“திராவிடப்” பாசத்தால் தமிழ்நாட்டு எல்லையை கேரளாவிடம் பறிகொடுக்கும் தி.மு.க. அரசு! தமிழ்த்தேசியப்பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
"திராவிடப்" பாசத்தால் தமிழ்நாட்டு எல்லையை
கேரளாவிடம் பறிகொடுக்கும் தி.மு.க. அரசு!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் உள்ள தாளூரில், கேரள அரசு மலையாள மொழியில் அத்துமீறி அறிவிப்புப் பலகை வைத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் எல்லையைத் தங்கள் எல்லையென அத்துமீறி கேரள அரசு அறிவிப்புப் பலகை வைப்பதை, "திராவிட"ப் பாசத்தோடு தி.மு.க. தலைமையிலான தமிழ்நாட்டரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகமிக ஆபத்தானது.
கடந்த 2017ஆம் ஆண்டு, கேரள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தமிழ்நாட்டின் தாளூர் எல்லைக்குள் 200 மீட்டர் தூரம் அத்துமீறி நுழைந்து, அவ்விடம் வரை தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, மலையாள மொழியில் அறிவிப்புப் பலகையை வைத்தது. தமிழ்நாட்டு எல்லையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அப்பலகையை அப்போது நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து அகற்றியதோடு, தமிழ்நாட்டின் எல்லைய காக்க எதிர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
அப்போது மக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்ட மலையாளப் பெயர்ப் பலகை, நேற்று (05.03.2026) மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பெயர்ப் பலகையை உடைத்து எறிந்துவிட்டு, கேரள அரசு மலையாள அறிவிப்புப் பலகையை அத்துமீறி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மறு்றும் பொதுமக்கள் நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கேரள அரசு, அங்கு கேரள காவல்துறையினரைக் குவித்து, தமிழ்நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நடப்பட்ட அறிவிப்புப் பலகையைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு எல்லைப் பலகையை காக்கத் தவறிய தமிழ்நாடு காவல்துறையோ, எல்லை மீட்புக்காகப் போராடும் நாம் தமிழர் கட்சித் தோழர்களையும், பொது மக்களையும் தடுத்து நிறுத்துகின்றது. தமிழ்நாடு எல்லையைப் பாதுகாக்கத் திறனற்ற தி.மு.க. அரசு, போராடும் தமிழ் மக்களையே அடக்க முயல்கிறது.
ஏற்கெனவே, தமிழ்நாட்டு எல்லையில் உள்ள பல வீடுகளுக்கு கேரள அரசு, தானே முன்வந்து அத்துமீறி மின் இணைப்பு கொடுத்து வருகிறது. மேலும் தாளூர், நம்பியார்குன்னு உள்ளிட்டு தமிழ்நாட்டு எல்லைக்குள் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி கடைகள் தாராளமாக செயல்படுகன்றன. கேரளாவிலிருந்து நாடுகாணி, தாளூர், பந்தலூர், தேவர்சோலை உள்ளிட்ட தமிழ்நாட்டுப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளும், இறைச்சிக் கழிவுகளும் கேரளாவிலிருந்து கொண்டு வந்து கொட்டப்படுவதும், அதன் காரணமாக தமிழர்களுக்கு உடல்நலக் கோளாறுகளும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதை தமிழ்நாடு அரசு கண்டு கொள்வதில்லை!
அதேபோல், பல தமிழ்நாட்டுப் பகுதிளை மின்னிலக்க அளவீடு (டிஜிட்டல் சர்வே) என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியைக் கேரள எல்லைகளாகக் குறிப்பிட்டு அத்துமீறி எல்லைக்கல் நிறுவியபோதும் தமிழ்நாட்டரசு கண்டிக்கவில்லை!
தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டின் எல்லைகளைத் திருட்டுத் தனமாக ஆக்கிரமிக்க முயலும் கேரள கம்யூனிஸ்ட்டு அரசு, சர்வதேசியம் – கம்யூனிசம் - அனைத்துலகப் பாட்டாளிகள் ஒற்றுமை என்றெல்லாம் பேசிக் கொள்வது வெட்கக்கேடானது. கேரள அரசின் இந்த மலையாள இனவெறிப் பாசிசத்தைக் கண்டிக்காமல் அமைதி காக்கும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்டுகளின் செயல் அவமானகரமானது!
கூடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, தேனி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் "KF" என்ற கேரள வனத்துறை எல்லைக் கல்லை, தமிழ்நாட்டு எல்லைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, தமிழர்களின் கண்ணகிக் கோயிலை கேரள அரசு சொந்தம் கொண்டாடுகிறது. கேரள அரசு நடத்தி வரும் டிஜிட்டல் சர்வேயை உடனே நிறுத்தி, தமிழ்நாடு – கேரள எல்லையை தமிழ்நாடு அரசு முழுவதுமாக அளக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்த நேரத்திலாவது, சிக்கலின் தீவிரத்தை உணர்ந்து, கேரள – தமிழ்நாடு எல்லையை முழுமையாக அளப்பதுடன், உடனடியாக நீலகிரி மாவட்டம் தாளூரில் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் கேரள அரசு அத்துமீறி வைத்துள்ள எல்லைப் பலகையை அகற்றி, உடைத்து எறியப்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பலகையை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும், இதுபோன்ற எல்லை தாண்டிய அத்துமீறல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க – தமிழ்நாட்டு எல்லைகளைக் காக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================
Leave a Comment