகரத்திலும், பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புக்குள்ளாயின. அவற்றுள் 1ஆவது வார்டு பகுதி என்பது, தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்கள் வாழக்கூடிய பகுதி. அப்பகுதியில் வெள்ள இடர்நீக்கப் பணிகளில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முன்முயற்சியில் ஓசூர் அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கத் தோழர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கியபோது, அதை அனைவருக்கும் சரியாகக் கொண்டுபோய் சேர்ப்பதில் கவனமாக இருந்து, நம்மோடு பணியாற்றியவர் தோழர் தியாகு ஆவார். அவரளவிலும் இடர் நீக்கப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்.
சிதம்பரம் திருவள்ளுவர் தெருவில் வைக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கமும், மகளிர் ஆயமும் போராட்டத்தை முன்னெடுத்த போது, கட்சி வரம்பைத் தாண்டி மக்களோடு நின்றார். அப்பகுதி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களின் தனிப்பட்ட நிகழ்வுகளிலும் துணையாக நின்றார்.
கடுமையான மின்வெட்டை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய போராட்டத்திலும், செங்கொடி உயிரீகம் செய்த அன்று நாம் நடத்திய உணர்ச்சிமிக்கக் கண்டனப் போராட்டத்திலும் மக்களைத் திரட்டிக் கொண்டு, தன்னை இணைத்துக் கொண்டார்.
எப்போதும் என் மீதும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மீதும் மதிப்பும் அன்பும் செலுத்தியவர் தியாகு! பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ. மணியரசன் எப்போது சிதம்பரத்திற்கு வந்தாலும், அவரை சந்தித்து அன்பு தெரிவிப்பதை தொடர் பழக்கமாகவே கொண்டிருந்தார் தியாகு.
தோழர் தியாகுவை இழந்துவாடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment