ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“மலையாள ஆலூக்காசே வெளியேறு!”*_ *தஞ்சையில் 9.3.2011 அன்று த.தே.பே. போராட்டம்! 120 பேர் சிறை சென்ற வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!*

 


_*

“மலையாள ஆலூக்காசே வெளியேறு!”*_
*தஞ்சையில் 9.3.2011 அன்று த.தே.பே. போராட்டம்! 120 பேர் சிறை சென்ற வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!*
======================================
*பெ. மணியரசன்*
_தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்_
======================================
தமிழ்நாட்டில் உள்ள தொழில், வணிகம், வேலை, கல்வி முதலிய அனைத்திலும் அயல் மாநிலத்தார் ஆதிக்கம் கூடுதலாகி வருகிறது. சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அனாதைகளாய், அகதிகளாய்ப் புறக்கணிக்கப்படும் அநீதியை எதிர்த்துத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. மண்ணின் மக்களுக்கே தொழில், வணிகம், வேலை, கல்வி அனைத்தும் என்ற கோரிக்கை எழுப்பி வருகிறது.
மண்ணின் மக்கள் உரிமைக்கான இப்போராட்டங்களில் ஒன்றாக, தஞ்சாவூர் கீழ் அலங்கத்தில் உள்ள மலையாள ஆலுக்காஸ் நகை மாளிகையை வெளியேறக் கோரும் ஆர்ப்பாட்டம் கடந்த 9.3.2011 அன்று அக்கடை முன் நடந்தது. இந்தத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த இன உணர்வாளர்கள் பங்கேற்றனர். அவர்களில், 120 பேரைக் காவல் துறையினர் தளைப்படுத்தி, திருச்சி நடுவண் சிறையில் அடைத்தார்கள். பல நாட்கள் சிறையிலிருந்த தோழர்கள் பின்னர் பிணை ஆணை பெற்று வெளியே வந்தனர்.
அதன்பிறகு, அவர்களுக்கு நீதிமன்றத்தில் நேர் நிற்பதற்கான அழைப்பாணை வரவே இல்லை. அவ்வாணையைத் தொடர்புடையவரிடம் கொடுத்து அதன் நகலில் காவல்துறையினர் அவரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். இக்கடமையைக் காவல்துறையினர் செய்யவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, அவர்கள் வாய்தா போட்டுக் கொண்டுள்ளார்கள் என்ற செய்தி இந்த 120 பேரில் 114 பேர்க்குத் தெரியாது. தஞ்சை நகரத்தைச் சேர்ந்த – அறிமுகமான ஆறு தோழர்களிடம் மட்டும் அழைப்பாணை கொடுத்து நீதிமன்றம் வரச்சொல்லி இருக்கிறார்கள், காவல்துறையினர்!
அந்த ஆறு பேர்க்கு மட்டும் வழக்கைப் பிரித்து நடத்தி இருக்கிறார்கள். அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. ஆனால் எஞ்சியுள்ள 114 பேர் பற்றிக் காவல்துறை துரும்பைக் கூட அசைக்கவில்லை. அவர்களுக்கும் தங்கள் பெயரில் தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்ற செய்தி தெரியாது.
ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அந்த 114 பேரை நீதிமன்றம் வந்து பிணை எடுத்துக் கொள்ளச் சொல்லி ஒவ்வொரு ஊராகச் சென்று காவல்துறையினர் நெருக்கடி கொடுத்தனர். அந்த 114 பேரில் சில தோழர்கள் காலமாகிவிட்டார்கள். எஞ்சியவர்கள் ஓசூர், கோவை, சென்னை, கடலூர், சிதம்பரம், திருச்சி, வேதாரணியம் எனப் பல ஊர்களிலிருந்தும், தஞ்சை மாவட்டத்திலிருந்தும் வந்து தஞ்சை நீதிமன்றத்தில் நேர்நின்று பிணை பெற்றார்கள். அந்நீதிமன்ற நீதிபதி இளவரசி அவர்கள், ஈவிரக்கமின்றி, தாங்களாக முன்வந்து நேர்நின்ற ஒவ்வொரு தோழர்க்கும் ரூபாய் ஆயிரம் தண்டத்தொகை விதித்தும், வாராவாரம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வந்து மேற்படி தஞ்சை நீதிமன்றத்தில் அந்த அம்மையாருக்கு முன் நேர்நின்று கையொப்பமிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
இக்கொடுமைகளை நம் தோழர்கள் பல மாதங்களாகச் செயல்படுத்தி வந்தார்கள். சிதம்பரம், ஓசூர் தோழர்கள் 30 வாரம் திங்கட்கிழமை தோறும் கையெழுத்துப் போட வேண்டும் என்று காலவரம்பும் விதித்தார். எடுத்தேன், கவிதழ்தேன் இயல்புள்ளவராக நீதிபதி இளவரசி செயல்பட்டார். நல்ல வேளையாக அந்த அம்மையாரை ஊர்மாற்றிவிட்டார்கள். ஆனால் அந்த ஊர்க்காரர்களுக்குக் “கெட்ட வேளை” போலும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் தஞ்சை வழக்கறிஞர் இரெ. சிவராசு அவர்கள் இலட்சியப் பற்றோடு இவ்வழக்கில் வாதாடி வந்தார். கட்டணமில்லாக் கட்சிப் பணியாகச் செய்கிறார்.
இவ்வாறு கொடுந்துயரத்தில் உழன்ற நம் தோழர்களுக்கு நேற்று (18.10.2023) விடுதலை வழங்கிவிட்டது சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு! இந்த நீதியை வழங்கியவர் நீதிபதி ஜி. இளங்கோவன் அவர்கள்.
குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளைப் பின்பற்றாமல், குற்றம் சாட்டப்பட்டவர்க்கு அழைப்பாணை கொடுக்காமல், பிடி ஆணை போட்டு நீதிமன்றம் கொண்டு வந்து அநீதி இழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மதுரை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மக்கள் உரிமை அக்கறையாளர் ஐயா அழகுமணி அவர்கள் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிக் கட்டணமின்றி வழக்கு நடத்தினார். ஐயா அவர்களுக்கும், அவர் அலுவலக இளம் வழக்கறிஞர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றி!
மதுரை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கைத் தொடுப்பதற்பான தொடர்புப் பணிகள் அனைத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் அவர்கள் முன்னெடுத்தார்.
மலையாள ஆலுக்காஸ் போன்ற வெளியார் நிறுவனங்களை வெளியேற்றி, தமிழ்நாட்டுத் தொழிலும், வணிகமும் தமிழர்களுக்கு என்ற இனப்பற்றோடு இப்போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் – சிறை சென்ற தோழர்கள் – 12 ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்கும் நோக்கோடு, வழக்கிற்கு வாரம் தோறும் இழுத்தடித்தாலும், இது தமிழினத் தற்காப்புத் தொண்டு, தமிழ்த்தேசிய இலட்சியப் பணி என்ற உணர்வோடு எதிர்கொண்ட நம் தோழர்கள் அனைவர்க்கும் நெஞ்சு நெகிழ்ந்த பாராட்டுகள்! வரலாற்றில் தடம் பதித்துள்ளீர்கள் தோழர்களே!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.