ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முல்லை பெரியாறு - அ.ஆனந்தன்

முல்லை பெரியாறு :
போராட்ட அனுபவமும் புதிய எழுச்சியும்

அ.ஆனந்தன்
 
              முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க உழவர்களையும் உணர்வாளர்களையும் திரட்டிப் பேராடுவது என்று தமிழ்த் தேசிய முன்னனி மதுரை மாவட்ட அமைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்குத் தமிழகம் தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று 27-02-2006 அன்று தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பைக் கேரள அரசும் அனைத்துக்கட்சிகளும் எதிர்த்தன.
            
             சி.பி.எம் தலைமையிலான அணியும் காங்கிரஸ் தலைமையிலான அணியும் மே மாதம் நடைபெற இருந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரும் புதிருமாகப் போட்டியிட்டாலும் கூட இரு அணிகளும் ஒருங்கிணைந்து மார்ச் மாதம் சட்டப்பேரவையைக் கூட்டி உச்சநீதிமன்றத் தீர்ப்பை முடமாக்கும் நோக்கத்தோடு முல்லை பெரியாறு அணையையும் உள்ளடக்கிய 'கேரள நீர்த் தேக்கப் பாதுகாப்புச் சட்டம்" என்ற பெயரில் மசோதா நிறைவேற்றினார்கள்.
            
              பாதுகாப்புச் சிக்கல்களைக் காரணம் காட்டி கேரள எல்லைக்குள் உள்ள எந்த நீர்த் தேக்கத்தையும் செயல்படாமல் மூடிவிடக் கூடிய அதிகாரத்தை அச்சட்டம் கேரள அரசுக்கு வழங்கியது.
 இந்நிலையில் இம்மசோதாவிற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டாம் என்று கோரி கேரள ஆளுநருக்கும் அச்சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கும் கடிதங்கள் அனுப்ப கிராமம் கிராமமாக மக்களிடம் அஞ்சலட்டைகளில் கையெழுத்து வாங்குவதென்று தமிழ்த் தேசிய முன்னனி முடிவெடுத்தது. தமிழ்த் தேசிய முன்னனியின் மதுரை அமைப்பாளரான என்( அ.ஆனந்தன்)  தலைமையில் தோழர்கள் கரிகாலன், கதிர்நிலவன், மு.கா.வையவன், கண்ணன், பொள்ளாச்சி வெ.பாரதி, மு.ப.குமரன், ந.சி.பார்த்தசாரதி, பே.மேரி, அருணா, ரெ.இராசு, தஞ்சை தோழர்கள் முருகானந்தம், சதீசுகுமார், அண்ணாதுரை, இராமசாமி, சென்னை தோழர்கள் சிவ காளிதாசன், சோழநாடன், நாத்திகன் கேசவன், பொறியாளர்கள் செந்தில்குமார், அருள்ராசு, பொள்ளாச்சி தோழர்கள் பரணி, சேது, திலீபன், தம்பி ஆகியோர் கையெழுத்து இயக்கத்திலும் நிதி திரட்டலிலும் ஆர்வமாகப் பங்கெடுத்தனர்.
 
             மதுரை மாவட்டம் கோட்டநத்தம்பட்டி, வெள்ளளுர், மேலவலசை, தனியாமங்கலம், வாடிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, நீரேத்தான், மேட்டுநீரேத்தான், கட்டக்குளம், சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், குருவித்துறை, மேலநாச்சிகுளம், பொம்மன்பட்டி, கீழநாச்சிகுளம், கருப்பட்டி, தேனூர், திருவேடகம், இரும்பாடி, திருவாலவாயநல்லூர், நெடுங்குளம், ராயபுரம், நகிரி ஆகிய ஊர்களிலுள்ள உழவர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஜயாயிரத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலட்டைகளில் தங்கள் முகவரியுடன் கையொப்பமிட்டனர். இவ்வஞ்சலட்டைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் 13-04-2006 மதுரை தல்லாகுளம் அஞ்சல் நிலையத்தில் போடப்பட்டன. 
 
கூட்டங்கள்: கிராமங்களில் கையெழுத்து வாங்கும் போது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கையெழுத்து போட்டனர். பல கிராமங்களில் ஊர் பொது மந்தையில் குழுவினரை அமர வைத்து கூட்டம் கூட்டமாக வந்து கையெழுத்து போட்டனர். 
 
               சோழவந்தானில் 21-04-2006 மாலை தமிழ்த் தேசிய முன்னனி சார்பில் விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. தோழர்கள் பெ.மணியரசன், தியாகு, கே.எம்.அப்பாஸ், சூ.இரத்தினசாமி, ஆனந்தன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
 
              இந்நிகழ்வுகளை ஆய்வு செய்ய மதுரை தமிழ்த் தேசிய முன்னனி கூட்டம் தோழர்கள் பெ.மணியரசன், தியாகு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதில் அடுத்த கட்டமாக 26-08-2006 அன்று மதுரையில் முல்லை பெரியாறு அணை உரிமை மீட்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 மாநாட்டு விளக்கத் தெருமுனைக் கூட்டம் 7-08-2006 அன்று திருவாலநாயநல்லூரில் நடந்தது. தோழர் தியாகு விளக்கவுரையாற்றினார். ஆண்டிப்பட்டி பங்களாவில் 19-08-2006 அன்று மாநாடு குறித்து உழவர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய பேரவைக் கூட்டம் நடந்தது.
மாநாடு :  மதுரை ஒபுலா படித்துறை அருகில் 26-08-2006 சனி மாலை 6 மணிக்கு முல்லை பெரியாறு அணை உரிமை மீட்பு மாநாடு தொடங்கியது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். முல்லை பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குக் படத்தை ஒய்வு பெற்ற பொறியாளர் தி.கிருஷ்ணசாமி திறந்து வைத்தார். மாநாட்டுத் தீர்மானங்களை தோழர் கி.வெங்கட்ராமன் முன்மொழிந்தார். தோழர் தியாகு எழுதிய 'முல்லை பெரியாறு உரிமை மீட்க இதுவே தக்க தருணம்" என்ற குறுநூல் வெளியிடப்பட்டது. உழவர் அமைப்புத் தலைவர்கள். திருவாளர்கள் ம.புத்திசிகாமணி, கே.எம்.அப்பாஸ், சூ.இரத்தினசாமி, கருணைதாசன், தோழர்கள் பெ.மணியரசன், தியாகு முதலானோர் பேசினர். கிராமங்களில் இருந்து உழவர்கள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர். தஞ்சைப் பகுதியிலிருந்து உழவர்களும் உணர்வாளர்களும் வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர். தமிழ்த் தேசிய முன்னனி தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். அம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 இம்மாநாடு வைகை பாசனப் பகுதி உழவர்களிடமும் மக்களிடமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மற்றமற்ற அரசியல் கட்சிகளும் இதில் தலையிட இம்மாநாடு தூண்டுகோலாய் அமைந்தது.
 இம்மாநாட்டில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த விடாமல் எதிர்க்கும் மலையாள இனவெறி பிடித்த கேரள அரசைக் கண்டித்தும், பதின்மூன்று வடிகால் மதகுகளையும் உடனடியாக இறக்கி 142 அடிவரை தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிடக் கோரியும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய அரசை கண்டித்தும், அரசமைப்புச்சட்ட விதி 355-ன் கீழ் கேரள அரசுக்கு உச்சநீதி மன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு இந்திய அரசு கட்டளைத் தாக்கீது அனுப்பிடக் கோரியும், சிக்கலுக்கத் தீர்வு காணப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக பரமக்குடியிலிருந்து மாபெரும் மக்கள் பேரணி நடைப்பயணமாகப் புறப்பட்டு முல்லை பெரியாறு அணையை அடைந்து பதின்மூன்று வடிகால் மதகுகளை இறக்கி அணையை மூடுவது என்றும், சிற்றணையில் செய்ய வேண்டிய சீரமைப்பு பணிகளைச் செய்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 18-09-2006 அன்று மதுரையில் ஆர்பாட்டம் நடத்துவது என்றும் மாநாட்டில் தீர்மானிக்கபட்டது.

ஆர்ப்பாட்டம் : நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தை விளக்கி அலங்காநல்லூர் அஜந்தா திரையரங்கில் 9-9-2006 அன்று நடந்த கூட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். தமிழ்த் தேசிய முன்னனி தோழர்களும் உழவர் அமைப்பு தோழர்களும் உரையாற்றினர்.
 மதுரை தல்லாகுளம் தந்தி அலுவலகம் அருகில் 18-09-2006 அன்று நடந்த ஆர்பாட்டத்திற்கு தோழர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். தோழர்கள் தியாகு, ஆனந்தன் உழவர் அமைப்பு தலைவர்கள் சீமான்(எ)மீனாட்சி சுந்தரம், ம.புத்திசிகாமணி, தெ.காசிநாதன்(தமிழக உழவர் முன்னனி), சூ.இரத்தினசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். முந்நூறுக்கும் மேற்பட்ட உழவர்கள் கலந்து கொண்டனர்.

அணையில் : தமிழ்த் தேசிய முன்னனி தோழர்கள் பெ.மணியரசன், தியாகு, அ.ஆனந்தன், ரெ.இராசு, கரிகாலன், கதிர்நிலவன், இருளாண்டி மு.கா.வையவன், மு.பா.குமரன், சோழநாடன் ஆகியோர் 06-11-2006 அன்று முல்லை பெரியாறு அணைக்கு நேரில் சென்று முதன்மை அணை, சிற்றணை, மண்ணணை, வடிகால் பகுதி ஆகியவற்றைப் பார்த்தனர். அணை புத்தம் புதிது போல் வலுவூட்டப்பட்டுள்ள உண்மையைக் கண்டறிந்தனர். கேரள அரசு கிளப்பும் புரளி எந்த அளவு இன வெறி பாசிசம் என்பதையும் உணர்ந்து கொண்டனர். அந்த நாளில் அணை நீர்மட்டம் 134 அடியைத் தாண்டியிருந்தது. அடுத்த சில நாள்களில் அது 136 அடியை தாண்டும். அப்படித் தாண்டினால் அத்தண்ணீரைத் தேக்கிட வடிகால் மதகுகளை இறக்கும்படி தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவில்லை. வாய்பிளந்து மரண ஒலமிடுவது போல் கிடந்தன வடிகால் மதகுகள். 14-11-2006 முதல் பதினைந்து நாட்கள் வரை 136 அடிக்கு மேல் 139 அடிவரை தண்ணீர் நிரம்பி அந்த 3 அடி நீரும் அப்படியேக் கடலில் கலந்து வீணாணது.

கொடும்பாவி எரிப்பு : தமிழக அரசைப் போக்கிரி வாடகைதாரர் என்றும் முல்லை பெரியாறு அணையை முற்றிலுமாக கைவிட்டுவிட்டு தமிழக அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கொக்கரித்த கேரள அரசின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் அச்சுதானந்தன் கொடும்பாவியை த.தே.பொ.க தோழர்கள் 24-11-2006 அன்று தஞ்சை, செங்கிப்படடி, திருத்துறைப்பூண்டி, சிதம்பரம் ஆகிய இடங்களில் எரித்தனர். ஒசூரில் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 மதுரையில் தமிழ்த் தேசிய முன்னனி சார்பில் 25-11-2006 முற்பகல் அச்சுதானந்தன் கொடும்பாவிக்கு 142 செருப்படிச் சிறப்பு செய்தனர்.

பொருளாதாரத் தடை: கேரளம் அரிசி, பருப்பு, பால், சர்க்கரை, இறைச்சி வகையறாக்கள், முட்டை, மின்சாரம், கட்டடத்திற்குத் தேவையான மணல்,கருங்கல் ஆகியவற்றிற்குத் தமிழ்நாட்டையே சார்ந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட ஒரு நாள் அடையாள சாலை மறியல் கம்பம், கோவை- பாலக்காடு சாலை, செங்கோட்டை ஆகிய இடங்களில் தமிழ்த் தேசிய அமைப்புகள், உழவர் அமைப்புகள் மற்றும் சனநாயக இயக்கங்கள் சார்பில்; 4-12-2006 அன்று நடந்தது.
 கம்பம் மறியலுக்;கு உழவர்களைத் திரட்டுவதற்காக 30-11-2006,1-12-2006 ஆகிய நாட்களில் பெ.மணியரசன், அ.ஆனந்தன், சங்கராபுரம் தேவராசன், இராயப்பன்பட்டி குழந்தை, பார்த்தசாரதி, ரெ.இராசு, கரிகாலன், கதிர்நிலவன் ஆகியோர் தேவாரம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், தேனி ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மேலூர், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சோழவந்தான் நகரங்களைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சென்று உழவர்களைச் சந்தித்து சாலை மறியலுக்கு அழைத்தனர்.
  திருவாளர்கள் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், தியாகு, சீமான், புத்திசிகாமணி, கே.எம்.அப்பாஸ், இரத்தினசாமி, பசீர் முகம்மது, ஜான் மோசஸ், நகைமுகன், மெல்கியோர், கட்டகுளம் இராமசாமி, நிலவழகன், இளங்கோ, பொன்.காட்சி கண்ணண், தமிழ்வாணன், பார்த்தசாரதி, தேவராசன், ரமணண் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமையில் கம்பத்திலும், கோவை இராமகிருட்டிணன், பொழிலன், ச.அர.மணிபாரதி, அரங்க.குணசேகரன் மற்றும் சனநாயக அமைப்புகளின் தலைவர்கள் தலைமையில் கோவையிலும், குறிஞ்சி கபிலன், துரை.அரிமா, மு.தமிழ்மணி ஆகியோர் தலைமையி;ல் செங்கோட்டையிலும் சாலை மறியல் செய்தனர்.
 அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
 
             அதே நாளில் அச்சுதானந்தன் தூண்டுதலில் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஐந்து ஊராட்சிகளைச் சேர்ந்த மலையாளிகள் சுமார் 3000 பேர் ஊராட்சிமன்றத் தலைவர்கள் தலைமையில் முல்லை பெரியாறு அணையை உடைக்க மண்வெட்டி கடப்பாரையுடன் ஊர்வலமாக அணையை நோக்கி வந்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் சமரசம் பேசி திருப்பி அனுப்பிவிட்ட நாடகமும் நடந்தது. ஆனால் அணையை உடைக்கும் திட்டத்தை அச்சுதானந்தனும் மலையாளிகளும் கைவிடவில்லை. அண்மையில் முல்லை பெரியாறு முதன்மை அணையின் கைப்பிடி சுவரை மலையாளிகள் உடைத்துவிட்டனர். தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரளத்தைச் சேர்ந்த குமுளி காவல் நிலையத்தில் குற்றமனு கொடுத்துள்ளனர். இதுவரை (6-1-2007) யாரும் கைது செய்யப்படவில்லை. 
             
                முல்லை பெரியாறு அணை உரிமை பறிபோவதைக் கண்டு ஐந்து மாவட்ட மக்கள் மட்டுமல்ல அனைத்துத் தமிழ் நாட்டு மக்களும் ஆத்திரங்கொண்டுள்ளனர். அடுத்த கட்ட போராட்டத்திறகுத் திட்டமிடுவோம். தமிழ்த் தேசிய முன்னனி வருங்காலப் போராட்டங்களிலும் முன்ணணியாகச் செயல்படும்.
 
முல்லை பெரியாறு அணை முழுமையும் தமிழர்க்கே !
மூணாறு தேவிகுளம் பீர்மேடும் தமிழர்க்கே !

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.