மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல்இடை நீக்கத்தைத் திரும்பப் பெறுக! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!
மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல்
இடை நீக்கத்தைத் திரும்பப் பெறுக!
தமிழ்நாடு அரசுக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்!
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் நடத்தும், தேநீர் கடைக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு விற்கப்பட்ட உணவுப் பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவக்குமாரும் அவரது மருமகனும், காவலருமான லோகேசுவரன் இரவி (32) ஆகிய இருவரும் சேர்ந்து முருகனைத் தாக்கி, மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து முருகனின் மனைவி பார்வதி, கடந்த 25.07.2025 அன்று, தனது கணவரைத் தாக்கிய மேற்படி சிவக்குமார், காவலர் லோகேசுவரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலாசாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
புகார் கொடுத்த 27 நாட்களுக்குப் பிறகு 20.08.2025 அன்று எஸ்.சி/எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, 08.09.2025 அன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் (வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்) இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது காஞ்சிபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சங்கர் கணேஷ் நேர் நின்றுள்ளார். அவர் இந்த வழக்கில், எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி சரியாக நடவடிக்கை எடுக்காததை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ப.உ. செம்மல் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் தாமதமாக வழக்குப்பதிவு செய்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யாதது, பாதிக்கப்பட்டோருக்கு நகல் வழங்காதது உள்ளிட்டவைகள் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 18-A(B) மற்றும் 10(2) ஆகியவற்றின்படி சட்ட மீறல்களாகும். இப்பிரிவுகளை டி.எஸ்.பி. சங்கர்கணேஷ் முறையாக செயல்படுத்தத் தவறியுள்ளார்.
இச்சட்டப் பிரிவு 4-இல் உள்ளபடி டி.எஸ்.பி செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செய்யாமல், கடமையில் இருந்து தவறியுள்ளார். இது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4(2)(G) கீழ் தண்டனைக்கு உரிய குற்றமாகும். இதனடிப்படையில் டி.எஸ்.பி.யை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி ப.உ. செம்மல் அவர்கள் ஆணையிட்டார்.
உடனடியாக ஒட்டுமொத்தக் காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி சதீசுக்குமார் அவர்கள், நீதிபதி ப.உ. செம்மல் பிறப்பித்த கைது ஆணையை இரத்து செய்து, டி.எஸ்.பியை விடுவித்து ஆணையிட்டார். மேலும், நீதிபதி ப.உ. செம்மல் மீது உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் ஆணையிட்டார்.
கீழமை நீதிமன்ற ஆணையின் மீது, உயர் நீதிமன்றம் தான் கருதுகின்ற ஆணையைப் பிறப்பிப்பது வழக்கமான நீதிமன்ற நடவடிக்கை. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி சதீசுக்குமார், அத்தோடு நிற்காமல் நீதிபதி ப.உ. செம்மல் மீது விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து, அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென ஆணையிட்டது, அதீதமானது!
விஜிலின்ஸ் பிரிவு அளித்த அறிக்கையின் மீது நீதிபதி ப.உ. செம்மலிடம் விளக்கம் ஏதும் கேட்காமலேயே அவரை, இடைநீக்கம் செய்து ஆணைப் பிறப்பித்திருக்கிறார். இது நீதிமன்ற விசாரணை முறைக்கும், இயற்கை நீதிக்கும் முரணானது!
நீதிபதி ப.உ. செம்மல், கடமை தவறுகிற காவல்துறையினர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் மீதும் சட்டப்படி செயல்பட்டவர். அவர் பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்பதே இச்சிக்கலை கவனித்து வரக்கூடிய அனைத்து மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாகும்.
ஏற்கெனவே, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தமிழ்நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரியவாறு செயல்படவில்லை என ஆதாரங்களின் அடிப்படையில் கண்டித்திருக்கிறது. பட்டியல் சமூகத்தவருக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு குறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், காவல்துறையில் சாதி வன்மம் ஊடுருவும்போது, அது சமூகத்தில் கூடுதல் தீமையை ஏற்படுத்தும். இதைக் கவனத்தில் கொண்டால், நீதிபதி ப.உ. செம்மலின் ஆணையின் பின்னால் இருக்கிற ஞாயம் புரியும்!
அந்த ஆணையை இரத்து செய்கிற அதிகாரம், உயர் நீதிமன்றத்திற்கு உண்டு! ஆனால், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ப.உ. செம்மல் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வது நீதித்துறையில் நேர்மை ஒட்டிக் கொண்டிருப்பதையே இல்லாமல் செய்து விடும்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இச்சிக்கலில் தலையிட்டு, நீதிபதி ப.உ. செம்மல் மீது விதிக்கப்பட்டுள்ள இடைநீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
Leave a Comment