ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மாநிலத் தகுதி மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து கைவிலங்குடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்கள் கைது!

 நவம்பர் 1 - புதுச்சேரி விடுதலை நாளில்..

==================================




மாநிலத் தகுதி மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து கைவிலங்குடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்கள் கைது!

=================================


பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோன்மை அரசாட்சியிலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற நாளாக நவம்பர் 1ஆம் நாள், புதுச்சேரி மக்களாலும், அரசாலும் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு (2023) புதுச்சேரி விடுதலை நாளில் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்காமல், அரசியல் விடுதலை அளிக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் புதுச்சேரியில் கைவிலங்குகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களைக் காவல்துறை கைது செய்தது.


புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் - அண்ணா சிலை அருகில் இன்று (01.11.2023) காலை 11 மணியளவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி தெற்குக் கிளைச் செயலாளர் தோழர் ஞா. அசோக்ராசு, வடக்குக் கிளைச் செயலாளர் தோழர் தே. சத்தியமூர்த்தி, ஐவேலி செயலாளர் தோழர் குமார், தொரவி செயலாளர் தோழர் முருகன், பிரியா (மகளிர் ஆயம்) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில், புதுச்சேரியின் விடுதலைக்காகப் பாடுபட்ட விடுதலை வீரர்களுக்கு மலர் தூவி, வீரவணக்க முழக்கங்கள் எழுப்பி வணக்கம் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கைகளில் விலங்கு அணிந்து கொண்டு, புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி அளிக்காமல், அரசியல் விடுதலை வழங்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. விடுதலை நாளில் கைவிலங்குடன் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடதென, வாக்குவாதம் செய்ததுடன், கைவிலங்குகளை பாய்ந்து வந்து பிடுங்கிய காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து, அனைவரையும் கைது செய்து, ஒதியன்சாலை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.


உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர் ஐயா கோ. தமிழுலகன், புதுச்சேரி தன்னுரிமை இயக்கத் தலைவர் ஐயா தூ. சடகோபன், நாம் தமிழர் கட்சி - தொழிலாளர் நலச் சங்க செயலாளர் தோழர் த. இரமேசு, தமிழர் களம் புதுச்சேரி தலைவர் திரு. கோ. அழகர், SDPI புதுச்சேரி தலைவர் வழக்கறிஞர் ஜெ. பரகத்துல்லா, தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா சிவ.மு. இராசாராம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் திரு. ஆ.  பாவாடைராயன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் திரு. புதுவைத் தமிழ்நெஞ்சன், மக்கள் ஒற்றுமை இயக்க செயலாளர் திரு. கே. இளையபெருமாள், மனித உரிமைகள் கழக பொருளாளர் திரு. கே.எஸ். கமல், திரு. அன்புநிலவன் (கரிகால்சோழன் சிலம்பாட்டக் குழு, பாகூர்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்றனர். 25க்கும் மேற்பட்டோர் கைதாகினர். பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி முழக்கங்கள் எழுப்பி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.


நவம்பர் 1 - புதுச்சேரி விடுதலை நாளில், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி பெறுவதே, தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான முதல்படி என முழங்குவோம்! இந்திய அரசே, புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி அளித்திடு!


===============================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.