வள்ளலார் விழாவில் மேடை ஏறி பேச்சாளரை தடுத்து அராஜகம் செய்த தி.மு.க நபருக்கு காவல்துறை ஆதரவு!
காட்டுமன்னார்குடி வள்ளலார் விழாவில் மேடை ஏறி பேச்சாளரை தடுத்து அராஜகம் செய்த தி.மு.க நபருக்கு காவல்துறை ஆதரவு! விழா பொறுப்பாளர்களை காவல் நிலையம் கொண்டு சென்றனர்!
================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!
================================
கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்கோயிலில் இன்று (18.02.2023) - "வள்ளலார் 200" பெருவிழா முழுநாள் நிகழ்வாக நடந்தது. காலை 6 மணிக்கு அருட்சோதி ஊர்வலம் தொடங்கி லலித திருமண மண்டபத்தை அடைந்து, அங்கு உரை அரங்கம் - கவியரங்கம் - கருத்தரங்கு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன், செந்நெறி பா. தண்டபாணி, தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்ட பல்வேறு கருத்தாளர்கள் உரையாற்றினர்.
வள்ளலார் வழி இலவச மருத்துவ முகாம், அடுப்பில்லா சமையல், ஆவணப்படம் திரையிடல் போன்ற பல நிகழ்வுகள் நடந்தன.
கவியரங்கத்தில் கவிதை வழங்கிய திரைப்படப் பாடலாசிரியரும் தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவருமான கவிஞர் கவிபாஸ்கர் அவர்கள், வள்ளலாரின் உருவ வழிபாடு நிராகரிப்பை சொல்லி, ஒளி வழிபாட்டை வலியுறுத்திப் பாடும்போது, கலைஞர் கருணாநிதிக்கு கடலுக்குள் பேனா சிலை வைப்பதை எதிர்த்து விமர்சனமாக கவிதை வழங்கினார். அதை வீதியில் கேட்டுக் கொண்டு சென்ற திமுக பொறுப்பாளர் ஒருவர் வேகமாக மண்டபத்திற்குள் ஓடி வந்து, அத்துமீறி மேடையேறி கூச்சலிட்டார். இனிமேல் இங்கு பேசக் கூடாது, கூட்டம் நடத்தக்கூடாது என்று அராஜகமாகத் தடுத்து அடாவடி புரிந்தார். மற்றவர்கள் அவரை தடுக்கவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு அவரை விலக்கி விட்டார்கள்.
அங்கிருந்த காவல்துறையினர் இந்திகழ்வைக் கண்டும் கூட தலையிடவில்லை. சட்டவிரோதமாக மேடை ஏறி அராஜகம் செய்த அந்த திமுக நபரை தடுக்கவில்லை, கைது செய்யவும் இல்லை. ஆனால் கூட்டம் முடிந்த பிறகு மாலை 7 மணி அளவில் மேற்படி கவிஞர் கவிபாஸ்கரையும், வன்முறையில் ஈடுபட்ட நபரை தடுத்த பார்வையாளர் ஒருவரையும் உடனே காவல் நிலையத்தில் ஆஜர்படுத்திவிட்டுத் தான் நீங்கள் வெளியே போக முடியும் என்று கூட்டம் ஏற்பாடு செய்தவர்களை காவல்துறை ஆய்வாளர் மீனா தலைமையில் காவல்துறையினர் நிர்பந்தித்தனர்.
அவர்கள் பேசிவிட்டு போய் விட்டார்கள், நாளைக்கு அழைத்து வருகிறோம் என்று தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் உறுதி கொடுத்தும் கூட, "அவர்கள் நீங்கள் மூன்று நான்கு பேராக காவல் நிலையம்" வாருங்கள் என்று சொல்லி வற்புறுத்தி, தோழர் வெங்கட்ராமன், காட்டுமன்னார்கோயில் வள்ளலார் பணியகம் பொறுப்பாளர் தோழர் சிவ. அருளமுதன், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் முனைவர் வே. சுப்ரமணியசிவா ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இப்போது மணி இரவு 9.30 மணி. இதுவரை அவர்களைக் காவல்துறை வெளியே விடவில்லை.
அனுமதி பெற்று நடந்த அரங்க கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து மேடை ஏறி கலாட்டா செய்து கவிதை பாட விடாமல் தடுத்த அந்த நபரை - அவர் ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அமைதியாகக் கூட்டம் நடத்திய பொறுப்பாளர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வைத்திருக்கிறது.
நாங்கள் காட்டுமன்னார்குடி கடைவீதியில் சுமார் 30 பேரோடு தலைவர் பெ. மணியரசன் தலைமையில், அவர்களை விடுவிப்பார்களா என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். காவல்துறை அவர்களை விடவில்லை என்றால் நாங்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து சாலை மறியல் செய்யும் முடிவில் இருக்கிறோம்.
உரிய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும் தெய்வத் தமிழ் பேரவை சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
Leave a Comment